

பணிக்குப் போகும் பெண்களாக இருந்தாலும் சரி, வீட்டு நிர்வாகங்களை கவனிக்கும் இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, பட்ஜெட் விஷயத்தில் மிகவும் கவனமாகவே இருப்பார்கள். அதிலும் இந்த மளிகை சாமான்கள் காய்கறிகள் வாங்கும் விஷயத்தில் மீதம் பிடித்தால் மட்டுமே மாத இறுதியில் சமாளிக்க முடியும் என்னும் நிலையில் இருப்பவர்கள் நிச்சயமாக இதை கவனத்தில் வைத்து ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள்.
மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளில் மீதம் பிடித்து பணத்தை சேமிக்க முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை. இதோ எப்படி எதையெல்லாம் கடைபிடித்தால் மீதம் பிடித்து சேமிக்க முடியும் என்பதற்கான டிப்ஸ்கள் இந்த பதிவில் காண்போம்.
கடைக்குச் செல்லுமுன் பொருளுக்குத் தேவையான பணத்தை மட்டும் எடுத்துச் செல்லவேண்டும். கார்டு போன்றவைகள் இருந்தால் கணக்கும் தெரியாது. சேமிக்கவும் முடியாது. கணக்கின்றி அதிக பணத்தை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டிலிருந்தே பொருள்களுக்கு ஏற்ற பைகளை எடுத்துச்செல்ல வேண்டும். இல்லையெனில் பைகளுக்கு தனியே செலவழிக்க வேண்டிட நிலை ஏற்படும்.
பொதுவாக ஷாம்பு போன்ற பொருள்களை பாட்டில்களில் வாங்காமல் 2 ரூபாய் ஷேஷேக்களில் வாங்குவது அவற்றின் சிக்கனதுக்கு உதவுவதுடன் பணமும் மிச்சமாகும்.
ப்ரூ, ஹார்லிக்ஸ் போன்ற வகையறாக்களை பவுச்சில் வாங்கி வீட்டில் இருக்கும் பாட்டிலில் சேமிப்பது நல்லது. பவுச்சில் வாங்கும்போது பணம் மீதமாகும். இதேபோல்தான் எண்ணெய் போன்றவைகளும்.
20 ம் தேதி வந்தால் வீட்டில் வாங்கிய பொருள்கள் தீர்ந்து மேலும் வாங்க வேண்டியிருக்கும். அப்போது என்ன வாங்கவேண்டும் என லிஸ்ட் தயார் செய்து சென்றால் தேவையான பொருட்கள் மட்டும் வாங்கலாம்.
கடலைப்பருப்பு முதல் பொட்டுக்கடலை வரை அனைத்தையும் ஹோல்சேல் கடைகளில் தேவைக்கேற்ப வாங்குவது நல்லது. பாக்கெட்டில் வரும் பிராண்டட் கம்பெனியின் பொருள்கள் நிச்சயமாக விலை கூடுதலாக இருக்கும்.
தவிர்க்க முடியாத சூழலில் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் செல்லும் போது டிராலிகளை தவிர்ப்பது நல்லது. நமது கைகள் நமது பேச்சைக் கேட்காமல் தேவையற்ற பொருள்களை தூக்கி டிராலியில் சேர்க்கும். குறிப்பாக குழந்தைகள் உடன் வரும்போது இதை கவனியுங்கள்.
காய்கறிகளை வாங்கும்போது மால்கள் ஸ்டோர்களை தவிர்த்து பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் வாங்குவது நல்லது. ஃபிரெஷாகவும் இருக்கும். விலையும் மலிவாக கிடைக்கும். ஒன்றிரண்டு இலவசமாகவும் எடையில் நிற்கும்.
ஒவ்வொரு மாதமும் மளிகை வாங்கிய பில்களை பத்திரப்படுத்தி வைத்து அடுத்த மாதம் வரும் பில்லுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதனால் எந்த பொருள்கள் விலை கூட மற்றும் எது தேவையற்றதை வாங்கியுள்ளோம் என்று தெரியும்.
ஒவ்வொரு முறை கடைகளுக்கு செல்லும் முன் லிஸ்டில் உள்ள பொருள் சமையலறையில் இருக்கிறதா என செக் செய்துவிட்டு செல்லவேண்டும். ஏனெனில் எதில் அதை ஸ்டோர் செய்து வைத்தோம் என்பதை சமயங்களில் மறக்கும் வாய்ப்பு உண்டு.
இப்படி எல்லாம் மீதம் பிடித்தாலும் வாங்கிய பொருள்களை நீண்ட நாள் வைத்து தூக்கிப்போடுவதை தவிர்த்து தவறாமல் அவற்றை பயன்படுத்தினால் இன்னும் செலவழித்த பணத்திற்கு அதிக மதிப்புதான். இனி மளிகை வாங்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வரும் தானே?