தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. அதேபோல், கணினி பயன்பாடு இல்லாமலும் எந்தப் பணிகளும் இல்லை. கை அருகில் உலகம் என்பது போய், கைக்குள்ளேயே உலகம் வந்துவிட்ட காலம் இது. வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தை எண்ணி ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் இதனால் சிதைந்து வருபவர்களை எண்ணி மனதில் வேதனையும் எழுகிறது.
தற்போது பள்ளிப் பிள்ளைகளும் அதிக அளவில் செல்போனை பயன்படுத்துவதால் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, அதிகப்படியான டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவோர் டிஜிட்டல் டிமென்ஷியா எனும் பாதிப்பை அடைகின்றனர்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு தொலைபேசி எண்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களை நினைவுபடுத்த மக்கள் தங்கள் மூளை எனும் நினைவு சேமிப்பகத்தையே நம்பியிருந்தனர். இன்று பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளே நம்முடைய அத்தனை தகவல்களையும் நமக்காக சேமித்து, மூளையை வலுவிழக்கச் செய்கிறது. டிஜிட்டல் டிமென்ஷியா என்பது டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாட்டுடன் தொடர்புடைய அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறிக்கிறது. குறிப்பாக, நமது அறிவாற்றல் திறன்களின் பயன்பாடு குறைந்து வருவதால் எழும் பாதிப்பு இது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
டிஜிட்டல் டிமென்ஷியா அறிகுறிகள்: தொழில்நுட்பத்தின் மீதான அதீத நம்பிக்கை, கவனம் செலுத்தும் திறன் குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற அறிவாற்றல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் டிஜிட்டல் டிமென்ஷியாவின் அறிகுறிகளாகும். மேலும், நினைவாற்றல், செறிவு மற்றும் கற்றலையும் இது பாதிக்கும்,
டிஜிட்டல் டிமென்ஷியா பாதிப்புகள்: இதனால் உடல் நலன் மற்றும் மன நலம் பாதிக்கப்படலாம். தூக்கமின்மை, எப்போதும் ஒருவித பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
இப்பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
* செல்போன் மற்றும் கணினி பயன்பாடுகளுக்கு அவசியமான நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
* செல்போனில் தொடர்பு எண்கள் மற்ற விபரங்களை சேமித்து வைத்தாலும் அதை நினைவில் நிறுத்தப் பழகுங்கள். இதற்காக பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
* புத்தகங்களை கடைகளில் வாங்கிப் படியுங்கள்.அதிலுள்ள குறிப்புகளை தனியே டைரியில் கைப்பட எழுதி வைக்கப் பழகுங்கள்.
* இரத்த அழுத்தம், நீரிழிவு, எடை பராமரிப்பில் கவனம் கொள்ளுங்கள். யோகா, உடற்பயிற்சிகளை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
* வீட்டின் உள்ளேயே அடைபடாமல் வெளியில் சென்று மற்றவர்களுடன் பழகி நிஜ வாழ்வுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
* தனித்திறமைகளை கண்டறிந்து அதை மேம்படுத்த பயிற்சி எடுங்கள்.
* எப்போதும் உடலையும் உள்ளத்தையும் சுறுசுறுப்பாகவும் வைக்கப் பழகுங்கள். குடும்பம், உறவுகள் மற்றும் நட்புகளுடன் ஒன்றாகக் கூடி மகிழுங்கள்.
* ஆரோக்கியமான உணவு முறைகளில் கவனம் செலுத்துங்கள்.
* குழந்தைகளுடன் நேரடியாக விளையாடி அவர்களுடன் தொடர்பில் இருக்கப் பழகுங்கள்.