ஹோட்டல் டவல்கள் எப்போதும் இவ்வளவு வெண்மையாகவும் மென்மையாகவும் இருப்பதேன்?

soft-hotel-towels
soft-hotel-towels
Updated on

ரு நீண்ட பயணத்தின் களைப்புக்குப் பிறகு, வெந்நீரில் குளித்து, பஞ்சுபோல் மென்மையான வெள்ளை டவலில் உடலைச் சுற்றிக்கொள்வது ஒரு தனி சுகம். அந்த நிமிடத்தில் மனதுக்குள் ஒரு கேள்வி எழாமல் இருக்காது. “இந்த ஹோட்டல் டவல்கள் எப்போதும் இவ்வளவு வெண்மையாகவும் மென்மையாகவும் எப்படி இருக்கின்றன?”

இதே சந்தேகம் மீனாவிற்கும் வந்தது, அவள் அதனை தெரிந்து கொள்ள அம்மாவை நாடினாள். அந்தக் கேள்விக்கான பதிலை இன்று அம்மா மீனாவிடம் சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ஹோட்டல்களில் டவலை நேரடியாக துவைக்க மாட்டாங்க,” என்று அம்மா சொல்ல ஆரம்பித்தார். “முதலில் வெந்நீரில் சிறிது வெினிகரையோ அல்லது ஆக்சிஜன் ப்ளீச்சையோ கலந்து டவலை ஊறவைக்கிறார்கள். அதனால் அழுக்கும் எண்ணெய் கறைகளும் எளிதில் நீங்கிவிடும்.”

மீனா ஆச்சரியத்துடன் கேட்டாள்: “அதுக்கப்புறம்தான் துவைப்பாங்களா?” “ஆமாம்,” என்றார் அம்மா. “அதற்குப் பிறகு நல்ல தரமான டிடர்ஜெண்ட் பயன்படுத்தி சூடுநீரில் துவைப்பார்கள். இதனால் டவல் வெண்மையாகவும் சுத்தமாகவும் இருக்கும். ஆனால் அதுவே முழு ரகசியம் இல்லை.”

உண்மையில், ஹோட்டல்களின் பராமரிப்பு முறையே தனித்துவமானது. வீட்டில் இருப்பதைப் போல சிறிய மெஷின்கள் அல்ல; பெரிய (industrial washing Machine) இயந்திரங்கள்தான் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துணிகளை அளவுக்கு மீறி நிரப்பமாட்டார்கள். இதனால் ஒவ்வொரு டவலும் நன்றாக சுத்தமாகும்.

அதேபோல், டவலை அதிக வெப்பத்தில் காயவைத்து கடினமாக்காமல், மிதமான சூட்டில் மெதுவாக உலர்த்துகின்றனர். அதுவே அவற்றுக்கு அந்த மென்மையான பஞ்சு உணர்வைத்தருகிறது.

“நம்ம வீட்டுல எல்லா துணியையும் ஒரே நேரத்துல மெஷின்ல போட்டு அடைச்சு துவைப்போமே,” என்று மீனா சிரித்தபடி சொன்னாள்.

“அதுதான் வித்தியாசம்,” என்று அம்மா சிரித்தார். “ஹோட்டல்களில் ஒரே டவலை தொடர்ந்து பயன்படுத்த மாட்டார்கள். ஒவ்வொரு அறைக்கும் பல செட் டவல்கள் இருக்கும். கொஞ்சம் பழையதாகத் தோன்றினாலே மாற்றிவிடுவார்கள்.”

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் சுவை இனி உங்கள் வீட்டிலும்! செஃப் (Chef) சொன்ன ரகசியம்!
soft-hotel-towels

மேலும், அவர்கள் பயன்படுத்தும் டவல்களும் சாதாரண தரத்திலானவை அல்ல. எகிப்தியன் காட்டன் அல்லது உயர்தர பருத்தியால் தயாரிக்கப்பட்ட தடிமனான டவல்கள். பல முறை துவைத்தாலும் மென்மை குறையாமல் இருக்கும்படி அவை தயாரிக்கப்படுகின்றன.

இதிலிருந்து நாம தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. சுத்தம் மற்றும் பராமரிப்பு என்பவை ஒரு வீட்டின் ஒழுக்கத்தையும் அழகையும் வெளிப்படுத்துகின்றன. பொருட்களை வாங்குவது மட்டுமல்ல; அவற்றை அக்கறையுடன் பராமரிப்பதில்தான் உண்மையான நாகரிகம் இருக்கிறது என்பதையும் இந்த ஹோட்டல் டவல்கள் நமக்குச் சொல்லிக்கொடுக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com