முன்கோபத்தைப் போக்கும் சந்தனத் திலகம்!

முன்கோபத்தைப் போக்கும் சந்தனத் திலகம்!

Published on

சிலருக்குப் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கோபம் வரும். பிறர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை காது கொடுத்துக் கேட்கவே மாட்டார்கள். முன்கோபம் ஒருவரின் வாழ்க்கையின் முன்னேற்றத்தையே அழித்து விடும். சிலர் முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதற்கான வழி தெரியாமல் சிரமப்படுவார்கள். முன்கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியைக் கூறும் பதிவுதான் இது.

தினமும் காலை எழுந்ததும் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி விட்டு, ‘இன்றைக்கு நான் முன்கோபம் பட மாட்டேன்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களின் தினசரி காலை கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு, பூஜை அறைக்குச் சென்று கொஞ்சமாக சந்தனத்தில் பன்னீர் ஊற்றி கலந்து அந்தத் திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு உங்களின் அன்றாடப் பணிகளை கவனிக்கத் தொடங்குங்கள்.

சுத்தமான சந்தனம் மிகுந்த குளிர்ச்சியும், தெய்வீகத் தன்மையும் கொண்டது. முன்கோபத்தைக் குறைத்து விடும் குணம் கொண்டது சந்தனம். இந்தப் பரிகாரத்துக்கு நீங்கள் பயன்படுத்தும் சந்தனம், சுத்தமான சந்தனக் கட்டையில் இழைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதேபோல், பன்னீரும் சுத்தமான பன்னீராக இருக்க வேண்டும். அந்தப் பன்னீரின் வாசத்தை நீங்கள் சுவாசிக்கும்போது உங்களுடைய மன அழுத்தம் நீங்கும். இதனால் முன்கோபம் வராமல் தடுக்கப்படும்.

அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சந்தனம் குரு பகவானுக்கு உரியது. இதை தினமும் நெற்றியில் வைத்துக்கொள்வதால் வருவாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் கூட விரைவில் சரியாகும். அதுமட்டுமின்றி, முகத்துக்கு ஒரு தெய்வீகக் கலையையும் இந்த சந்தனத் திலகம் வழங்குகிறது. முகத்தில் படிந்த பீடை நீங்கி, முகம் லட்சுமி கடாட்சமாக விளங்கச் செய்வதில் இந்த சந்தனத் திலகத்துக்கு முக்கியப் பங்குண்டு!

Kalki Online
kalkionline.com