Rainy Season
Rainy Season

மழைக் காலம் வருதே! முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருப்போமா?

Published on

(70ஸ் கிட் பார்வையில்)

‘மழை பெய்யா விட்டால் இந்தப் பூவுலகே இல்லை!’ என்பதே உண்மை. ஆனால் அந்த மழையை ரசிக்கும் மனோபாவத்தை இன்றைய தலைமுறை இழந்து வருகிறது என்பதே நிதர்சனம்! அதற்குக் காரணங்களும் உண்டு.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ‘ஐப்பசி-கார்த்திகை’ மாதங்கள்தான் அடைமழைக் காலங்கள்! சில நேரங்களில் ஏழெட்டு நாட்களுக்குக் கூட சூரியனைப் பார்க்க முடியாது! 'எப்பொழுது சூரியனைப் பார்ப்போம்?’ என்ற ஏக்கம் ஒரு புறம் இருந்தாலும், தொண தொணவென்று தூறிக் கொண்டிருக்கும் தூற்றலில் ஓடியாடுவதும், வீட்டோரம் மற்றும் சாலையோரங்களில் ஓடும், வாரி மழை நீரில் காகிதக் கப்பல் விட்டு, அதன் பின்னாலேயே சென்றதெல்லாம் மறக்கவே முடியாத இனிய தருணங்கள்!

பொண பொணவென்று தூறல் போடுகையில் சில வயதானவர்கள் இறந்து போவதும் உண்டு. அதனால்தானோ அந்தப் பெயரில் ‘பொண பொணத் தூற்றல்’ என்றார்களோ என்ற எண்ண ஓட்டமும் உண்டு!

பக்கத்து வீட்டு டீக்கடை தாத்தா ஒரு மழைக்காலத்தில் இறந்து போக, அவர் பாடையில் கடையிலுள்ள குருவி பிஸ்கட்களைக் கட்ட, அவை மழையில் நனைந்து, கரைந்து கீழே விழுந்தன! இப்பொழுது பேரன், பேத்திகள் ‘அனிமல் பிஸ்கட்’ கேட்கையில், தாத்தாவின் நினைவும், குருவி பிஸ்கட்டும் மனதை நிறைக்கின்றன!

‘பொணம் மாதிரி கனக்கிறான்!’ என்று அதிக வெயிட் உள்ளவர்களைச் சொல்வதுண்டு. உயிரற்ற உடலைச் சுமந்து அதனை டெஸ்ட் செய்ய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்க… பட்டாமணியாராக இருந்த (அந்தக் காலத்தில் வில்லேஜ் ஹெட் மேன் - Village Head Man - ஐ அப்படித்தான் அழைத்தார்கள்) என் தாத்தா இறந்த போது அதனையும் செய்து பார்த்தது மனதுக்கு இதம் தந்தது!

பள்ளி விடும் நேரங்களில் மழை வந்து விட்டால், புத்தகப்பையைப் பள்ளியிலேயே வைத்து விட்டு மழையில் உற்சாகமாக நனைந்தபடி வீட்டுக்கு ஓடி வருவதில் ஓர் அலாதி இன்பம்!

போன காலங்கள் போனவையே! சரி! நிகழ் காலத்திற்கு வருவோம்!

இப்பொழுதெல்லாம் தொண தொண மழை விடை பெற்று விட்டது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து, ஊரை உண்டு… இல்லை என்று ஆக்கி விடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் விளையாட ஆரம்பித்து விடுகிறது. சாலைகளை ஆறுகளாக்கி அனைவரையும் அல்லல் படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
மழைக் காலம் நெருங்கிவிட்டது... என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீங்கள் எடுத்துள்ளீர்கள்!
Rainy Season

முன் ஜாக்கிரதையாக நாம் செய்ய வேண்டியவற்றைப் பார்ப்போமா?

