மழையை கொண்டாடலாம் வாருங்கள்! பருவமழைக்கு முன் வீட்டை தயார்படுத்துவது எப்படி?

மழையின் அழகை முழுமையாக ரசிக்க உங்கள் வீட்டை இப்போதே பாதுகாப்பாக மாற்றுங்கள்!
வீட்டு பராமரிப்பு
வீட்டு பராமரிப்புAI image
Updated on

ழைக்காலம் தொடங்குவதற்கு முன் வீட்டை முழுமையாக ஆய்வு செய்து பராமரிப்பது அவசியம் என இந்த கட்டுரை விளக்குகிறது. கழிவு நீர் வாய்க்கால்கள், கூரை, சுவர் விரிசல்கள், மழைநீர் வெளியேறும் குழாய்கள், மின் வயரிங் ஆகியவற்றை சரி செய்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் டார்ச் லைட், குடை, ரெயின் கோட், கிருமி நாசினிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே தயார் வைத்தால் மழைக்காலத்தை சுகமாக அனுபவிக்கலாம்.

மழைக்காலத்தின் இனிமையை ரசிக்க, குறிப்பாக மழையின்  ஓசை, குளிர்ந்த காற்று, இதமான தட்பவெப்ப நிலை ஆகியவற்றை முழுமையாக அனுபவிக்க மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக வீட்டு பராமரிப்பு வேண்டும். அந்த வகையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வீட்டை பாதுகாக்கும் பராமரிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மழைக்காலத்துக்கு வீட்டை தயார் செய்வது

மழைக்காலத்துக்கு முன்பாக வீட்டில் இருந்து வெளியேறும்  கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு இருக்கிறதா என்பதை ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது.  வீட்டிற்குள் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் மழைக்காலத்தில் ஈரங்களை விரைவாக உறிஞ்சும் வகையில் கால்மிதியடிகளை வாங்கி சேமிக்க வேண்டும்.

டார்ச் லைட், குடை,ரெயின் கோட் போன்றவற்றை எளிதாக எடுத்துச் செல்லும் இடத்தில் வைப்பதோடு மழைக்கால தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க கிருமி நாசினிகள்,மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்கி வைக்க வேண்டும்.

வீட்டு பராமரிப்பு
வீட்டு பராமரிப்புAI image

கூரை, சுவர் ஈரம், மின் பாதுகாப்பு

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தால் வீட்டின் சுவர்களில் ஈரம் கசிய ஆரம்பித்துவிடும். ஆகவே மழைக்காலத்திற்கும் முன்பாக வீட்டின் சுவர்களில்  விரிசல்கள் காணப்பட்டால்  சீல் கொண்டு அவற்றை அடைக்கவேண்டும். கூரைகளில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்திருந்தால், மழைநீர் வீட்டிற்குள் ஒழுகாமல் இருக்க உடனடியாக சீரமைத்து வெதரிங் கோர்ஸ் பூச்சு போடலாம்.

மொட்டை மாடியில் மழை நீர் தேங்காமல் வெளியேற குழாய்களில் இருக்கும் உடைப்பை சரி செய்வதோடு, மழை நீர் வெளியேறும் குழாய்களில் இருக்கும் இலைகள் மற்றும் குப்பைகளையும் அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். 

மழைக்காலத்திற்கு முன்பாக ஒரு முறை வயரிங் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் சேதமடைந்த மின் ஒயர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆகவே சேதம் அடைந்த மின் கம்பிகளையும், ஸ்விட்ச் போர்டுகளையும்  மாற்றி பாதுகாப்புடன் வைக்கவும். மழைக்காலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்பதால் டார்ச் லைட்டை அருகிலேயே வைப்பது நல்லது.

மழை வந்தால் வீட்டில் ஈரம், பூஞ்சை: முன்கூட்டியே தடுக்கும் வழிகள்

மழைக்காலத்தில் வீட்டின் ஈரப்பதத்தை குறைக்க சூரிய ஒளி வீட்டிற்குள் நுழைய ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வைக்க வேண்டும். ஆகவே ஜன்னல், கதவுகள் திறந்து மூடுவது எளிதாக   இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும். மர சாமான்கள் மழைக்காலத்தில் ஈரப்பதம் ஆகிவிடும் என்பதால் வெயில் காலத்திலேயே அவற்றை ஒரு முறை வார்னிஷ் அடித்து பராமரித்தால் பூஞ்சை தொற்றிலிருந்து சிறிது விடுபடலாம்.

இதையும் படியுங்கள்:
துர்கா தேவிக்கு பிடித்த இந்த பூ வீட்டில் இருந்தால் நீங்கதான் எப்போதுமே ராஜா!
வீட்டு பராமரிப்பு

அலங்கார ஃபோம் சோபாக்களில் மழைக்காலத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றை தடுக்க நெகிழி உறைகளை பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம் அதிகம் இருக்கும் கழிப்பறை கதவுகள், தாழ்ப்பாள்கள் போன்றவற்றில் ஏற்படும் பூஞ்சை தொற்றை தடுக்க அவற்றில் தேங்காய் எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும்.

சமையலறையில் உள்ள அலமாரிகளை சுத்தம் செய்து பொருட்களை அடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மழைக்காலத்தில் பூச்சி மற்றும் பூஞ்சை தொற்றில் இருந்து விடுபடலாம். வீட்டின்  நீர் தேக்க தொட்டியை மழைக்கு முன்பாக சுத்தப்படுத்துவது தொற்று நோயிலிருந்து பாதுகாக்க உதவும். அத்தியாவசியமான மளிகை பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதோடு கனமான திரைச்சீலைகள்,கால் மிதியடிகள் போன்றவற்றை வெயில் காலத்தில் துவைப்பதன் மூலம் பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
1 மணி நேர மேஜிக்: சோர்வில்லாமல் வீட்டை பளபளப்பாக மாற்ற எளிய வழிகள்!
வீட்டு பராமரிப்பு

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் உபயோகப் படுத்தாத அப்புறப்படுத்த வேண்டிய பொருட்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி சுத்தப் படுத்துவதன் மூலம் பூஞ்சை தொற்றிலிருந்து பாதி விடுபடலாம்.

`வருமுன் காப்போம்` என்பதற்கு இணங்க மழைக் காலத்தில் ஏற்படும் சேதங்களை தடுக்க மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டை பராமரிப்பு செய்தால் மழைக்கால இனிமையை தேனீர் கோப்பையுடன் சிற்றுண்டி சுவைத்துக்கொண்டே சுவையாக ரசிக்கலாம்.

எவ்வித எதிர்பாராத சேதங்களும் இன்றி மழைக்காலத்தை அச்சமின்றி எதிர்கொண்டு, சுடச்சுட தேநீருடன் இயற்கையின் அழகை முழு மனதுடன் ரசிக்கும் நிம்மதியான வாழ்க்கை முறையை நீங்கள் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com