

சமையலறையில் அன்றாடம் நாம் உபயோகப் படுத்தும் பொருட்களில் தவாவும் மிக முக்கியமான ஒன்றாகும். தோசை, பரோட்டா, ஆம்லெட், சப்பாத்தி போன்ற உணவுகள் ஏறக்குறைய நாம் தினமும் செய்யக் கூடிய உணவுகளாகும். அந்த காலத்திலே எல்லோருமே இரும்பினால் செய்யப்பட்ட தோசைக் கல்லை தான் உபயோகப் படுத்தினார்கள். ஆனால், இப்போதோ கண்ணைக் கவரும் வகையில் வகை வகையாக இந்த நான்-ஸ்டிக் தவாக்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. நான்-ஸ்டிக் தவாயில் தோசை சுட்டால் ஒட்டிக் கொள்ளவும் செய்யாது எண்ணெயும் அத்தனை தேவையில்லை என்று மிக அதிகமான மக்கள் அதைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.
பொதுவாகவே நான்-ஸ்டிக் தவாவை வாங்கும்போது அதனுடைய கறுப்பு நிறமும், பளபளப்பும் நம்மை அதிகளவில் ஈர்க்கும். தோசை அப்படியே அழகாக ஒட்டாமல் க்ரிஸ்ப்பியாக வரும் அழகைப் பார்த்து நாம் ரசிப்பதுண்டு. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அந்த பளபளப்பு மங்கி, நடுவில் வெள்ளையாக தேய்ந்து கீறல்களையும் நாம் காணலாம். ஆனாலும், இன்னும் கொஞ்ச நாள் பயன்படுத்தலாமே என்று நினைத்து கொண்டு உபயோகப் படுத்துவோம். அது நல்லதா? விளக்கமாக பார்க்கலாம்.
நம்முடைய சௌகரியத்திற்காக பயன்படுத்தும் ஒரு சில பொருட்களால் நமக்கே தெரியாமல் நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடும். அதிலும் குறிப்பாக இந்த நான்-ஸ்டிக் பாத்திரங்கள் இன்றைய நாட்களில் அன்றாட சமையலறையின் அத்தியாவசியப் பொருளாகவே ஆகி விட்டன. இந்த நான்-ஸ்டிக்கில் குறைந்த எண்ணெயுடன் சமைக்கலாம். மேலும் இதை சுத்தம் செய்வதும் சுலபம். ஆனால் ஒரு சில மாதங்கள் உபயோகப் படுத்திய பிறகு தவாவின் மேல் பரப்பில் கீறல்கள் ஏற்படுவதை நாம் காணலாம்.
இது ஆபத்தா? என்று கேட்டால் எந்த அளவிற்கு கீறல் ஏற்பட்டிருக்கிறதோ அதை பொறுத்து தான் சொல்ல முடியும்.
ஒரளவிற்கு லேசான மற்றும் மேலோட்டமான கீறல்கள் இருக்கும் பட்சத்தில் அதனால் பாதிப்பு இருக்காது.ஆனால், அதே சமயம் மிக அதிகளவில் மேற்பூச்சு ஆழமாகக் கீறப்பட்டிருந்தாலோ அல்லது மேற்பூச்சு உரிந்திருந்தாலோ அல்லது பொடிப் பொடியாக உதிர்ந்து, சிதைந்து போயிருந்தாலோ, உடனடியாக அந்தப் பாத்திரத்தை மாற்றுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
சேதமடைந்த மேற்பரப்பால், நான்-ஸ்டிக் தவாவின் வடிவமைப்பு மாறுவதோடு மட்டுமல்லாமல், சமையல் செய்வதிலும் கடினமாக இருக்கும். அது மட்டுமில்லீங்க, அதனால் நம்ம உடலுக்கும் கேடு விளைவிக்குமாம். உயிருக்கே ஆபத்தாக கூட இருக்கலாம்.
ஆமாங்க. கீறல்கள் உள்ள நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும் போது, உடல் நலத்திற்கு எதிர்பாராத சில அபாயங்களை அது ஏற்படுத்தலாம். அதனுடைய மேற்பரப்பில் உள்ள கீறல்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியிடக்கூடும் மேலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை உதிர்த்து, உணவை அசுத்தப்படுத்தக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் ஏற்படும் கீறல்கள், அதன் அடியில் உள்ள பூச்சு அடுக்குகளை வெளிப்படுத்தக்கூடும். நான்-ஸ்டிக் பாத்திரங்களில் கீறல் விழும் போது பெர்- மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (PFAS - - and polyfluoroalkyl substances) என்கிற கெமிக்கல்ஸ் வெளியேற்றப் படுகின்றன. இது உடல்நலத்திற்கு தீவிரமான கேடுகளை விளைவிக்கும்.
இந்த PFAS வெளிப்பாட்டால், கல்லீரல் பாதிப்பு, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், சிறுநீரகப் புற்றுநோய், விதைப்பைப் புற்றுநோய் போன்ற வியாதிகளும் உண்டாகலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு பாத்திரத்தின் மேற்பரப்பு சேதமடையும்போது, இந்த இரசாயனங்கள், குறிப்பாக அதிக வெப்பநிலையில், உணவுக்குள் ஊடுருவதறகான வாய்ப்பிருப்பதாகவும் கருதப் படுகின்றன.
ஆகவே நான்-ஸ்டிக் தவா அல்லது pan எதுவாக இருந்தாலும் சிறிதளவு கீறல் விழுந்த உடனேயே அதை மாற்றுவது தான் நல்லது.
சேதமடைந்த நான்-ஸ்டிக் பாத்திரங்களின் பூச்சுகளுக்குப் பின்னால் இருக்கும் மறைந்திருக்கும் ஆபத்துகளை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்; பாத்திரம் எப்போது பாதுகாப்பற்றதாக மாறுகிறது என்பதை அடையாளம் கண்டுகொள்வார்கள்; மேலும், தேய்ந்துபோன பாத்திரங்களை உடனடியாக மாற்றுவதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளக் கற்றுக்கொள்வார்கள்.