
வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி அநேகமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுவது நவராத்திரி பண்டிகை. இந்த விழா தீமைகளை எதிர்த்து, அம்பாள் துர்கா தேவி போர் புரிந்து வெற்றியடைந்ததை கொண்டாட நடத்தப்படுகிறது. இப்பண்டிகையின் ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் ஒன்பது தெய்வீக அம்சங்களைப் போற்றிப் புகழ்ந்து, விரதமிருந்து பூஜை செய்கின்றனர் பெண்கள். இதனால் பெண்களுக்கு தேவியிடமிருந்து சக்தி, ஞானம், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. இந்த வருட நவராத்திரி, செப்டம்பர் 22ல் தொடங்கி அக்டோபர் 1ம் தேதி நிறைவடைகிறது. நவராத்திரி கொலு ஆரம்பிக்கும் முதலாம் நாள் பின்பற்ற வேண்டிய 5 முக்கியமான விதிமுறைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சுலோகப் பராராயணம்: முதலாம் நாள் பூஜையின்போது தேவி மகாத்மியம் அல்லது துர்கா சப்தஷதி சுலோகங்களை பாராயணம் செய்து தேவியின் வெற்றிகளை விவரிக்கும் மந்திரங்களை உச்சரிப்பது அவசியம். பக்தர்கள் இந்த மந்திரங்களை முழு கவனமுடனும் அர்ப்பணிப்போடும், தேவியின் சக்தியை அங்கீகரிக்கும் வகையிலும் உச்சரிப்பது நன்மை தரும். இதனால் நேர்மறை எண்ணங்கள், உள் மன அமைதி, பலமான மற்றும் பாதுகாப்பான உணர்வும் உண்டாகும். நவராத்திரியின்போதும் அதற்குப் பின்னும் வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெருகவும் இம்மந்திரங்கள் உதவி புரியும்.
2. அடுத்து, கலச ஸ்தாபனாம்: ஒரு சிறிய பானையில் புனித நீர் ஊற்றி அதை தரையில் பரப்பியுள்ள மண் மீது வைத்து, பின் ஒரு தேங்காயை சிவப்பு துணியில் சுற்றி பானையின் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை செருகி கலசத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அருகில் தானியங்களை தூவி அதன் மேல் வெற்றிலை, பாக்கு, நாணயங்கள் வைக்க வேண்டும். மற்றொரு பக்க மண்ணில் பார்லி விதைகளை விதைத்து வைக்க வேண்டும். கலசத்திற்கு ஒன்பது நாட்களும் தவறாமல் பூஜை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் வீட்டிற்குள் துர்கா தேவி எழுந்தருள்வதுடன், தைரியம், பலம், வளம், அமைதி, அருள், வளர்ச்சி போன்றவை நிறைந்து நிற்கும்.
3. வீட்டின் நுழைவு வாயிலில் கரி பவுடர் (Charcoal) மற்றும் சுண்ணாம்பு தடவி வைப்பது: பூமியில் அமைதியின்றி இறந்துபோன பெண்களின் ஆவி சுற்றிக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அவை பண்டிகை காலங்களில் வீட்டில் புகுந்து கெட்ட விளைவுகளை உண்டு பண்ணாதிருக்க வாசலில் சுண்ணாம்பு மற்றும் கரி பவுடர் தடவி வைப்பது அவசியம். கரி பவுடர் குளிர்ச்சி தரவும் பாதுகாப்பிற்கும் உதவும். சுண்ணாம்பு தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க உதவும். இதனால் நேர்மறை விளைவுகள் தடையின்றி வீட்டை நிரப்பும்.
4. ஷோடஷோபாச்சார பூஜை (Shodashopachara Puja) செய்தல்: ஷோடஷோ என்றால் 16, 'உபச்சார' என்றால் படைத்தல் என்று பொருள். அதாவது, கொலுவின் முதல் நாளன்று தேவி துர்காவிற்கு, பூ, சந்தனம், ஊதுபத்தி, தண்ணீர், விளக்கு மற்றும் வகை வகையான உணவுகள் படைத்து, மந்திரங்கள் கூறி பிரார்த்தனை பண்ணியபடி வரவேற்பதற்கு செய்யப்படும் பூஜையாகும். இதனால் ஆரோக்கியம், வளம், ஆன்மிக வளர்ச்சி போன்றவை வீட்டில் குறைவின்றி நிலைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளும் உடனிருந்து பூஜைகளை கவனிக்கும்போது, இந்தக் கலாசாரம் அடுத்த தலைமுறைக்கும் சென்றடைகிறது.
5. அகண்ட ஜோதி ஏற்றுதல்: கொலுவின் முதல் நாளில், கலசத்திற்கு அருகில் அல்லது தேவியின் உருவத்தை பிரதிஷ்டை பண்ணியுள்ள இடத்தில், பெரிய விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இது அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரவும் பகலும் வீட்டிலுள்ளோர் தவறாமல் எண்ணெய் ஊற்றி வர வேண்டும். துர்கா தேவியே தனது சக்தியால் தீபத்தைப் பாதுகாத்து எரியச் செய்கிறாள் என நம்பப்படுகிறது. தெடர்ந்து இந்த தீபம் எரிவதைப் பார்க்கும்போது வீட்டில் உள்ளவர்களின் ஆன்ம பலம் அதிகரிக்கும். வளமும் நல்லிணக்கமும் பெருகும். பக்தியும் பொறுமையும் வளரும். மொத்தத்தில் இந்தப் புனித விளக்கே நவராத்திரி கொண்டாட்டத்தின் இதயத் துடிப்பு எனலாம்.
கொலு வைக்க விரும்புபவர்கள் மேற்கூறிய 5 பழக்கங்களையும் தவறாமல் பின்பற்றி அம்பிகையின் அருள் பெறுவோம்!