
தொலைக்காட்சிகளில் துணி துவைக்க உதவும் சோப்பு பவுடர் விளம்பரங்களைப் பார்த்திருப்போம். அதில் வரும் ஒரு விளம்பரத்தில் ஒரே இழுப்பில் துணியில் உள்ள கறைகள் மறைந்து வெண்மையாவது போல காட்டியிருப்பார்கள். ஆனால், உண்மையில் அதுபோல் கறைகள் முற்றிலும் மறையுமா என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்றுதான் இருக்கும்.
சாதாரண அழுக்குகளை மட்டுமே சோப்பு தூள், கட்டிகள் மற்றும் சோப்பு திரவங்கள் மூலம் எடுக்க முடியும். ஆனால், எதிர்பாராமல் தவறுதலாக ஊற்றிக்கொள்ளும் சாம்பார், ரசம் போன்றவற்றின் மஞ்சள் கறைகள் மற்றும் பிற காரணங்களால் துணிகளில் படியும் கறைகளை முற்றிலுமாக நீக்குவது என்பது துவைப்பவர்களுக்கு ஒரு சவால்தான். அந்த சவாலை எதிர்கொள்பவர்களுக்கு சில எளிய வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.
பேக்கிங் சோடா சமையலுக்கு மட்டுமல்ல, கறையையும் நீக்க உதவும். தேவையான பேக்கிங் சோடாவை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல செய்து அதைக் கறையின் மீது தடவி துவைப்பதற்கு முன்பு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்துத் துவைத்தால் கறை நீங்க வாய்ப்பு உண்டு.
ஹைட்ரஜன் பெராக்சைடு (Hydrogen Peroxide) என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஒரு வேதியியல் சேர்மம் ஆகும். ஹைட்ரஜன் பெராக்சைடை நேரடியாக கறையில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் வழக்கம் போல் சுத்தமான தண்ணீரில் துணிகளைக அலசலாம். ஆனால், ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு வலிமையான வேதிப்பொருள் என்பதால் அதைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கண்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கறை நீங்க கைவசம் இருக்கவே இருக்கு, இயற்கை தந்த எலுமிச்சை பழம். எலுமிச்சை சாறை பிழிந்து கறையில் நேரடியாக தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் வழக்கம் போல் சோப்பு போட்டு துவைக்கலாம். எலுமிச்சையில் உள்ள அமிலம் கறையைப் போக்கி விடும்.
கடினமான கறைகளை நீக்கவும், அகற்றவும் உதவும் வகையில் துவைக்கும்போது ஆக்ஸிக்ளீனைச் சேர்க்கவும். ஆக்ஸிக்ளீன் என்பது ஒரு பிராண்ட் பெயராகும். இது அழுக்குகளை நீக்கும் பொருட்கள் மற்றும் சலவைப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இது குறிப்பாக அழுக்குகளை நீக்கும் தன்மைக்காக அறியப்படுகிறது. ஆக்ஸிக்ளீன் பொருட்களில் சப்டிலிசின் மற்றும் ஆல்பா-அமைலேஸ் போன்ற நொதிகள் உள்ளதால் இவற்றைப் பயன்படுத்தும்போது, அதன் வழிமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் தேவை.
கறை படிந்த துணியை முழுவதுமாக தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகர் கரைசலில் பல மணி நேரம் ஊற வைத்து துவைத்து வெயிலில் படும்படி காய விடுங்கள். சூரியனின் புற ஊதா கதிர்கள் மஞ்சள் கறைகளை அகற்ற உதவும்.
இவற்றுடன் சாதாரணக் கறை என்றால் என்சைம் கொண்ட ஸ்பெஷல் சோப்புகளை மிதமான சுடுநீர் கொண்டு பயன்படுத்தலாம். இதிலுள்ள புரோட்டீஸ்கள், லிபேஸ்கள், அமிலேஸ்கள், செல்லுலேஸ்கள் போன்றவை துணியை பாதிக்காமல் கறை நீக்க உதவும்.
இந்த வழிகளில் முயற்சி செய்வதற்கு முன் கறை பட்டவுடன் அதை அப்படியே விடாமல் விரைவாக நீர் கொண்டு சுத்தம் செய்தால் அதை அகற்ற அதிக வாய்ப்பு உள்ளது. கறையை அகற்ற முயற்சிக்கும் முன், துணிக்குப் பாதுகாப்பான ஒரு முறையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த பராமரிப்பு குறிப்புகள் அல்லது லேபிளை பார்ப்பது அவசியம். மேலும், எந்தவொரு கறை அகற்றும் முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு அந்த முறை துணியின் நிறம் மற்றும் தரத்தை சேதப்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த, ஆடையின் ஒரு சிறிய பகுதியைச் சோதிக்கலாம்.
இந்த முறைகளால் எவ்விதப் பயனுமில்லை அல்லது நேரமில்லை போன்ற காரணங்கள் இருந்தால் தயங்காமல் உடனே அருகிலிருக்கும் தகுதியான ட்ரைகிளினிங் கடைக்காரரிடம் தந்து சுத்தம் செய்து வாங்குங்கள்.