குளிர்காலத்தில் சிறு குழந்தைகளை பராமரிப்பது சவாலான விஷயம். குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள் என்பதால் அவர்களின் சருமத்திற்கு சிறப்பு கவனம் தேவைப்படும். சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் எளிதில் சளி பிடிக்கும். குளிர்ந்த காற்று படாமல் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் உடல் வெப்பநிலையை சரியாகப் பராமரிக்க சூடான ஆடைகளை உடுத்தலாம். கடுகு எண்ணெயை லேசாக சுட வைத்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்யலாம்.
கடுகு எண்ணெய் மசாஜ்: குழந்தையின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உடல் செயல்பாடுகள் சீராக நடைபெறவும் எலும்புகளை வலுப்படுத்தவும் சரியான வளர்ச்சிக்கும் மசாஜ் உதவும். குழந்தைகளுக்கு தினமும் குறிப்பாக குளிர்காலத்தில் மசாஜ் செய்வது நல்லது. பாதாம், ஆலிவ் எண்ணெய் கொண்டும் மசாஜ் செய்யலாம். எண்ணெயை லேசாக சுடவைத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்து சூடுபடுத்தி பின்பு மசாஜ் செய்யவும்.
குளிப்பாட்டுவது: குழந்தையை குளிப்பாட்டும் நீர் மிகவும் சூடாகவோ, குளிர்ந்தோ இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும். குளிர்காலத்தில் குளிர் அதிகம் இருக்கும் சமயங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்க வைக்கலாம். அல்லது சூடான தண்ணீரில் துணியை நனைத்து அந்தத் துணியைக் கொண்டு உடலைத் துடைக்கலாம்.
டயப்பர்கள்: குளிர்காலத்தில் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அந்த சமயத்தில் ஈரமான ஆடைகளையோ, உள்ளாடைகளையோ சரி பார்த்து அவ்வப்பொழுது மாற்ற வேண்டும். இல்லையெனில் குழந்தைகளுக்கு சளி பிடிக்க அதிக வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி சூழ்நிலைகளில் டயப்பரை அணியச் செய்வது நல்லது. அவ்வப்பொழுது சரிபார்த்து 4, 5 மணி நேரத்தில் மறக்காமல் மாற்றவும். இல்லையெனில் ஈர டயப்பரால் புண்கள் உண்டாகும். சிறிதளவு தேங்காய் எண்ணெயை தொடைகளில் தடவி வர குணமாகும்.
ஆடைகள்: எந்த ஆடையை அணிவித்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும். சரும அலர்ஜியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பருத்தி உள்ளாடைகளை அணிவித்து மேலாக கம்பளி கால் சட்டை மற்றும் சாக்ஸ் ஆகியவற்றை அணிவிக்கலாம். உரோமத்தாலான துணிகள் குழந்தைகளின் உடலில் நேரடியாக பட்டால் அது குழந்தைகளின் மென்மையான சருமத்தை உறுத்தும். குழந்தைகளின் துணிகளை துவைக்க அதிக காரம் மிகுந்த சோப்புகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
குழந்தையை கொசுக்கள் கடிக்காமல் இருக்க உறங்கும்பொழுது கொசுவலை போடுவது நல்லது. குழந்தையின் உடம்பில் சிறிது நேரம் இளவெயில் படும்படி செய்வது எளிதில் சளி தொந்தரவும், நோய்த்தொற்றும் வராமல் காக்கும்.