

இன்றைய காலத்தில் திருமணம் எனும் ஆயிரம் காலத்துப் பயிர் முளைத்து வேர் விடுவதற்குள் வாடிப்போவதை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். காதலிக்கும்போது இருந்த உற்சாகமும் நெருக்கமும் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே காணாமல் போய்விடுவதற்கு என்ன காரணம் என்று யோசித்ததுண்டா?
பெரும்பாலும் தம்பதிகள் தங்கள் துணையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்னரே, குடும்பக் கடமைகளுக்குள் சிக்கிக்கொள்வதுதான் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. திருமணமான புதிதில் தம்பதிகள் கூட்டுக்குடும்பமாக இருப்பதைவிட, சில காலமாவது தனிக்குடித்தனம் இருப்பது உறவை வலுப்படுத்தும் என்று உறவுமுறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Relationship tips: துணைக்கான முன்னுரிமை!
இரு மனங்களின் இணைவு திருமணம். உங்கள் மனைவி தன் பெற்றோர், வீடு, பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு உங்களை நம்பித்தான் வந்திருக்கிறார். ஆனால், பல நேரங்களில் கணவன்மார்கள் தங்கள் பெற்றோரை மகிழ்விப்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துகிறார்கள். சாப்பிடும் மேஜையில் கூட மனைவியின் முகத்தைப் பார்க்காமல், அப்பா அம்மாவுக்குப் பரிமாறுவதிலேயே குறியாக இருந்தால், அந்தப் பெண்ணின் நிலை என்னவாகும்.
அவள் உங்களைத்தான் திருமணம் செய்துகொண்டாளே தவிர, உங்கள் ஒட்டுமொத்த உறவினர்களையும் அல்ல. எனவே, ஆரம்பகாலத்தில் உங்கள் மனைவிக்கு நீங்கள் கொடுக்கும் முன்னுரிமைதான் வாழ்நாள் முழுவதும் உங்கள் மீதான மரியாதையைத் தக்கவைக்கும்.
விமர்சனங்கள்!
கூட்டுக்குடும்பத்தில் இருக்கும்போது பல நேரங்களில் ‘இதை அணியாதே’, ‘சத்தமாகப் பேசாதே’, ‘இப்படிச் சமைக்காதே’ என்ற விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கும். இது ஒரு பெண்ணின் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் வெகுவாகப் பாதிக்கும். தன் சொந்த வீட்டிலேயே ஒரு அந்நியரைப் போலவும், ஒரு சிறைக் கைதியைப் போலவும் அவள் உணரக்கூடும். எந்தவிதப் பயமுமின்றி, சுதந்திரமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சூழல் இல்லாவிட்டால், அந்த உறவில் விரிசல் விழத்தொடங்கிவிடும்.
கடமைகள் vs காதல்!
தினசரி வேலைகளும், சடங்குகளும் காதலை விழுங்கிவிடும் அபாயம் உண்டு. காலையில் எழுந்தவுடன் காபி போடுவது, வீட்டு பெரியவர்களை கவனிப்பது, பூஜை செய்வது என கடமைகள் வரிசைகட்டி நிற்கும் போது, கணவன் மனைவிக்கு இடையே பேசிக்கொள்ளக் கூட நேரம் இருக்காது. இரவு நேரத்தில் இருவரும் பேச நினைக்கும்போது, உடல் சோர்வு அவர்களைத் தூங்கச் செய்துவிடும். இதனால் கணவன் மனைவி என்ற உறவு மாறி, வீட்டு நிர்வாகிகளாக அவர்கள் மாறிவிடுவார்கள்.
“எங்கே போகிறாய்”, “ஏன் இவ்வளவு தாமதம்” போன்ற கேள்விகள் சுதந்திரத்தைப் பறிக்கும். ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் கூட, வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி கேட்க வேண்டுமே என்ற தயக்கம் வரும். ஆனால் தனிக்குடித்தனத்தில் இந்தத் தடைகள் இருக்காது. நினைத்த நேரத்தில் வெளியே போவதும், பிடித்ததைச் சமைப்பதும், ஏன் சமைக்காமலேயே பீட்சா ஆர்டர் செய்து கட்டிலில் அமர்ந்து சாப்பிடுவதும் அலாதியான சுகம். இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் நெருக்கத்தை அதிகரிக்கும்.
முதல் ஐந்து ஆண்டுகளில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் புரிதல், விட்டுக்கொடுத்தல் மற்றும் நெருக்கம் ஆகியவைதான் மீதமுள்ள வாழ்க்கையை அழகாக்கும். ஒரு செடி துளிர்விடும்போது அதற்குப் போதிய இடமும் காற்றோட்டமும் தேவை. அதுபோலத்தான் திருமணமும். எனவே, ஆரம்ப காலத்தில் தனித்திருந்து, ஒருவருக்கொருவர் துணையாகி, பின்னர் உறவுகளை அரவணைத்துச் செல்வதே புத்திசாலித்தனம்.