

ஒரு இடத்தில் குப்பையை எரிப்பதற்காக நெருப்பை மூட்டியோ அல்லது விறகு மூட்டி சமைத்து கொண்டிருந்தாலோ அல்லது கொசுவை விரட்டுவதற்காக நெருப்பை எரித்து கொண்டிருந்தாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருக்கும்போது பக்கத்தில் ஒரு பஞ்சு மூட்டையை வைத்தால் என்னவாகும்? பஞ்சில் நெருப்பானது எளிதில் பிடித்துக்கொள்ளும். அதே சமயத்தில் நெருப்பும் காற்றில் வேகமாக இங்கும் அங்கும் பரவும்.
பஞ்சு மூட்டையில் பரவியது மட்டும் இல்லாமல், அந்த நெருப்பு எளிதில் பற்றிக் கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொருட்களையும் வீடுகளையும் சேதமாக்கி விடும். ஆகவே, தவறு நம்முடையது தான். தெரியாமல் கூட பஞ்சு மூட்டையை நெருப்பின் பக்கத்தில் வைக்கக் கூடாது.
சரி, இந்த தத்துவத்தின் மூலமாக வாழ்க்கையில் (life lesson's philosophy) நமக்கு உணர்த்தப்படும் கருத்து என்ன?
அதாவது ஒருவர் ஏதாவது ஒரு சம்பவத்தின் காரணமாக பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவரை கொண்டு போய் மது கடைக்கு அருகிலேயோ அல்லது கெட்ட வழியை கடைபிடிக்கும் நபர்களிடமோ விட்டால் என்னவாகும்?
ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அந்த மனிதரின் மனதை மதுக்கடையும் சரி கெட்ட நபர்களும் சரி சுலபமாக தன் பக்கம் இழுத்து விடுவார்கள். அப்படி இழுக்கும்போது அந்த மனிதரும் கெட்டுப்போய் அவரின் குடும்பமும் சின்னா பின்னமாகிவிடும்.
அதை போலத்தான் டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகளையும் நாம் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். தெரியாமல் கூட சகவாசம் சரியில்லை என்றால் அந்தக் குழந்தையின் வாழ்க்கையே சின்னா பின்னமாகிவிடும். பெற்றோர்களாகிய நாம் தான் அவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சரியான நண்பனை தேர்ந்தெடுக்கவும் உதவி புரியவேண்டும்.
ஒரு மனிதருக்கு வாழ்க்கையின் எந்த நிலையிலும் அவருடைய சேர்க்கை என்பது மிக மிக அவசியம். சேர்க்கை சரியில்லை என்றால் எந்த வயதிலும் மனிதன் அழிந்துவிடலாம். சேர வேண்டியவர்களோடு சேர்ந்தால்தான் நாமும் நன்றாக இருப்போம், அவர்களும் நலமாக இருப்பார்கள். இதில் ஒருவர் சரியில்லை என்றால் கூட, இரண்டு பேரின் வாழ்க்கையும் கெட்டு போய் விடும். நாம் பலவீனமாக இருக்கும் சூழ்நிலையில் நிதானத்தோடு யாரோடு இணைந்தால் நம் நிலைமை சீராகும், நம் பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பதை பற்றி எல்லாம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
நம்மோட மனம் பலவீனமாக இருக்கும் சமயத்தில் தான் நாம் தேர்ந்தெடுக்கும் சேர்க்கை சில சமயங்களில் தவறான சேர்க்கையாக மாறிவிடும். சில பேர் வேண்டுமென்றே நம்மை கொண்டு போய் தவறான சேர்க்கையோடு சேர்த்து வைப்பதற்காகவும் முயற்சி செய்யலாம். அந்த வலையில் விழுந்து விடாமல் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
சரியான நண்பனை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழுங்கள்!