
இப்பொழுதெல்லாம் கடைசி பெஞ்சு இல்லை என்று நடைமுறைப்படுத்த பள்ளிகளில் ஆயத்தம் ஆகி உள்ளோம். அதற்கு வட்டமாக நாற்காலிகளை அமைக்க வேண்டி இருக்கிறது. அப்படி அமைப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
முன்பெல்லாம் முன்னோர்கள் குளிர்காலத்தில் குளிர் காய்வதற்காக நெருப்புச் ஜுவாலையை சுற்றி வட்டமாக அமர்ந்து பேசுவார்கள், நடனம் ஆடுவார்கள், உணவு உண்பார்கள், குதூகலமாக கூத்தாடி மகிழ்வார்கள். அக்காலத்தில் ஒருவரோடு ஒருவர் வட்டமாக உட்கார்ந்து மனம் விட்டு உரையாடும் இடமாக நம் வீடு இருந்திருக்கிறது. வீடுகளில் சாப்பாட்டு மேஜையைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து மனம் விட்டுப் பேசும் பழக்கம் இன்றும் உண்டு. ஹோட்டல்களில், நடன அரங்குகளில், வைபவங்களில், கொண்டாட்டங்களில் இடம்பெறும் மண்டபங்களில் வட்டமேசை சுற்றி அமர்ந்து பேசுவது அப்பொழுதிலிருந்து நடைமுறையில் உள்ள வழக்கமே. அப்படிப் பேச்சுவார்த்தை இடம்பெறும் மாநாடுகளை, ‘வட்டமேசை மாநாடு’ என்று அழைத்தது வீட்டிலிருந்து தொடங்கியதால் ஏற்பட்ட முறைதான்.
இன்றும் ஏதாவது ஒரு சிறு கருத்தோடு பேசும் வட்டம் அமைத்து பிரச்னையை தீர்க்கும் முறை பரவி வருகிறது. நல்ல நோக்கத்திற்காகவே இத்தகைய வட்டங்கள் கூட்டப்படுகின்றன.
பேசும் வட்டம்: இங்கு ஐயங்களும், தப்பான அபிப்ராயங்களும் நீக்கப்படுகின்றன. ஒழுக்கப் பிரச்னைகள் சரி செய்யப்படுகின்றன.
புரிதலுக்கான வட்டங்கள்: முரண்பாடுகளை களைந்து நல்லெண்ணங்களை உருவாக்குதல், ஒருவரை ஒருவர் கலாய்த்தல் பழக்கத்தை நீக்குதல்.
மன ஆறுதல் வட்டங்கள்: இழப்புகளை சந்தித்தவர்களுக்கு அவற்றினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீண்டு வர ஆறுதல் கூறுவதற்கு ஏற்படுத்தப்பட்டது.
ஆதரவு வட்டங்கள்: ஆதரவு, உதவி வழங்குவதற்கு.
அமைதி காக்கும் வட்டங்கள்: வேலை இடங்களில், பாடசாலைகளில், சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து, குற்றங்களை நீக்கி சமாதானம் உண்டாக்க ஏற்படுத்தப்பட்டது.
சமூக வலுவூட்டல் வட்டங்கள்: சமூகப் பிரச்னைகளை அணுகி ஆரோக்கிய சமூகத்தை கட்டி எழுப்புவதற்காக.
முரண்பாடுகளை தீர்க்கும் வட்டங்கள்: முரண்பாடுகள், மன வேற்றுமைகள், கைகலப்புகள், வாய் தகராறுகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த வட்டம் பயன்படுகிறது.
கொண்டாட்ட வட்டங்கள்: ஒருவரை கௌரவித்தல், கொண்டாட்டங்களை அமைத்தல், பாராட்டி பரிசு வழங்குதல்.
இணைக்கும் வட்டங்கள்: போலீஸ் காவல் அல்லது சிறையிலோ இருந்து திரும்பியவர்களை சமூகத்துடன் இணைப்பதற்கு ஒரு வட்டம்.
தீர்ப்பு வட்டங்கள்: சட்டத்துறை நீதி பரிபாலனத்தை சார்ந்தவர்கள், மத குருமார்கள், சமூக சேவை ஸ்தாபனங்கள் போன்றவை கலந்து பாதிக்கப்பட்டவர்களையும், குற்றத்தைப் புரிந்தவர்களையும், அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும், அவர்களின் சுயமதிப்பு, தன்மான உணர்வு பாதிக்காதபடி நினைத்தலும், எதிர்காலத்தில் இனிமேல் அப்படி எதுவும் நடவாதபடி தடுப்பதற்காகவும் இது போன்ற வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
வட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், வட்டத்தின் ஊடாக உதவி செய்யும்போது பிறருக்கு உதவி செய்வதாக எண்ணாமல், நமக்கு நாமே உதவி செய்வதாகக் கருத வேண்டும் என்பதே. ஒரே குழுவாக இயங்குதல், யார் யார் உதவி செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. பெறுபவர், கொடுப்பவர் என்ற பேதம் இல்லாமல், ஒவ்வொருவரது தனித்துவமும் மதிக்கப்படுவது, வட்டங்களில் பங்கு பெறுபவர்கள் கூட்டுப் பொறுப்பு எடுக்க முன்வருவது, எல்லாவற்றிலும் ஒரே மனதாக முடிவு ஏற்பட, எடுக்கப்பட ஒத்துழைப்பது போன்றவற்றை அது கற்றுத் தருகிறது.