பிறர் உங்களை மதிக்க இந்த 9 பழக்கங்களுக்கு குட் பை சொல்லுங்கள்!

Respect
Respecthttps://www.freshbooks.com

ப்போதும் பிறர் நம்மை மதிக்க வேண்டும், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புவது சகஜம். பிறரின் மதிப்பையும் மரியாதையும் பெற ஒருவர் குட்பை சொல்ல வேண்டிய ஒன்பது விஷயங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கேட்காமல் உதவி செய்வது: பிறருக்கு உதவி செய்வதில் தவறில்லை. ஆனால், எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் உதவி செய்ய முடியாது. அப்படி செய்தால் அந்த உதவிக்கு மரியாதையே கிடையாது. எனவே, தேவைப்படும்போது மட்டும் உதவினால் போதும். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட தானாக வலிய போய் உதவுவது தவறு. அந்த உதவிக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.

2. அதிகமாக சாரி கேட்பது: சிலர் தேவையே இல்லாமல் சின்னச் சின்ன, தவறே செய்யாத விஷயங்களுக்குக் கூட மன்னிப்பு கேட்பார்கள். மன்னிப்பு கேட்பது மனமுதிர்ச்சியின் அறிகுறி. ஆனால், அதை தேவையில்லாத இடத்தில் அதிகமாக பயன்படுத்தும்போது உங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து, உங்கள் மீது மரியாதையையும் குறைக்கும். தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்கலாம். தேவையில்லாமல் கேட்கக் கூடாது.

3. பிறர் சொல்வதைக் கேட்காமல் இருப்பது: ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்கிற மனப்பான்மை எப்போதும் ஆபத்தில்தான் முடியும். குறைவாகப் பேசி நிறைய கேட்க வேண்டும். பிறரின் கருத்துக்களை மதிக்க வேண்டும். பிறர் பேசும்போது குறுக்கிடாமல் கேட்க வேண்டும். அப்போது உங்கள் மீது தானாகவே பிறருக்கு மரியாதை பிறக்கும்.

4. எதிர்மறையாக இருப்பது: சிலர் எந்த விஷயத்தையும் எதிர்மறையாகவே பார்ப்பார்கள். எதிர்மறையான புகார்கள், விமர்சனங்கள் போன்றவற்றை பேசுவார்கள். தொடர்ந்து எதிர்மறையை வெளிப்படுத்தினால் பிறர் உங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை குறையும். உங்களுடன் பழக விரும்ப மாட்டார்கள். நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வது அவசியம்.

5. நேர மேலாண்மையை கடைபிடிக்காமல் இருப்பது: சிலர் எந்த இடத்திற்கும் சரியான நேரத்திற்கு செல்ல மாட்டார்கள். தாமதமாகப் போவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். நேரம் என்பது ஒரு மதிப்பு மிக்க சொத்து. தாமதமாக செல்லும்போது பிறரின் நேரத்தையும் நீங்கள் மதிக்கவில்லை என்று பொருள். மேலும், அது ஒழுங்கின்மையை காட்டுகிறது. எனவே, பிறரின் மதிப்பீட்டில் உயர வேண்டும் என்றால் அவர்கள் நேரத்தை மதிக்க வேண்டும்.

6. சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல் இருப்பது: வாக்குறுதி தருவது எளிது. ஆனால், அதை நிறைவேற்றுவது கடினம். எனவே, ஒரு செயலைச் செய்ய முடியுமானால் மட்டுமே வாக்குறுதி தர வேண்டும். அப்படித் தந்துவிட்டால் எப்பாடுபட்டாவது அதை செய்து முடித்து விட வேண்டும். இல்லை என்றால் பிறர் உங்களை மதிக்க மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
கழுத்து விசிறிகள், கழுத்து ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வோம்!
Respect

7. தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது: தன் மீது தவறு என்று தெரிந்தால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கச் செய்யும். அதை விடுத்து தவறு செய்திருந்தபோதிலும் அதை ஒப்புக்கொள்ளாமல் இருந்தால் பிறர் உங்களை மதிக்க மாட்டார்கள்.

8. பணிவின்றி இருப்பது: பணிவு என்பது அடிமைத்தனம் அல்ல. அது ஒரு முக்கியமான நல்ல பண்பு. எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் பணிவுடைமையை கடைப்பிடித்தால் அவருக்கு பிறர் மதிப்பும் மரியாதையும் தருவார்கள். எனவே, பணிவு என்கிற நல்ல பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

9. பிறரை மதிக்காமல் இருப்பது: வயதில் சிறியவராக இருந்தாலும் அவருக்குரிய மரியாதையைக் கொடுப்பது மிகவும் முக்கியம். எடுத்தெறிந்து பேசுவது, பிறரை மதிக்காமல் நடந்துகொள்வது போன்றவற்றை கைவிட வேண்டும். அப்போதுதான் பிறர் உங்களை மதிப்பார்கள். பிறரிடம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com