தை பிறக்கப்போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். ஆம், விதைத்த பயிர்கள் விளைச்சல் கண்டு, அறுவடை செய்து தமிழர்கள் வாழ்வில் பொருளாதார வசந்தத்தை வீசும் மாதம். மண்ணுக்கும், கால்நடைகளுக்கும் மட்டுமின்றி, நாம் பசியாற உழைக்கும் உழவர்களுக்கும் நாம் மனதார நன்றி சொல்லி மகிழும் மாதம்.
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி. தேவையற்ற பழைய பொருட்களை அகற்றி, குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன் தை மகளை வரவேற்பது தமிழரின் மரபாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. பலரும் போகியன்று தங்கள் வீடுகளில் காப்புக்கட்டுவார்கள். சுத்தம் செய்த வீடுகளின் முன் வாசல், பின் வாசல்களில் காப்புக்கட்டுவதினால் தீய சக்திகளும் விஷ ஜந்துகளும் வீட்டில் நுழையாது என்பார்கள். நமது பண்டிகைகள் ஒவ்வொன்றையும் அர்த்தம் மிகுந்ததாகவே முன்னோர் வகுத்துள்ளனர். சங்கராந்தி காப்புக்கட்டிலும் அப்படியே. இந்தக் காப்புக்கட்டில் அப்படி என்ன சிறப்பு?
நம் தாத்தா, பாட்டிக் காலத்தில் வந்த காப்புக்கட்டில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கி கட்டியிருக்கும். பிரண்டை மற்றும் தும்பையின் மருத்துவ குணங்களை அறிவோம். தற்போது பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகள் அரிதாகிவிட்டதால் மஞ்சள் நிற ஆவாரைப் பூக்கள், வெண்ணிறப் பூக்களுடன் சிறுபீளை, பசுமையான வேப்பிலைகள் இவை மூன்றும்தான் காப்புக்கட்டில் இடம்பெறுகின்றன. சரி, எத்தனையோ மூலிகைகள் இருக்க, இந்த மூன்று மட்டும் ஏன் காப்புக்கட்டில் இடம் பெறுகின்றன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஆவாரை: ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்கிறது சித்தர் பாடல். உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை ஆவாரை. ஆவாரை வளர்க்க மெனக்கெடல் வேண்டாம். தரிசு என்றாலும் தானாக விளைந்து பூக்கும் தன்மை கொண்ட ஆவாரை சர்க்கரை மற்றும் புற்றுநோய் பாதிப்புக்குத் தீர்வாக இருக்கிறது. கிராமங்களில் அதிகம் காணப்படும் ஆவாரம் பூக்களை கொதிக்கவைத்து பனங்கற்கண்டு போட்டுக் குடிக்கும் டீக்கு தற்போது மவுசு அதிகம். இது சரும பிரச்னைகளை நீக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சி தருகிறது. இதுபோன்ற பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஆவாரை காப்புக்கட்டில் ஒன்றாக உள்ளது.
சிறுபீளை: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் இது, ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதப் பனியில் செழிப்பாக வளரும் தன்மை கொண்டது. சிறு பீளையின் எல்லா பாகமும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது சிறுநீரைப் பெருக்கி, கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் கரைப்பு போன்ற சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் ஆகிறது. மேலும், பல்வேறு மருத்துவ பலன்களைத் தருவதில் சிறந்தான சிறுபீளையை காப்புக் கட்டில் இடம் பெறச் செய்து நமக்கு இதன் அவசியத்தை உணர்த்தினர் நமது முன்னோர்.
வேப்பிலை: தற்போது சாலைகளிலும் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களில் அதிகம் காணப்படுவது வேப்பிலை மரம்தான். காரணம் பறவைகள் தின்று போடும் இதன் பழக்கொட்டைகள். வேப்பிலை பல உடல் பாதிப்புகளைத் தடுக்கும் சிறந்த கிருமி நாசினி. காற்றில் பரவும் கேடு தரும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் மக்கள் கூடும் கோயில் போன்ற இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுகிறார்கள். சரும நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்ட வேப்பிலை காப்புக்கட்டில் இடம்பெறுவதால் நம்மைச் சுற்றி இருக்கும் கிருமிகள் நீங்கும் என்ற அடிப்படையில்தான் காப்புக்கட்டில் வேப்பிலைக்கும் இடம் தந்தார்கள் நம் முன்னோர்கள்.
ஏதோ பெரியவர்கள் சொன்னார்கள் என்று இதைப் பின்பற்றுகிறோம் என்றில்லாமல், இதன் மகத்துவம் தெரிந்து பண்டிகைகளைக் கொண்டாடினால் நம் பிள்ளைகளுக்கும் நாம் விளக்கலாம்.