
கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு நம்முடைய வருமானத்தை சரியாக நிர்வகிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து, வருமானத்திற்கேற்ப செலவு செய்வதும், வாழ்வில் சிக்கனமாக வாழவும் பழக வேண்டும். கடன் இல்லாமல் வாழ மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பட்ஜெட் போடுங்கள்: வரவு செலவு திட்டத்தை உருவாக்கி நமக்கு வரும் வருமானம் மற்றும் செய்ய வேண்டிய செலவுகளைக் கண்காணித்து ஒரு பட்ஜெட்டை உருவாக்கி செலவு செய்யப் பழகினால் கடன் இல்லாமல் வாழலாம். எதிர்பாராத செலவுகளுக்காக ஒரு அவசரகால நிதியை உருவாக்கிக் கொள்ளலாம். வருமானத்திற்குள் செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். சிலர் தேவைக்கு அதிகமாக செலவு செய்து கடனில் சிக்கிக் கொள்கிறார்கள்.
2. சிக்கனமாக வாழப் பழகுங்கள்: எது அவசர, அவசியத் தேவைகளோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செலவு செய்வதும், தேவையற்ற வீண் செலவுகளை கட்டுப்படுத்துவதும் அவசியம். நம்மிடம் இருப்பதைக் கொண்டு அதற்கு ஏற்றவாறு வாழப் பழக வேண்டும். எது அவசிய செலவு, எது ஆடம்பர செலவு என்பதில் தெளிவு இருக்க வேண்டும். விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை விட, அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது கடன் இல்லாமல் வாழ உதவும். குழந்தைகளுக்கும் இளம் வயதிலிருந்தே சிக்கனத்தை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.
3. வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்: நேர்மையான முறையில் வருமானத்தை அதிகரிப்பதற்கு நம்முடைய சம்பாதிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம். சம்பளத்தை மட்டும் நம்பாமல் பகுதி நேர வேலை அல்லது பகுதி நேர வணிகம் போன்றவற்றை, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் செய்து பணம் சம்பாதிக்கலாம். சிறு தொழில் போன்ற கூடுதல் வருமான வழிகளைத் தேடுவதும் வருமானத்தைப் பெருக்க உதவும். நம்முடைய எழுத்துத் திறமை, கற்பிக்கும் திறமை போன்ற பிற திறமைகளையும் பயன்படுத்தி வருமானம் ஈட்டலாம்.
4. சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள்: வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பதற்கும், அவசர ஆபத்துகளுக்கு உதவுவதற்காக தனியாக எடுத்து வைப்பதும் மற்றும் எதிர்கால நிதி பாதுகாப்பிற்காக முதலீடு செய்வதும் நல்லது. மருத்துவம் சார்ந்த அவசர கால தேவைகள், வாகன ரிப்பேர்கள் அல்லது திடீரென்று வேலையை இழக்கும் சமயத்தில் தேவைப்படும் பணம் போன்ற எதிர்பாராத செலவுகளை சமாளிப்பதற்கு சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஊதாரித்தனமாக செலவு செய்யாமல், எதிர்காலத்திற்காக சேமிப்பதையும், முதலீடு செய்வதையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
5. கடன் வாங்குவதைத் தவிருங்கள்: கடன் வாங்கி செலவு செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்கவும். இருக்கும் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்து கடன் இல்லாத சுதந்திரமான வாழ்வை வாழப் பழக வேண்டும். ஒரு கடனை அடைப்பதற்காக மற்றொரு கடனை வாங்குவது போன்ற தவறுகளை எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும். கடன் இல்லாமல் வாழ்வதே நிம்மதியான வாழ்க்கை என்பதை உணர்ந்து மனநிறைவுடன் வாழக் கற்றுக் கொள்வது நல்லது. கடன் என்னும் படுகுழியில் இருந்து மீள்வதற்கு நிதி மேலாண்மை என்பது மிகவும் முக்கியம்.
6. பொழுதுபோக்கை தொழிலாக மாற்றுங்கள்: பொழுதுபோக்கை ஒரு தொழிலாக மாற்றுவது சாத்தியம்தான். அதற்குத் தேவை கடின உழைப்பு. பொழுதுபோக்கை பொருளாதார ரீதியாகவும், லாபகரமான தொழிலாகவும் மாற்ற முடியும். நம்முடைய பொழுதுபோக்குகளை, குறிப்பாக ஓவியம், தையல், எம்பிராய்டரி, பேசும் திறன், பாடும் திறமை, கற்பிக்கும் திறன்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். படைப்பாற்றல் மிக்கவராக இருந்தால் கதைகள், ஜோக்குகள் என எழுதலாம். ஓவியங்களை கண்காட்சிகள் வைத்து பணம் சம்பாதிக்கலாம்.