  • வீட்டிலுள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ஒரு நல்ல குடை தயாராக இருக்கட்டும்;

  • டூ வீலர் வைத்திருப்பவர்கள் ரெயின் ஜாக்கட்டும், பேண்டும் வைத்துக் கொள்ள வேண்டும்;

  • கார் வைத்திருப்பவர்கள், காரில் இரண்டொரு குடையை வைத்துக் கொள்ளுங்கள்;

  • வீடு பள்ளமான பகுதியில் இருந்தாலோ, அல்லது கடந்த நான்கைந்து வருடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, எந்தப் பொருளையும் தரையில் வைக்காதீர்கள். பரணில் பாதுகாப்பாக வையுங்கள்;

  • அவசரமாகக் கிளம்ப ஏதுவாக, நீரில் நனையாத பெரும் பைகள் இரண்டு, மூன்றைத்  தயாராக வைத்திருங்கள்;

  • அவசர உதவி போன் எண்களைப் பெரிய சைசில் நகல் எடுத்து, சுவரில் ஒட்டி வையுங்கள்;

  • முக்கிய டாகுமெண்டுகள், நகைகள் ஆகியவற்றை வங்கி லாக்கர்களில் முன்கூட்டியே வைத்து விடுங்கள்; லாக்கர் இல்லாதவர்கள் நம்பகமான உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் கொடுத்து, மழைக்கு முன்னதாக பத்திரப்படுத்தி விடுங்கள்;

  • வீட்டில் வயதானவர்கள், நோயாளிகள் இருப்பார்களானால் அவர்களுக்கு வேண்டிய மருந்துகளைப் போதுமான அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்;

  • ஒரு வேளை வீட்டிற்குள் நீர் புகும் நிலையேற்பட்டால், எங்கு செல்வது என்பதை முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்; உறவினர்கள், நண்பர்கள், நல் உள்ளம் கொண்டவர்கள், நிவாரண முகாம்கள் என்று பலவும் உண்டு;

  • உங்கள் வீடு வெள்ளத்திற்கு அப்பாற்பட்ட உயரமான இடத்தில் உள்ளதென்றால், முடியுமானால் ஒன்றிரண்டு அறைகளைத் தயாராக வையுங்கள்; உறவினர்கள், நண்பர்கள், ஆதரவற்ற ஏழைகள் ஆகியோருக்குப் பயன்படட்டும்; ஆபத்தில்  இருப்பவர்களுக்கு உதவுவதே உலகில் மிகப்பெரிய தருமம்;

  • மழைக்கு முன்னதாகவே உடம்பில் ஓரளவுக்காவது எதிர்ப்பாற்றலை வளர்த்துக்  கொள்வது நல்லது; ஒரு சின்ன டிப்ஸ்: சளி பிடித்தாலோ, பிடிக்கும் என்று எண்ணம்  வந்தாலோ, மிளகைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

  • கையில் போதுமான பணத்தைக் கேஷாக வைத்துக் கொள்ளுங்கள்; கார்டு, ஏடிஎம், போன்றவை பயன் தராது போக வாய்ப்புண்டு;

இதையும் படியுங்கள்:
மழைக் காலம் வந்தாச்சு... என்ன மாதிரி ட்ரஸ், காலணிகள் போடலாம் தெரிஞ்சுக்கோங்க!
Rainy Season
  • செல் போன் சார்ஜ் செய்யும் பவர் பேங்குகள் இருக்குமானால் அவற்றை முழுதாக  சார்ஜ் செய்து வையுங்கள்; ஆபத்பாந்தவன்கள் அவை;

  • எதற்கும் பயப்படாதீர்கள்; அதே சமயம் எதையும் எச்சரிக்கையுடன் அணுகுங்கள்; அது கரண்டாக இருந்தாலும் சரி! கனிவான குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி! எப்பொழுதுமே குடும்ப ஒற்றுமை அவசியம்; அதிலும் ஆபத்துக் காலங்களில் அது ரொம்ப, ரொம்ப அவசியம் என்பதை மனதில் இறுத்துங்கள்!

என்னது! மழை வரட்டும் உற்சாகமாகக் கொண்டாடுவோம் என்கிறீர்களா?

குட்! இந்த மனநிலை வந்து விட்டாலே போதுங்க! கொண்டாடுவோம் மழையை!

logo
Kalki Online
kalkionline.com