இன்றைய காலத்தில் பலர் தங்களது வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தொலைக்காட்சி கணினி, ஸ்மார்ட்போன் போன்ற ஊடகங்களின் வருகையால், வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடுவது, இயற்கையை ரசிப்பது போன்ற பழக்கங்கள் மாறி வருகின்றன. இந்த மாற்றம் மனிதர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பதிவில் வீட்டிலேயே ஒரு நபர் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.
வீட்டிலேயே அதிக நேரம் இருப்பதால் உடல் செயல்பாடு குறைந்து உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உட்கார்ந்த நிலையில் அதிக நேரம் இருப்பது முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், தூக்கக் கலக்கம், மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநல பிரச்சனைகளும் ஏற்படலாம்.
வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால், சமூகத் தொடர்பு குறைந்து நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சமூகத்தில் உள்ள நபர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளும் குறைந்துவிடும். இதனால், சமூகத்திறன்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு சமூகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் திறன் முற்றிலுமாக ஒருவருக்கு குறைந்துவிடும்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வீட்டிலேயே அதிக நேரம் இருப்பதால், பள்ளி-கல்லூரி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதனால், கல்வியில் மதிப்பெண்கள் குறைந்து, எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளை பெரும் வாய்ப்புகளும் குறையும்.
தீர்வுகள்:
தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்து, நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது, குழு நடவடிக்கைகளில் பங்கேற்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மொபைல், கணினி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பயன்பாட்டை குறைத்து, புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது போன்ற ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
வெளியே சென்று பூங்காக்கள், காடுகள் போன்ற இயற்கை சூழலை ரசித்து விட்டு வாருங்கள். புதிய மொழி, கலை, இசைக் கருவி வாசிப்பது போன்ற புதிய திறன்களை கற்றுக் கொள்வது, உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
வீட்டிலேயே அதிக நேரம் இருப்பது பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் சில எளிய மாற்றங்கள் மூலம் இந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும். மேற்கூறிய விஷயங்களை செயல்படுத்துவது மூலமாக நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.