வளரும் குழந்தைகள் இயற்கையாகவே எல்லா விஷயங்களிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே பெற்றோரும் குழந்தைகளை பராமரிப்பவர்களும் அவர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். வீட்டிலோ, பள்ளிகளிலோ அல்லது பொது இடங்களிலோ குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க, சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள் என்று சிலது உள்ளன. அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.
வீட்டு பாதுகாப்பு:
குழந்தைகள் படிக்கட்டுகளில் விழாமல் இருக்க, படிக்கட்டுகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் அவர்கள் ஏறாத படி கதவுகளை அமைக்கவும்.
குழந்தைகளுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அபாயகரமான பொருட்களை அவர்களுக்கு எட்டாதவாறு வைக்கவும்.
பிளக் ஓட்டைகளில் குழந்தைகள் கை வைக்காதவாறு மூடி வைக்கவும்.
ஜன்னல் மற்றும் கதவுகள் வழியாக குழந்தைகள் நுழையாதவாறு பாதுகாப்பு அமைக்கவும்.
குழந்தைகள் விழுங்கக் கூடிய அளவில் இருக்கும் சிறிய பொருட்களை அவர்கள் அணுகாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
தீப்பெட்டி, லைட்டர்கள் அல்லது எலக்ட்ரிக் சாக்கெட்டுகளுடன் விளையாட வேண்டாம் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
சாலை மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு:
சாலையைக் கடக்கும்போது பெரியவர்கள் கையை எப்போதும் பிடிக்கும் படி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
போக்குவரத்து சிக்னல்கள், மற்றும் சாலை அடையாளங்கள் பற்றி அவர்களுக்கு கற்பிக்கவும்.
சாலையை கடக்கும் முன் இருபுறமும் பார்த்து செல்வது, நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது போன்றவற்றை கற்றுக் கொடுங்கள்.
பாதுகாப்பாக இருக்கும் நடைபாதைகளை பயன்படுத்தும் படி குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.
விளையாட்டு மைதான பாதுகாப்பு:
குழந்தைகள் விளையாடும் மைதானம், புல்வெளி, ரப்பர் அல்லது மணல் போன்ற மென்மையான மேற்பரப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்யவும்.
குழந்தைகள் விளையாடும்போது அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருங்கள்.
தேவையில்லாத சண்டைகளைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு பிறருடன் அன்புடன் இருக்க கற்றுக் கொடுங்கள்.
சில விளையாட்டு மைதானங்களில் உள்ள உபகரணங்கள் நல்ல நிலையில் உள்ளதா? கூர்மையான முனைகள் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை சரி பார்க்கவும்.
அவர்களது வயதுக்கு ஏற்ற பகுதி மற்றும் உபகரணங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
நீர் பாதுகாப்பு:
நீச்சல் குளங்கள், குளியல் தொட்டிகள் மற்றும் இயற்கை நீர் நிலைகள் உட்பட குழந்தைகள் செல்லும் பகுதிகளை கண்காணிக்கவும்.
முடிந்தால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுங்கள்.
நீச்சல் குளங்களுக்கு உங்களது மேற்பார்வை இன்றி அவர்களை அனுப்ப வேண்டாம்.
படகு சவாரி செய்யும்போது லைஃப் ஜாக்கெட் சாதனங்களைப் பயன்படுத்த சொல்லுங்கள்.
ஆழமான அல்லது வேகமாக ஓடும் தண்ணீருக்கு அருகில் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கவும்.
தொழில்நுட்ப பாதுகாப்பு:
குழந்தைகள் இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.
இணையத்தில் அவர்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அவர்களது வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்திற்கான அணுக்கலை கட்டுப்படுத்த, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகள் இணையத்தில் செயல்படுவதை பெற்றோர்கள் கண்காணிப்பது நல்லது.
அவசரகால பாதுகாப்பு:
குழந்தைகளுக்கு அவர்களின் முழு பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை கற்றுக்கொடுங்கள்.
ஏதேனும் ஆபத்து சமயத்தில் 100 எண்ணை அழைக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்பிக்கவும்.
அவசர காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என குழந்தைகளுக்கு பயிற்சி அளியுங்கள்.
சிறிய காயத்தை எப்படி சுத்தம் செய்வது மற்றும் கட்டு போடுவது போன்ற அடிப்படை முதலுதவி நுட்பங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
முன்பின் தெரியாத நபர்கள் சொல்வதை தேவையில்லாமல் நம்ப வேண்டாம் என சொல்லிக் கொடுங்கள்.