

பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. திருமணம், காதுகுத்து என்ற விசேஷமாக இருந்தாலும் சரி, துக்க வீடாக இருந்தாலும் சரி பிரியாணி தான் அங்கே முதல் உணவாக இருக்கும். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த உணவாக பிரியாணி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஐஸ்கிரீம் பிரியாணி இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. பிரியாணி தெரியும் அது என்ன ஐஸ்கிரீம் பிரியாணி என்று நினைக்குறீங்களா. இந்த ரெசிபியை சிங்கப்பூரில் வசிக்கும் பாபாசூட் என்ற பெண்மணி செய்துள்ளார்.
சமீபகாலமாக சமையலில் புதுமை செய்வதாக கூறிக்கொண்டு சிலர் புதுமையான ரெபிசிகளை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் ஒன்றாக தான் பிரியாணி ஐஸ்கிரீம் செய்து இணையத்தையே அதிர வைத்துள்ளார் சிங்கப்பூரை சேர்ந்த பெண்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை பார்த்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ‘பாபாஸ்பூட்’ என்ற பெயரில் கணக்கு தொடங்கி சமையல் குறிப்புகள் தொடர்பான வீடியோவை பதிவிட்டு வருகிறார். புதிய வீடியோவில் அவர் பிரியாணியை ஐஸ்கிரீமுடன் இணைத்து புதுமை படைத்துள்ளார்.
அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் பிரியாணியின் சுவையை அப்படியே ஐஸ்கிரீம் உள்ளே கொண்டு வந்திருக்கிறார்.
பொதுவாக பிரியாணி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் காரசாரமான மசாலா தான். ஆனால் அந்த மசாலாக்களை வைத்தே ஒரு இனிப்பு உணவை தயார் செய்துள்ளார்.
முதலில் பால் மற்றும் கிரீமில் பட்டை, ஏலக்காய், லவங்கம், பிரியாணி இலை போட்டு மசாலாவின் வாசனை பாலில் இறங்கும் வரை கொதிக்க விடுகிறார். பின்னர் அதில் பிரியாணி அரிசியை போட்டு வேக வைத்து அந்த வாசனையை முழுவதுமாக பாலில் மாற்றுகிறார். கடைசியாக அந்த அரிசியை வடிகட்டி விட்டு வெறும் பால் மற்றும் கிரீமை வடிக்கட்டி எடுத்து கொண்டு பிரிட்ஜில் 2 - 3 மணிநேரம் குளிர்வித்து எடுத்தால் பிரியாணி ஐஸ்கிரீம் ரெடியாகிவிடும்.
அதோடு நிறுத்தாமல் ஐஸ்கிரீம் மேல் பிரியாணியின் ஸ்பெஷலான வறுத்த வெங்காயம், பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பை தூவி பரிமாறுகிறார்.
இந்த ஐஸ்கிரீமின் சுவை மிகவும் நன்றாக இருந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் வசிப்பவர்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் சும்மா இல்லாமல் அந்த பெண்ணை கமெண்ட்ஸில் வறுத்து எடுத்து வருகிறார்கள்.
பிரியாணி ஒரு எமோஷன். அதை இப்படி சிதைக்காதீங்கனு ஒரு குரூப் கதறுகிறார்கள். மற்றும் சிலர் வேலை இல்லாமல் இருந்தால் இப்படித்தான் செய்யத் தோணும் என்று கலாய்கிறார்கள்.
இதற்கு முன் fanta maggi, oreo curry போன்ற எத்தனையோ விசித்திரமான உணவுகள் இணையத்தில் வைரலானது. அந்த வரிசையில் இப்போது புதுசா வந்திருக்கும் ஐஸ்கிரீம் பிரியாணி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.