

சுயமரியாதை என்பது பெரும்பாலும் ஒருவர் தன்னைப் பற்றி தானே நினைத்து கொண்டிருக்கும் ஒருவிதமான உள்ளுணர்வாகும். ஆனால், நாம் அதை நெருக்கமாகவும் நீண்ட காலமாகவும் கவனித்தால், நம்மால்தான் அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம். ஒருவர் தனது வாழ்நாளில் மீண்டும் மீண்டும் தனக்குத்தானே வைத்திருக்கும் வாக்குறுதிகளால் அவருடைய சுயமரியாதை நிலைநாட்டப்படுகிறது. தன்னைப் பற்றி தானே தாழ்வாக நினைத்தால் சுயமரியாதையும் தானாகவே குறைந்து விடும்.
சுயமரியாதை என்பது வெறும் நல்ல விஷயம் மட்டுமல்ல, என்று உளவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த சுயமரியாதை என்பது உங்களை அளவிடக்கூடிய ஒரு தனித்துவமான அம்சமாகும். இது நீங்கள் உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் மற்றும் நடத்துகிறீர்கள் என்பதை வடிவமைக்கிறது. சின்னச் சின்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, உங்களை நீங்களே காட்டிக்கொள்வது மற்றும் உங்களுக்குத் தெரிந்ததைச் செய்வது இவை எல்லாம் சேர்ந்து உங்களுடைய சுயமரியாதையை எப்படி வளர்க்கும் என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நாம் வெற்றி பெற்றாலோ அல்லது வெளிப்புற அங்கீகாரத்தைப் பெற்றாலோதான் சுயமரியாதை கிடைக்கும் என்பது மிகவும் தவறான கருத்தாகும். எப்போதும் நீங்கள் நேர்மையுடன் நடந்து கொண்டால், அடுத்தவர்களுக்கு உங்கள் மீது கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தகுதியானவர் என்ற நம்பிக்கை வரும். இவ்வாறு உங்கள் ஒழுக்கத்தோடு ஒத்துப்போகும் விஷயங்களைச் செய்யும்போது, அது எத்தனை சிறியதாக இருந்தாலும் சரி அல்லது தினசரி வழக்கமாக இருந்தாலும் சரி அந்த ஒழுக்கமே உங்களின் சுயமரியாதையை கணிசமாக அதிகரிக்கச் செய்யும். மேலும், காலப்போக்கில் உங்களின் சுயமரியாதை வலிமை அடையும்.
சுயமரியாதை என்பது உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணருவது மட்டுமல்ல, நீங்கள் உங்கள் மதிப்புகளுக்கு உரிய முறையில் வாழ்வதன் மூலமாகவும் உங்களை மரியாதையுடன் நடத்துவதன் மூலமாகவும் வருகிறது. சின்னச் சின்ன வாக்குறுதிகள் கூட உங்களின் சுயமரியாதையை வளர்க்க உதவும். உங்களுடைய சுய திறனை அல்லது உங்கள் உறுதிமொழிகளை நீங்கள் நிறைவேற்றும்போது உங்களுக்கே உங்களுடைய சொந்த திறனின் மீதான நம்பிக்கை அதிகமாகும்.
உதாரணத்திற்கு, தினமும் ஏதாவது ஒரு டார்கெட் வைத்து கொண்டு அன்றிரவிற்குள் அதை முடிப்பது, ஒரு நாட்குறிப்பில் தவறாமல் எழுதுவது அல்லது வாரத்திற்கு மூன்று முறை உடற்பயிற்சி செய்வது இப்படி அன்றாடம் சின்னச் சின்ன உறுதிமொழிகளை நீங்கள் பின்பற்றும்போது, நீங்கள் உங்களை நம்பியிருக்க கற்றுக்கொள்கிறீர்கள். இந்த வாக்குறுதிகளை கடைப்பிடிப்பதன் மூலமாக, உங்களுடைய உள் நம்பிக்கை உருவாகிறது.
இந்த நுணுக்கமானது மிகவும் முக்கியமானது, ஏனென்றால், சுயக்கட்டுப்பாடு ஒரு தசை போல செயல்படுகிறது. நீங்கள் சுய ஒழுக்கத்தை எவ்வளவு அதிகமாகப் பயிற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு சிறிய வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் சுய ஒழுங்குமுறை தசைகள் வலுவடைகின்றன. அதாவது, உற்பத்திப் பணிகளுக்கு மட்டுமல்லாமல், எதிர்மறை தூண்டுதல்களை எதிர்ப்பதற்கும் உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், சுய பராமரிப்பைப் பேணுவதற்கும் உங்களுக்கு அதிக திறன் கிடைக்கும்.
அடுத்தபடியாக, உங்களுக்கு சாதகமாகவோ அல்லது நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் நடக்காதபட்சத்தில், நீங்கள் உங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை பற்றியது. இதில்தான் உங்களுடைய சுய இரக்கம், கருணை, தீர்ப்பளிக்காத தன்மை மற்றும் உங்கள் குறைபாடுகளை ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கி இருக்கிறது. இப்படி நடக்கும்போது நம்மை நாமே சரியாக நடத்தி கொள்வதற்கு, அன்றாட வாழ்வில் தேவையான ஓய்வு, மென்மையான சுய பேச்சு போன்ற சிறிய அக்கறையுள்ள செயல்களை நீங்களே செய்வதாக உறுதி கொண்டு அவற்றைப் பின்பற்றும்போது, உங்களுடைய சுய திறன் மற்றும் சுய கருணை இரண்டும் வலுப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து வெளிப்புற சரிபார்ப்பைச் சார்ந்து இல்லாத நிலையான மற்றும் ஆரோக்கியமான மதிப்பு உணர்வை உருவாக்க உதவுகிறது.
ஒரு பெரிய வெற்றி, பதவி உயர்வு அல்லது ஒரு பெரிய சாதனை போன்ற மரியாதைக்கு நாம் தகுதியானவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று கூறி ‘பெரிய’ தருணங்களுக்காகக் காத்திருப்பதுதான் நம்முடைய சுய மரியாதையை கெடுக்க நமக்கு நாமே வைத்து கொள்ளும் ஒரு பெரிய வேட்டாகும்.
மிக உயர் தரமான நிலைகள் வந்தால்தான் நமக்கு மதிப்பு கிடைக்கும் என்று நீங்களே உங்கள் மதிப்பை அளவிடும்போதும், ஒரு பெரிய வெற்றிக்கு பிறகுதான் தகுதியானவராக மாற முடியும் என்று உணரும்போதும், நீங்கள் ஒரு உடையக்கூடிய சுய மதிப்பை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
ஆகவே, சுய மரியாதை எப்போதுமே நம்மைத் தேடி வராது மற்றும் அடுத்தவர்களும் தானாகவே நமக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள். நாம்தான் அதை தானாகவே வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான சில சிறிய சுய வாக்குறுதிகள் மூலமாக நீங்கள் உங்களுடைய சுயமரியாதையை வளர்க்கும்போது, உங்களுடைய ஒழுக்கம் மேம்பட்டு நிலையான நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும். அதன் மூலமாக நிலையான நல்வாழ்விற்கான அடித்தளத்தைப் பெறலாம். மேலும், அதன் காரணமாக பலவிதமான நன்மைகளும் அடுத்தவர்களிடமிருந்து உங்கள் மீது நல்ல மதிப்பும் உருவாகலாம்.