
உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலர் தங்கள் வீடுகளில் பாதுகாப்பிற்காகவும், பேரார்வம் (passion) காரணமாவும் நாய், பூனை, கிளி போன்ற விலங்கு மற்றும் பறவைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவற்றுள் சில விலங்குகள் அபாயகரமானவை என்பதாலும், வீட்டிலுள்ள உடைமைகளை சேதப்படுத்தும் குணம் கொண்டவை என்பதற்காகவும், அமெரிக்க அரசு சில வகை விலங்குகளை வீடுகளில் வளர்ப்பதற்குத் தடை விதித்துள்ளது. அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள விலங்குகளில் ஐந்தினைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. சிங்கம் (Lion): சிங்கத்தை வீடுகளில் வளர்ப்பது அபாயகரமானது என்பதை அனைவரும் அறிவோம். இதன் பிரம்மிக்க வைக்கும் உருவ அமைப்பு மற்றும் பலம் ஆகியவை, இதை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பது அபாயகரமானது என்பதை உணர வைக்கிறது. எனவே, டிசம்பர் 2022ல் முன்னாள் அதிபர் ஜோ பைடன், பூனை குடும்பத்தைச் சேர்ந்த சிங்கம், புலி போன்ற பெரிய சைஸ் கொண்ட விலங்குகளை நாடு முழுவதும் தனியார் உடைமையாக வளர்த்து வர தடை செய்து, Big Cat Public Safety Act என்ற சட்டத்தை இயற்றி வெளியிட்டுள்ளார்.
2. அணில் (Squirrel): பார்ப்பதற்கு சாதுவான பிராணியாகத் தோற்றமளித்தாலும், இதை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது பாதுகாப்பான செயலாகாது. அலாஸ்கா, அலபாமா உள்ளிட்ட அமெரிக்காவின் 26 மாநிலங்களில் அணில் வளர்ப்பது சட்ட விரோதமானது. அணிலின் கூர்மையான பற்களும் நகங்களும் வீட்டில் உள்ள சோபா, மேஜை போன்ற மரச் சாமான்களை சேதப்படுத்திவிடும். மேலும், இயற்கையாகவே உடலில் அதிகளவு சக்தி கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் காத தூரம் ஓடக்கூடிய அணிலை வீட்டிற்குள் அடைத்து வைப்பது சாத்தியமற்ற செயல்.
3. ரக்கூன் (Raccoon): சாது போன்ற முகமும் அழகிய தோற்றமும் கொண்ட ரக்கூன், தான் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூண்டை உடைத்துக் கொண்டு வெளிவரக் கூடியது. இது எந்த நேரம் என்ன செய்யும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. எந்த அறிகுறியும் காட்டாமல் திடீர் திடீரென ஆக்ரோஷமாகி அதகளம் பண்ணும். டெக்சாஸ் மற்றும் ஃபுளோரிடா போன்ற சில மாநிலங்கள் கடுமையான விதிகளின் கீழ், தனி நபர்கள் ரக்கூன் வளர்க்க அனுமதி அளித்திருந்தாலும், ரக்கூன் ஒரு ஆபத்தான செல்லப்பிராணியாகவே கருதப்படுகிறது.
4. முள்ளம்பன்றி (Hedgehog): முள் எலி என்றும் அழைக்கப்படும் இச்சிறிய விலங்கு கூர்மையான முட்களை உடல் மீது கொண்டுள்ளது. செல்லப் பிராணியாக இது வளர்க்கப்பட்டு வந்தபோதும், இதன் கூரிய முட்கள் இதனைக் கையாள்பவரை காயப்படுத்தி விடுவதாலும், இதன் உடலில் சல்மோனெல்லா என்ற தொற்று நோயை உண்டுபண்ணும் பாக்ட்டீரியாக்கள் இருப்பதாலும் கலிபோர்னியா, ஹவாய், நியூயார்க் சிட்டி ஆகிய இடங்களில், வீடுகளில் இதை வளர்க்க அனுமதி இல்லை.
5. விஷத் தன்மையுடயை பாம்புகள்: நல்லபாம்பு, கட்டுவிரியன் போன்ற விஷத் தன்மையுடைய பாம்புகளை செல்லப் பிராணியாக வளர்க்க அமெரிக்காவில் அனுமதி இல்லை. அவற்றின் விஷத்தை உற்பத்தி செய்யும் பைகள் நீக்கப்பட்ட பின்பும் கூட அனுமதி தரப்படுவதில்லை.