

மழைக்காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டில் எப்படிப் பாதுகாப்பாக இருப்பது, குழந்தைகளை எப்படி மழையிலிருந்து பாதுகாப்பது என்பதை முன்னெச்சரிக்கையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம். மழைக்காலங்களில் வெளியில் செல்வோர் கட்டாயம் குடை, ரெயின் கோட் வைத்திருக்க வேண்டும். வீட்டில் மின் தடை ஏற்படும் நேரத்தில் மெழுகுவர்த்தி, டார்ச் இரண்டையும் முன்னெச்சரிக்கையாக வைக்கவும். இவை அனைத்தும் அடிப்படையாக கட்டாயம் மழைக் காலங்களில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மழைக்காலங்களில் முதல் உதவியாக வீட்டில் தேவையான மருந்து, மாத்திரை, உணவுப் பொருட்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் கட்டாயம் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். கம்பளி, மப்ளர் அணிவது நல்லது. காதுகளில் பஞ்சு வைத்தால் குளிர் காற்றை தடுக்கலாம்.
இடி, மின்னல், புயல் ஏற்படும் நேரங்களில் வீட்டின் அனைத்துக் கதவுகள், ஜன்னல்களை மூடி பாதுகாப்பாக இருக்கவும். மழைக்காலத்தில் மின் கம்பம் அருகில் செல்லாமலும், ஈரமான இடத்தில் கால் மிதியடி போட்டும், சுவிட்ச் போடும்போது ஒரு குச்சியால் போடவும். காலில் ரப்பர் ஷூ, செருப்பு அணியலாம். மழைக்காலத்தில் தரை பரப்புகள் வழுக்கும் தன்மை கொண்டதால் தகுந்த காலணிகள் அணிய வேண்டும்.
மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகாமல் இருக்க வீட்டின் கூரைகளை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, ஓட்டு வீடுகளில் தண்ணீர் ஒழுகும் வாய்ப்புகள் இருந்தால் ஓடுகளில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும். இடி, மின்னலுடன் கன மழையில் வீடியோ, செல்ஃபி எடுப்பதைத் தவிருங்கள். இடி, மின்னல் ஏற்படும்போது மின் கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றின் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் குழிகள், பள்ளங்கள், பாத்திரங்கள், டப்பாக்கள், டயர்கள் போன்றவை இருந்தால் அதில் நீர் சேர வாய்ப்புகள் அதிகம். அதனால் தேங்கிய நீரில் கொசுக்கள் பெருகி நோய் பாதிப்புகள் ஏற்படும். வீட்டைச் சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதனால் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மழைக்காலங்களில் தரைகளில் கனமான தரை விரிப்புகளைப் பயன்படுத்தாதீர்கள். இதில் நீர் சேரும்போது பூஞ்சை தொற்றுகள் ஏற்படும். எனவே, மழைக்காலங்களில் மெலிதான தரை விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. மழைக்காலங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும்போது நனைந்த பொருட்களை வீட்டுக்குள் எடுத்து வருவதைத் தவிர்க்கவும். பயன்படுத்தும் செருப்பு, குடைகளை வெளியில் தண்ணீர் வடிய விட்டு பேப்பரை வைத்து அதன் மீது காய வைத்துப் பின்பு உள்ளே எடுத்து வரலாம். ஈரமான துணிகளை உடனடியாக உலர வைத்தும் வெளியில் கால்களை சுத்தமாக கழுவி விட்டு பின்னர் வீட்டுக்குள் வந்தால் கிருமிகள் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க உதவும்.
மொபைல் போன்களை மின்சாரம் உள்ளபோது முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்து விடுங்கள். பவர் பேங்குகளையும் போதிய மட்டும் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மின்சாரம் தடைபட்டால் இதன் மூலம் எளிதில் சார்ஜ் செய்யலாம். ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வைத்தும், கெடாதவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லாத காய்கறிகளையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மின்சாரம் தடைப்பட்டாலும் கவலையில்லை. மழைக்காலங்களில் மின் தட்டுப்பாடு இருக்கும். அதனால் ரசப்பொடி, மிளகாய் பொடி அனைத்தையும் முன்கூட்டியே செய்து வைத்து விடுங்கள். மழைக்காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது நல்லது. இதனால் வீட்டில் உள்ளோருக்கு வேலை பளு மிச்சமாகும்.
மேற்கண்டவற்றை அனைத்தையும் முன்கூட்டியே கவனமாக செய்து மழை நேரத்தில் பாதுகாப்பாக இருங்கள்.