

ஒரு காலத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டாலே, நகரங்களின் ரோட்டோரங்களிலும் சந்தை தெருக்களிலும் திடீர் வாழ்த்து அட்டை கடைகள் முளைத்தெழும். வண்ணக் காகிதங்களில் வரையப்பட்ட பானை, கரும்பு, மாடுகள், கொலுக் காட்சிகள் அனைத்தும் சேர்ந்து முழுப் பண்டிகையையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். அந்த அட்டைகளைப் பார்த்தாலே பொங்கல் வந்துவிட்டது என்ற உற்சாகம் மனதெங்கும் பரவும்.
வாழ்த்து அட்டைகள் வாங்குவது மட்டுமல்ல, வீட்டிலேயே அவற்றை உருவாக்குவது தனி மகிழ்ச்சி. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் குடும்பமே ஒன்று சேர்ந்து அந்தப் பணியில் இறங்குவர். பென்சில்களை அழகாகச் சீவும்போது விழும் சுருள்கள், பல வண்ண காகித அட்டைகள், உலர்ந்த பூக்களின் இதழ்கள் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சிறிய கலைப் பணிமனை போல வீட்டை மாற்றிவிடும்.
அட்டைகளில் பெயர் எழுதுவது அழகான கையெழுத்து கொண்டவர்களின் பொறுப்பு. முகவரி எழுதுவது, அஞ்சல் தலை ஒட்டுவது, போஸ்ட் ஆபிஸில் சேர்ப்பது என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி பணி. இவ்வாறு வேலையை பங்கிட்டுச் செய்வதால் கிடைத்த ஆனந்தம், இன்று எந்த ‘டிஜிட்டல்’ வசதியாலும் ஈடு செய்ய முடியாத ஒன்று.
ஒரே மாதிரியான வாழ்த்து அட்டையை எல்லோருக்கும் அனுப்புவது அன்றைய வழக்கம் அல்ல. ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்களின் உறவு நெருக்கத்திற்கேற்ப தனிப்பட்ட வடிவில் அட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த வாழ்த்து அட்டைகள் வெறும் காகிதங்கள் அல்ல; அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அக்கா, அண்ணா எனப் பந்தங்களைக் கட்டியணைக்கும் பாலங்களாகவே இருந்தன.
அன்று தொலைபேசி, மொபைல், மின்னஞ்சல் போன்ற உடனடி தொடர்பு வசதிகள் இல்லாத காலம். வாழ்த்து அட்டை அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு, வரும் பதில் செய்தி இருக்கிறதே, ‘நலம். நலமறிய ஆவல். பொங்கல் வாழ்த்து கிடைத்தது. நன்றி.’ அந்த ஒரு வரி, பொங்கலின் இனிப்பை விட அதிகமாக மனதை இனிப்பாக்கும்.
ஆனால், இன்றைய நவீன யுகத்தில் பொங்கல் மட்டுமல்ல; பண்டிகை, தினசரி வாழ்க்கை, உறவுகள் அனைத்தும் ஒரே வேகத்தில் ஓடுகின்றன. காலை பத்து மணிக்கு எழுந்து, WhatsAppல் ஒரு Greetingஐ download செய்து, அனைவருக்கும் forward செய்தால் போதும், பண்டிகை முடிந்ததாக எண்ணப்படுகிறது. பொங்கலோ, தீபாவளியோ, ‘போன் பார்ப்பதும் தூங்குவதும்தான் என் கடன்’ என்ற நிலை உருவாகி விட்டது.
ஒரு காலத்தில் வாழ்த்து அட்டையை தேர்வு செய்து அனுப்பும் பணி, பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே தொடங்கும். குழந்தைகள் உறவுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்; பெரியோர்கள் பட்சணங்களைப் பகிர்ந்து கொண்டு, அண்டை அயலாரையும் சொந்தங்களையும் மேலும் நெருக்கமாக்கினர். அந்தப் பரிமாற்றங்களில்தான் சமூகத்தின் உயிரோட்டம் துடித்தது.
இந்தப் புத்தாண்டிலாவது, அந்த மறைந்துவரும் பழக்கத்தை மீண்டும் உயிர்ப்பிப்போமே. ஒரு வாழ்த்து அட்டை - சிறிய காகிதம்தான். ஆனால், அதில் அடங்கியிருப்பது மனித உறவுகளின் மிகப் பெரிய அர்த்தம்.