செல்பி மோகமும் அதனால் ஏற்படும் ஆபத்தும்!

Selfie craze and its dangers
Selfie craze and its dangershttps://tamil.asianetnews.com

புகைப்படம் எடுப்பது யாருக்குத்தான் பிடிக்காது? புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது, எதிர்காலத்தில் அந்தத் தருணத்தை வாழ்க்கை முழுவதும் நினைவுகூர்ந்து பார்ப்பது என்பது அலாதியான சுகம்தான். எனினும் முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது என்பது வருடத்திற்கு ஒருமுறையே நடக்கும். ஏதாவது விசேஷ நாட்களில் குடும்பத்துடன் சென்று போட்டோ ஸ்டூடியோவில் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால், டெக்னாலஜி வளர்ச்சிக்கு பிறகு எல்லோருடைய கைகளிலும் கைப்பேசி வந்துவிட்டது. அது நமக்கு பலவிதத்தில் பயன்பட்டாலும், முக்கியமாக இளைய தலைமுறைகள் செல்பி எடுக்கவே அதிகம் இதைப் பயன்படுத்துகின்றனர். கைப்பேசியை வைத்து தன்னைத்தானே புகைப்படம் எடுப்பதே செல்பியாகும்.

செல்பி வந்த பிறகு யாரிடமும் சென்று புகைப்படம் எடுக்கச் சொல்லி கேட்க வேண்டிய அவசியமில்லாமல்போனது. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்வது என்பது உலகம் முழுவதும் பிரபலமாக தொடங்கியது. செல்பி எடுப்பதால் எப்படி நன்மைகள் உண்டோ, அதேபோல தீமைகளும் உண்டு. அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்க்கலாம்.

செல்பி என்றதும் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்துவிட்டுச் செல்வது என்று கிடையாது. பல புகைப்படங்கள் எடுப்பது அதை ஒன்றோடு ஒன்று ஒப்பிடுவது போன்ற நேரத்தை விரயம் செய்யும் விஷயங்களை செய்து கொண்டிருப்பதாகும். அதனால் எந்த லாபமும் இருக்கப்போவதில்லை. எனினும் புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு நண்பர்களின் லைக்ஸ்காக காத்திருப்பதும், ‘அழகாக இருக்கிறது’ போன்ற கமெண்ட்கள் வந்தால் மகிழ்வதும், ‘நன்றாக இல்லை’ என்று கூறினால் வருத்தப்படுவது போன்று தேவையில்லாமல் மனநிலையை பாதிக்கக்கூடியதாக செல்பி உள்ளது.

தன்னை அழகாகவும் பர்பெக்டாகவும் காட்ட வேண்டும் என்று தன்னுடைய தனித்துவத்தையும், அழகையும் மறைத்து அதிகமாக பில்டர் பயன்படுத்துவது, எடிட்டிங் ஆப்களை பயன்படுத்தி ஆள் அடையாளமே தெரியாத வண்ணம் நம் புகைப்படத்தை மாற்றி பதிவிடுவது போன்று தன்னையறியாமலேயே வேறு ஒரு பிம்பத்தைத்தான் என்று வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்துவது போன்ற செயல்களை செல்பி மோகத்தால் இளைய சமூகம் செய்து கொண்டிருக்கிறது. சில சமயங்களில் செல்பி எடுக்கும்போது ஆர்வக்கோளாறில் எங்கேயிருக்கிறோம் என்பதை மறந்துகூட தங்களுடைய அந்தரங்க விஷயங்களை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்திவிடும் கூத்தெல்லாம் நடக்கிறது என்பதும் உண்மையான விஷயமாகவே உள்ளது.

சமீபத்தில் செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காக சிங்கத்தின் இருப்பிடத்தில் குதித்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம் நாம் அறிந்ததே!

செல்பி எடுக்க வேண்டும் என்று மலை உச்சியில் நின்று எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் எடுப்பது, சாகசம் செய்வதாக எண்ணி கட்டடத்தின் உச்சியில் நின்று எடுப்பது போன்ற விபரீதமான செயல்களை செல்பி என்ற பெயரில் செய்கிறார்கள். இதனால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் திசுக்களை அழிக்கும் காய்கறிகள் எவை தெரியுமா?
Selfie craze and its dangers

இதுபோன்ற செல்பிகள் எடுப்பதற்கான முக்கிய காரணம், திரில் வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காகவும், சோஷியல் மீடியாவில் கிடைக்கும் லைக்ஸ்காகவுமே இப்படி உயிரை கூட பணயம் வைக்கும் அளவிற்குச் செல்கின்றனர். பெரும்பாலும் ஆண்களை விட, பெண்களே அதிக செல்பிகள் எடுப்பதாக கூறப்படுகிறது.

அதற்காக செல்பி எடுப்பதே தவறு என்று கூறிவிட முடியாது. ஒரு விஷயத்தில் கெட்டது இருந்தால் அதில் நல்லதும் இருக்கும். செல்பி எடுப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், பல நினைவுகளை உருவாக்கும், நண்பர்களுடனும், குடும்பத்தினரிடமும் பந்தத்தை உருவாக்கும், மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கிக் கொடுக்கும்.

‘செல்பி’ என்பது எப்போதுமே ஆபத்தான விஷயம் கிடையாது. அதை எடுக்கும் இடம், நபர், நேரம், காலம் போன்றவற்றை சரியாக பார்த்துக்கொண்டால், காலத்திற்கும் அழியாத நினைவுகளை அசைப்போட நமக்கு சேமித்து கொடுக்கும் நினைவுப் பெட்டகமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com