

உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அந்த வகையில் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. பசிக்கும்போது பயம் இல்லாமல், பிடித்த உணவை போதுமான அளவு நிதானமாக மென்று தரையில் அமர்ந்து, கை விரல்களால் சாப்பிடுங்கள். செரிமானத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உண்டு என்பதால் இலகுவாக நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகிவிடும்.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விட்டு இயற்கை உணவுகள் மற்றும் பழங்களை தேவையான அளவு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
3. குழந்தைகள் மட்டும்தான் விளையாட வேண்டும் என்று நினைக்காமல் உங்களுக்குப் பிடித்த விளையாட்டை பிடித்தவர்களுடன் தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
4. தினமும் 10 நிமிடங்கள் தனிமையில் அமர்ந்து சிந்திப்பதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதிற்குள் பிரார்த்தனை செய்வது மனோ பலத்தை அதிகரிக்கும்.
5. தினமும் நல்ல புத்தகங்களைப் படித்து பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும்போது நம்மை அறியாமலேயே மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.
6. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்துவதோடு தேவையற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்.
7. தினமும் இரவு 10 மணிக்கு முன் தூங்கி காலை 5 மணிக்கு முன் எழுவதோடு, ஏழு மணி நேர தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். அதோடு, 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலும் மனமும் அமைதி அடையும்.
8. உங்களுக்குத் தேவையானது உங்களிடமே உள்ளது என்பதால் உங்களை ஒருபோதும் மற்றவருடன் ஒப்பிடாமல் நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். மேலும், அவர்கள் பயணிக்கும் பாதை வேறு என்பதால் அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது கால விரயமே.
9. அளவுக்கு மீறி கடுமையாக உழைக்காமல் முடிந்த அளவு வேலை செய்வதோடு, அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
10. மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காமலும், உங்களைப் பற்றி புறம் பேசுவதை காது கொடுத்து கேட்காமலும் இருங்கள்.
11. மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்க கடந்த காலத்தை மறந்து விடுவதோடு, நிகழ்காலத்தில் வாழ்ந்து, யாரையும் வெறுக்காமல் இருங்கள். ஏனெனில், வெறுப்பு நம்மை பாதிக்கும்.
12. சிக்கல்களும், பிரச்னைகளும் நமக்கு பாடங்கள் என்பதால் அவற்றை திறம்பட தீர்க்க முயற்சி செய்யுங்கள். மேலும், முடியாது என சொல்ல வேண்டிய இடங்களில் தயங்காமல் கூறுவது பிரச்னையை ஆரம்பத்திலேயே தீர்த்து வைத்து விடும்.
13. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருக்கும் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பில் இருப்பது மன அமைதியையும் அன்பையும் மேம்படுத்த உதவும்.
14. மன பாரம் நீங்க மற்றவர்களை மன்னிப்பதோடு, தேவையான இடத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.
15. மற்றவர்கள் எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது அவர்களின் வேலையல்ல என்பதால் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள்.
16. உங்களுக்கு சரியென்று படுவதை உடனே செய்வதோடு, நிறைவேறிய தேவைகளுக்கு இறைவனுக்கு நன்றி கூறுங்கள். நிறைவேறாத தேவைகளுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
17. அவ்வப்போது உங்களிடம் இருக்கும் நல்லனவற்றை நினைத்து பெருமிதம் கொள்வது ஆழ்மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை தேடி அனுபவித்துக்கொண்டே இருங்கள்.
18. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியை கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுவது, கவலையும் பிரச்னையான சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என்பதில் மட்டும் திடமாக இருங்கள்.
மேற்கூறிய விஷயங்களை ஒருவர் கடைப்பிடிக்கும்போது அவருடைய வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.