சங்கத் தமிழ் கணக்கு: திருமண வாழ்த்தில் 'வட்டமும் விட்டமும் போல் வாழ்க'வென வாழ்த்துவோம்!
சங்கத்தமிழில் கணித மாறிலி பை (π) எனும் அளவு இருக்கிறது! இந்த பை (π) எனும் அளவில் கணவன் - மனைவிக்கான வாழ்க்கைத் தத்துவமும் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வட்டத்தின் சுற்றளவு (C) என்பது அதன் வெளிப்புற எல்லையின் மொத்த நீளமாகும். வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிட, இரண்டு சூத்திரங்களைப் பயன்படுத்தலாம். ஒன்று, C=2πr (இங்கு r என்பது ஆரம்), மற்றொன்று C=2πd (இங்கு d என்பது விட்டம்). இரண்டு சூத்திரங்களிலும் பை (π) என்பது தோராயமாக 3.14 அல்லது 22/7 என்ற மதிப்புடைய மாறிலி ஆகும்.
சங்கத்தமிழ் இலக்கியங்களில் இந்தச் சூத்திரம் இடம் பெற்றிருக்கிறது. ‘விட்டமோர் ஏழு செய்து திகைவர நான்கு சேர்த்து சட்டென இரட்டி செயின் திகைப்பன சுற்றுத்தானே’ என்கிறது காக்கைப்பாடினியம் பாடல் ஒன்று. இதன்படி விட்டத்தை வி என எடுத்துக் கொண்டால்,
* திகைவர = வி ஆகும்,
* விட்டமோர் ஏழு செய்து = வி/7 ஆகும்,
* நான்கு சேர்த்து = வி + 4 x (வி/7) ஆகும்,
* சட்டென இரட்டி செயின் = (2 (வி + (4 வி/7) ஆகும்.
இதன்படி முறைசெய்தால் (2 x (11 வி) / 7)= 22/7 x வி.
இந்த அளவையும் எளிமையாக்கி கூறுகிறது கணக்கதிகாரத்தில் இடம் பெறும் பாடல். அந்தப் பாடல்,
‘விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டு நான்மா வதினில் மாறியே – எட்டதினில்
ஏற்றியே செப்பிடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெனப் பூங்கொடி நீ சொல்’
இப்பாடலில்;
* விட்ட மதனை விரைவா யிரட்டித்து = 2 x வி ஆகும்,
* மட்டு நான்மா வதினில் மாறியே = 4 x 1/20 = 4/20 ஆகும். (நான்மா = 1/5),
* எட்டதினில் ஏற்றியே = எட்டால் பெருக்க வேண்டும்.
இதன்படி, (2 x வி x 4/20 x 8 ) = (64/20) x வி = 3.2 வி ஆகும்.
அந்தக் காலத்தில் வண்டித்தச்சர்கள் அச்சாணி செய்யப் பயன்படுத்தப்படும் அளவையின்படி, விட்டத்தை மூன்றில் அரைக்கால் சேர்த்து அதை விட்டத்தோடு பெருக்கிக் கொள்கின்றனர்.
(அரைக்கால் = 1/8 = .125), இதன்படி, (3 + 0.125) x வி = 3.125 வி ஆகும்.
அன்றைக்குத் தமிழர்கள் 'பை'க்குக் கண்ட மதிப்பு 22/7, 3.2, 3.125 என்பவை இன்றைய கணக்கியல்படி சரியாகவே இருக்கிறது. இந்த 'பை (π) எனும் மாறிலியை அடிப்படையாகக் கொண்டு, குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையிலான வாழ்க்கைக்கான தத்துவத்தைச் சொல்லலாம் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.
வட்டமும் விட்டமும் கணவன், மனைவி போல. அதாவது, வட்டம் – கணவன் என்றும், அதன் மையப் புள்ளிதான் மனைவி என்றும் இங்கு கொள்ளலாம்.
* மையப் புள்ளி இல்லாமல் வட்டம் வரைய முடியாது. மனைவி இல்லாமல் கணவன் என்னும் பதவி இல்லை.
* மையப் புள்ளியை அச்சாகக் கொண்டுதான் வட்டத்தில் உள்ள எந்தப் புள்ளியும் சுற்றி வர முடியும். மனைவியைச் சுற்றி வந்தால்தான் கணவன் வாழ்வு சிறக்கும்.
* வட்டத்துக்குள் விட்டம் அடங்கும். மனைவி, கணவனுக்குள் அடங்குவது போல!
* வட்டத்துக்குள் வெளியே விட்டம் இருக்க இயலாது; வட்டம் இல்லையேல் விட்டம் இல்லை! கணவனை விட்டகன்றால் மனைவி பட்டம் காலி.
* விட்டத்துக்கு ஆரங்கள் இரண்டு; இரு மடங்கு மதிப்பு தரும் கணவனை மனைவி விட்டமாகத் (தூணாகத்) தாங்குவாள்.
இதனை உணர்ந்து செயல்பட்டால், கணவன் - மனைவிக்கிடையிலான வாழ்க்கை எந்தப் பிரச்னையுமில்லாமல் 'பை (π) எனும் மாறிலியை முடிவில்லாது, அன்புடன் கடந்து போய்க் கொண்டேயிருக்கும். அப்புறமென்ன, இனி திருமணங்களுக்குச் செல்லும்போது ‘கணவன் மனைவி இருவரும் வட்டமும் விட்டமும் போல் வாழ்க’ என்று வாழ்த்திவிட்டு வாருங்கள்!

