

மார்கழி மாதம் விடியற்காலையில் வாசலில் வண்ணக் கோலமிட்டு அதன் நடுவில் சாணத்தில் பூசணிப்பூவை வைக்கும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக உள்ளது. அதுவும் மலராத பூசணி மொட்டுக்களை வைப்பர். சரியாக சூரிய உதயத்தில் அந்தப் பூசணிப்பூ மலர்ந்து போவோர் வருவோரின் முகத்தில் புன்னகைக்குக் காரணமாகும். இதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். தமிழர்கள் பெரும்பாலும் பூக்கள் மீது தீராத அன்புடனே இருந்து வருகிறார்கள்.
பூக்கள் என்பது வெறும் அழகு மற்றும் வாசனை பொருட்களாக மட்டுமல்லாமல், அவ்வப்போது பல விவரங்களை விளக்கும் சமிக்ஞை களாகவும் மாறியிருக்கின்றன. நாள்தோறும் நம்முடன் பயணிக்கும் நண்பர்களைப் போன்று தலை முடியில் சூடி, கோயில்களில் கொடுத்தால் காதுகளுக்குப் பின்னால் பொருத்தி, மாலைகளில் கட்டப்பட்டு கடவுள் முதல் தலைவர்கள், திருமணம், இறுதிச்சடங்கு வரை மனிதர்கள் ஏதோ ஒருவகையில் மலர்களை அன்புடன் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
அவற்றின் நிறங்கள் பல வேளைகளில் நம் மனநிலையை அறிவிப்பதாக உள்ளது. மன நிலைமையை மாற்றுகின்றன. கிட்டத்தட்ட ஆள்கின்றன. அவற்றின் வாசனைகள் அவை வாடிய பிறகும் நீண்ட காலம் நீடிக்கிறது. பூக்களைப் போன்று வேறு எந்த அலங்காரமும் சேர்த்து ஈடு செய்ய முடியாது என்று நிகரற்று நிற்பது என அனைத்தும் மலர்களுக்கே உள்ள பெருமை.
பூக்களின் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் தீராக்காதல் அலங்காரத்தையும் தாண்டி ஆழமாக இயங்குகிறது என்றே சொல்ல வேண்டும். தமிழ் சமூகத்தில் பூக்கள் நீண்ட காலமாக வர்க்கம், சாதி மற்றும் புனிதத் தன்மையின் அர்த்தங்களைக் கொண்டுள்ளன. சில பூக்கள் உயர்ந்தவை, கடவுளுக்கு மட்டுமே தகுதியானவை என்று கருதப்படுகின்றன. அதனாலேயே சில மலர்களை பெரும்பாலும் பெண்கள தலையில் சூடுவதில்லை. அதற்கு நேர்மாறாக சில மலர்கள் அணியவே முடியாத அளவுக்கு தூய்மையற்றவை என்று ஒதுக்கப்பட்டுள்ளன. மாலை கட்டுவதற்கும் அப்பூக்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
வெற்றுத் தரையில் அதுவும் குறிப்பாக, மார்கழி மாதம் அதிகம் மலரும் பூசணிப்பூ மட்டும் இதற்கு விதிவிலக்கு. பெரும்பாலும் கடவுள்களுக்கு சூட்டப்படாத, ஆனால் மார்கழி மாதம் வீடு வாசலை அலங்கரிக்கும் இந்த பூசணிப்பூ ஒரு கூம்பு வடிவ மஞ்சள் நிறம் கொண்டது. இதைப் பற்றி வரலாற்றாசிரியர் ஒருவர் மார்கழி மாதத்தில் பூசணிப் பூக்களை பயன்படுத்துவது பண்டைய நடைமுறை அல்ல என்கிறார். இது நவீன காலத்தில் வந்த உள்ளூர் நடைமுறை மட்டுமே. தமிழ்நாட்டில் இந்தப் பூக்களைப் பறித்து கோலங்களின் நடுவில் சாணம் வைத்து அதில் வைக்கிறார்கள்.
எத்தனையோ பூக்கள் இருக்க, பூசணிப்பூவை மட்டும் இதற்கு தேர்வு செய்தது ஏன்? அதாவது, கோலங்களை அலங்கரிக்க அந்த நாட்களில் ஏராளமான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதில் பூசணிப்பூதான் முதலிடம் பெற்றது. அதற்கு முக்கியக் காரணம் அதன் பெரிய அளவு, அதன் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிறம். மஞ்சள் என்பது மங்கலத்தைக் குறிக்கும் வளத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அது மகாலட்சுமி தாயாரை வரவேற்கும் என்பதால், அதுவும் குறிப்பாக மஞ்சள் நிறத்தில் மார்கழியில் அதிகம் மலரும் பூவாக இருப்பதால் இது தேர்வாகி இருக்கலாம்.
எளிதாகப் பறிக்கக்கூடிய வகையில் தரையில் படர்ந்து இருப்பதால் அதனைப் பெண்கள் பறித்துப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இன்றளவும் மார்கழியில் பூசணிப்பூ கோலங்களின் அலங்கார அம்சமாக எல்லோரையும் மகிழ்வித்து வருகிறது.