

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மின்சார கட்டணம் உயர்ந்து வருவதால், மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். ஒரு சில செயல்களை பின்பற்றினால், ஒவ்வொரு மாதமும் நாம் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தின் தேவையை குறைத்து, அதன் கட்டணத்தையும் குறைக்க முடியும். மின்சார சிக்கனம் என்பது நமது பொருளாதாரத்தை மிச்சப்படுத்தும் என்பது மட்டுமல்லாது சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் என்பதை நம் மனதில் கொள்ளவேண்டும்.
மின் சிக்கனத்திற்கான கடைபிடிக்க வேண்டிய 7 விதிகள்:
1. ஏர் கண்டிஷனர்: ஒவ்வொரு வீட்டிலும் மின்சார கட்டணம் மிக அதிகமாக வர முதல் காரணமாக இருப்பது ஏர் கண்டிஷனர்தான். ஏசியை 18 முதல் 23°C வரையிலான வெப்ப நிலையில் வைத்திருக்கும்போது அது 1KW க்கும் அதிகமான மின்சாரத்தை இழுக்கிறது. மற்ற சாதனங்களுடன் ஒப்பிடுகையில் இது 10 மடங்கிற்கு மேல் அதிகமாக மின்சாரத்தை சாப்பிடுகிறது.
ஏசியின் மின்சார தேவையை குறைக்க அதை 26 இல் இருந்து 27 °C வரையிலான வெப்ப நிலையில் வைத்து விட்டு அந்த அறையின் மின்விசிறியையும் ஓடவிட்டால் அறை முழுக்க விரைவாக குளிர்ச்சி பரவி வெப்பநிலையும் குறைந்து விடும். அதே நேரம் மின்சாரத் தேவையும் பாதியாக குறைந்துவிடும்.
2. அயர்ன் பாக்ஸ்: இன்டக்சன் அடுப்பு, கெட்டில் போன்றவற்றை பயன்படுத்தும்போது, அவற்றின் வெப்பநிலையை சற்று குறைத்து வைத்து பயன்படுத்தினால் அதற்கு குறைவான மின்சாரமே தேவைப்படும். இதனால் மின்சாரம் 25% வரை சேமிக்கப்படும்.
3. கெய்சர்: மிக அதிகமாக மின்சாரம் இழுக்கும் ஒரு சாதனமாகும். பொதுவாக அனைவரும் கெய்சரை 80°C க்கு மேல்தான் செட் செய்து இருப்பார்கள். இதற்கு அதிக அளவு மின்சாரம் விரயமாகும். மேலும் அந்த சூடான தண்ணீரையும் அப்படியே பயன்படுத்த முடியாமல் பாதி குளிர்ந்த நீரை சேர்த்துதான் பயன்படுத்துவார்கள். இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் 45 முதல் 50°C வெப்பநிலையில் நீரை பயன்படுத்தி குளித்தால் போதுமானது. இம்முறையில் மின்சாரம் பாதிக்கும் மேல் மிச்சமாகும்.
4. வாஷிங் மெஷின்: துவைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தைவிட, அது சுடுதண்ணீரில் துவைக்க எடுத்துக் கொள்ளும் மின்சாரம்தான் மிக அதிகமாக விரயமாகும். எப்படியும் துணி துவைத்துவிட்டால் வெயிலில்தான் உலர்த்த வேண்டி இருக்கும். அதனால் சுடுதண்ணிரில் துவைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நீங்கள் வாஷிங் மெஷினில் தண்ணீரின் வெப்பநிலையை முழுவதும் குறைத்துவிட்டால், வாஷிங் மெஷினின் மின்சார தேவை பாதியாக குறைந்துவிடும்.
5. மின் விசிறிகள்: பொதுவாக 80W அளவிற்கு மின்சாரத்தை உறிஞ்சக் கூடியவை. நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு எப்போதும் மின் விசிறிகள் சுழன்று கொண்டே இருக்கவேண்டும். பழைய மின்விசிறிகள் அதிகளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளக் கூடியவை. தற்போது புதிதாக வந்துள்ள BLDC ரக மின்சார விசிறிகள் 25- 30W வரை தான் மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன இந்த வகையில் உங்களுக்கு 60% மேலே மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.
6. உங்கள் வீட்டில் இன்னும் டியூப்லைட், மற்றும் குண்டு பல்புகளை தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் முதலில் அதை மாற்றி விடுங்கள். ஒரு சாதாரண டியூப் லைட் ஆனது 45W அளவிற்கு மின்சாரத்தினை எடுத்துக் கொள்ளக்கூடியது. அதேவேளையில் எல்இடி டியூப் லைட்கள் 12- 18W அளவில்தான் மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. அதேபோல் ஒரு குண்டு பல்பு குறைந்தபட்சம் 60W மின்சாரத்தை விரயமாக்குகின்றன. அதேநேரம் எல்இடி பல்புகள் 6W மின்சாரத்தில் அதைவிட அதிக பிரகாசத்தை தரக்கூடியவை. இந்த வகையில் பல்புகளை மாற்றினால் 90% வரை பல்பு வகையில் மின்சாரம் மிச்சமாகும்.
7. நீங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆரம்பித்தால் மின் மோட்டாரின் தேவை ஓரளவு குறையும். தண்ணீர் சிக்கனம் கடைபிடிப்பதன் மூலம் அடுத்த தலைமுறைக்கும் நீங்கள் வளத்தினை விட்டு சொல்கிறீர்கள் என்ற பெருமையை பெற முடியும்.