
ஒழுங்காகத் தூங்கமுடியாமல் இருக்கும் நபர்கள் ஏராளம் உள்ளனர். தூக்கமின்மை மட்டுமல்ல, ஒழுங்காகத் தூங்க முடியாமல் இருப்பதும் நம்மை உடற்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்னையை சரி செய்ய சிவப்பு ஒளி சிகிச்சை உதவுவதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி ஆய்வு சொல்வது என்ன என்றும் சிவப்பு ஒளி சிகிச்சை பற்றியும் இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக, கணினி மற்றும் செல்போன்களில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளி உடலில் மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. தூக்கத்தைப் பாதிக்கிறது என்பன எல்லாம் நாம் அறிந்ததே. ஆனால், சிவப்பு ஒளி இதற்கு எதிர்வினையாகச் செயல்படுகிறது என்றும், அது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
சிவப்பு ஒளி சிகிச்சை மற்றும் தூக்கம் குறித்து ஆய்வு கூறுவது என்ன?
சிவப்பு ஒளி சிகிச்சை என்பது ஒரு குறிப்பிட்ட மற்றும் குறைந்த அலைநீளத்தில் சிவப்பு ஒளியை பயன்படுத்தி சிகிச்சை செய்யும் ஒரு முறையாகும். இந்த சிகிச்சைக்கான அலைநீளம் 630 நானோமீட்டர் முதல் 700 நானோமீட்டருக்கு இடையில் இருக்க வேண்டுமாம். இந்தச் சிகிச்சையின் கால அளவு 10 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கலாம் என்றும் கூறுகிறது.
இரவில் தூங்கப் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், சிவப்பு ஒளியை பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை என ஒரே குறிப்பிட்ட நேரத்தில் இதனைப் பயன்படுத்துவது சிறந்தது என்றும் ஆய்வு கூறுகிறது. இது மெலட்டோனின் அளவை அதிகரித்து உடலை தளர்வடையச் செய்து தூக்க உணர்வை ஏற்படுத்துகிறது.
சிவப்பு ஒளி சிகிச்சையின் நன்மைகள்:
சிவப்பு ஒளி சிகிச்சை இரவில் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று ஆய்வு கூறுகிறது.
வலியற்ற மற்றும் குறைந்த ஆபத்து உடைய அல்லது எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத வகையில் தூக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு இயற்கை வழிமுறையாக இது பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த ஒளியை நேரடியாக கண்காளால் பார்க்கக்கூடாது. ஏனெனில், இது கண்கள் பாதிப்பு, தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
சிவப்பு ஒளி சிகிச்சையைப் பயன்படுத்தும்போது, அது, உடலின் சுழற்சித் தாளத்தை (Body circulation rhythm) ஒழுங்குபடுத்துகிறது.
இது மெலடோனின் உற்பத்திக்கு வழிவகுத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
தூக்கமின்மை, தூக்கக் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது.
தூக்கத்தின் தரம், காலம், மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் நாள்பட்ட வழியைக் குறைக்க உதவுகிறது.
இதன் கூடுதல் நன்மைகளாக, சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலுக்குப் புத்துணச்சியைத் தர உதவுகிறது. வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படுகிறது.
சிவப்பு ஒளி குறித்த ஆய்வுகள் சிறிய அளவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இது பற்றிய ஆய்வுகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.