புதிய பாதையைக் காட்டும் பழைய சிந்தனைகள்!

Saint and Devotee
Saint and Devotee
Published on

ம் வீட்டுப் பெரியவர்கள் நம்மிடம் எப்போதும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அல்லது செய்த ஒரு வேலையையையே மீண்டும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். அப்படி வீட்டுப் பெரியோர்கள் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்யச் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கும். அந்த செயலை திரும்ப நாம் செய்யும்போது அதிலிருந்து புதிதாக ஒரு பாடத்தை நாம் கற்கலாம். அது நமக்கு ஒரு புதிய பாதையையும் காட்டலாம். அதைக் குறித்து ஒரு சிறிய கதை மூலம் பார்க்கலாம்.

மலைப்பிரதேசத்தில் இருக்கும் பழங்காலக் கோயில் ஒன்றைப் புனரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஆர்வமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் சுந்தர். துறவி ஒருவர் இந்தப் பணியை முன்னின்று நடத்தினார். உள்ளூர் மக்களுடன் வெளியூர்களிலிருந்து வந்தவர்களும் இணைய, சில மாதங்களில் அந்தக் கோயில் புதுப்பொலிவு பெற்றது.

பாரம்பரிய அடையாளங்கள் மாறாமல் புதுப்பித்து, நல்ல வழிபாட்டுத் தலமாக அதை மாற்றிவிட்டனர். இந்த உழவாரப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் துறவி நன்றி சொன்னார். குறிப்பாக, சுந்தர் கொடுத்த உழைப்பு அதிகம் என்பதால், அவனைத் தனியே அழைத்துப் பாராட்டினார்.

அந்தக் கோயிலில் தினமும் சொற்பொழிவுகள் நடைபெற்றன. மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் என்று இதிகாசங்கள் மற்றும் புராணங்களை விளக்கி பலரும் அங்கு பேசுவார்கள். பேசும் நபர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தாலும், பேசும் விஷயங்கள் ஒரே மாதிரி இருந்தன. புராணக் கதைகளை மாற்ற முடியாது அல்லவா? அதில் சொல்லப்பட்ட கருத்துகளும் மாறாது அல்லவா?

சுந்தருக்கு ஒரு கட்டத்தில் இது அலுப்பு தந்தது. ‘இவர்கள் என்ன சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இதைக் கேட்க தினம் தினம் வர வேண்டுமா' என்று எரிச்சல் அடைந்தான். அதன்பின்னர் கோயிலுக்கு வருவதை நிறுத்திவிட்டான்.

ஒரு வாரம் போனது. சுந்தர் கோயிலுக்கு வராததை அறிந்த துறவி, சுந்தரின் வீட்டுக்கே வந்துவிட்டார். "உடம்பு சரியில்லையா?" என்று விசாரித்தார். "இல்லை சுவாமி, நன்றாகத்தான் இருக்கிறேன்" என்றான் சுந்தர்.

"கோயில் பக்கம் வருவதே இல்லையே” என்று கேட்டார்.

"ஒன்றுமில்லை சுவாமி, சொற்பொழிவில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். தெரிந்த விஷயத்தையே திரும்பவும் கேட்பது நேர விரயம் என்று தோன்றியது. அதனால்தான் வரவில்லை" என்றான் சுந்தர்.

துறவி சிரித்தார். பதில் எதுவும் சொல்லவில்லை. ‘இவர் நம்மைக் கோயிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துவார். இவர் பேச்சைக் கேட்கவே கூடாது’ என்று உறுதியாக இருந்தான் சுந்தர்.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் டிமென்ஷியா தரும் பாதிப்புகளும் நிவாரணமும்!
Saint and Devotee

அது ஒரு குளிர்கால நாளின் இரவு. அறைக்குள் நெருப்பு மூட்டி அதில் குளிர் காய்ந்தபடியே சுந்தரும் அந்தத் துறவியும் வெவ்வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சின் இடையில், எரிந்து கொண்டிருந்த நெருப்பில் இருந்து ஒரு விறகுக் கட்டையை எடுத்து தனியே வைத்தார் துறவி. நெருப்பின் அருகில் இல்லாததால் அந்த விறகுக் கட்டை சீக்கிரமே அணைந்துபோனது. அதைக் காட்டித் துறவி சொன்னார், "சுந்தர் இந்த விறகைப் பார்! பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த விறகு அது. நெருப்பிலிருந்து விலகித் தனியே வந்ததும் அதனால் தொடர்ந்து எரிய முடியவில்லை.

நாம் எவ்வளவு புத்திசாலியான மனிதராக இருந்தாலும், சக மனிதர்களின் அரவணைப்பும் நெருக்கமும் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் கோயிலில் எல்லோரும் ஒன்று கூடுகிறோம். நெருப்பு தொடர்ந்து எரிவது போல, ஏதோ ஒரு விஷயத்தைத் தொடர்ந்து கேட்க வேண்டியுள்ளது. அதே கடவுள்தான். திரும்பத் திரும்பப் பார்க்கும்போது நமக்கு அவர் புதிதாகத் தெரிவார். அதே புராணம்தான், திரும்பத் திரும்பக் கேட்கும்போது நமக்குப் புதிதாக ஏதோ ஒரு பாதை தெரியும். இப்படி இல்லாவிட்டால், இந்த விறகு போலப் பயனற்றுப் போய்விடுவோம்" என்றார் துறவி.

அதைக் கேட்ட அவனுக்கு மூளையில் ஏதோ ஒன்று புதிதாகத் தோன்றியது. "நாளை முதல் கோயிலுக்கு வருகிறேன் சுவாமி" என்றான் சுந்தர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com