பொங்கல் காப்புக்கட்டில் இத்தனை மருத்துவ குணங்களா?
மாட்டுப் பொங்கல் ஏன் மாலை நேரத்தில் வைக்கப்படுகிறது தெரியுமா? பொதுவாகவே, பொங்கலுக்கு உரிய நேரம் காலை பொழுது என்றால் மாட்டுப் பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைப்பொழுதுதான். கண்ணன் காலையில் பசுக்களை பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்று விட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்புவது வழக்கம். அதனால்தான் மாட்டுப்பொங்கலை காலையில் கொண்டாடாமல் மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது.
மாட்டுக் கொட்டிலின் முன்பு பொங்கல் இட்டு படைப்பதும், மாடுகளை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துவதும், பொங்கல் பொங்கும் பொழுது ‘பட்டி பெருக பால் பானை பொங்க’ என்று சொல்லி குலவை இடுவதும் வழக்கம்.
வீட்டின் கூரையில் காப்பு கட்டுதல்: பொங்கல் விழாவின் தொடக்கத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். காப்பு கட்டுவதன் நோக்கம் இன்று பலருக்கும் தெரிவதில்லை. கிராமப்புறங்களில் அதன் மகத்துவத்தை அறிந்துள்ளனர். ஆனால், நகரங்களிலோ ஆயுத பூஜைக்கு பொரி, பழங்கள் வாங்குவது போல் பொங்கல் அன்று கூரைப்பூ வாங்கி விடுகின்றனர். கூரைப்பூவில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு குணங்கள் உண்டு.
ஆறு வகையான கூரைப்பூக்கள்: மாவிலை காற்றை சுத்தப்படுத்துவதற்கும், வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டதாகவும், கொசுக்களை தடுக்கவும், விரட்டவும் பயன்படும். கூரைப்பூ எனப்படும் கண்ணுப்பிள்ளை பூ பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கவும், விஷ முறிவுக்கும் உதவும். தும்பைப்பூ செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளைப் போக்கும். பிரண்டை வயிற்றுப்புண்ணை போக்கும்; செரிமானத்திற்கு ஏற்றது.
ஆவாரைப் பூவோ, ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ’ என்ற முதுமொழிக்கேற்ப பல நோய்களைத் தடுக்கும். இந்த ஆறு பொருட்களையும் மஞ்சள் துணியில் கட்டி வீட்டின் முன் தொங்கவிட ஆரோக்கியம், பாதுகாப்பு, மங்கலம் கிடைக்கும். கிராமங்களில் இன்றும் அம்மை, மஞ்சள் காமாலை, அக்கி போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க கூரைப்பூக்களை பயன்படுத்தி வருகின்றனர்.
உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் பண்டிகை:
ஜப்பான் நாட்டில் குதிரைக்கு பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது.
'கவான்ஸ்கர்' என்ற பெயரில் ஆப்பிரிக்க மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர்.
கனடா, அமெரிக்காவில் இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இஸ்ரேலியர்கள் 'சுக்கோத்' என்ற பெயரில் 7 நாட்கள் இத்திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
'லோரித் திருநாள்' என்ற பெயரில் பஞ்சாபியில் யாகங்கள் நடத்தி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கிரேக்க நாட்டில் 'ஸ்மோஸ் போரியா' என்ற பெயரில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
'பிள்ளையார் பொங்கல்' என இலங்கையில் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது.

