மர்மமான முறையில் தாக்கும் நோய் என்றால் அது புற்று நோய்தான். தினசரி இந்த நோய் பேசுபொருள் ஆகிவிட்டது. இதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு விதங்களில் உணர்த்தப்படுகிறது. இந்நோய் தாக்கத்திலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்!
குடைமிளகாய்: இதில் உள்ள 'கேப்சைனின்' என்னும் உட்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. தற்போது புற்றுநோய் மக்களை அமைதியாக இருந்து தாக்குவதால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வர புற்று நோய் தாக்காமல் தடுக்கலாம்.
பச்சை மிளகாய்: ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்று நோய் வரும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் பச்சை மிளகாயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முட்டைக்கோஸ்: இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலுக்கும் புற்று நோய்க்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
பாகற்காய் இலைச்சாறு: இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறனுடையது. எனவே, இந்த இலைச்சாற்றுடன் தேன் சேர்த்து அருந்தி வரலாம். இலையில் சூப் செய்து வாரம் இரண்டு முறை அருந்தலாம். இதனால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
பீன்ஸ்: இதில் வைட்டமின் ஓ இருந்து புது செல்களை உருவாக்குவதால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கின்றது. ஆதலால் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே பரவாமல் தடுக்குமாற்றலை பீன்ஸ் கொண்டுள்ளது.
அலோ வீரா ஜூஸ்: இந்த ஜூஸை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அருகம்புல் ஜூஸ்: அருகம்புல் ஜூஸ் புற்று நோய்க்கு எதிரானது. ஆதலால் சுகாதாரமான முறையில் அருகம்புல்லை அரைத்து வடிகட்டி அருந்தி வர புற்றுநோய் வர விடாமல் தடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு: நுரையீரல் மற்றும் தொண்டை புற்று நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டது சர்க்கரைவள்ளி கிழங்கு. இதில் அதிகப்படியான பீட்டா கரோட்டின் உள்ளது. அந்த கரோட்டின் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. 100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் இருக்கிறது. இதனால் இவை புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் திறன் கொண்டுள்ளது.
பச்சை பட்டாணி: இதில் உள்ள 'கௌமெஸ்டிரால்' எனப்படும் பைட்டோ -நியூட்ரியன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும். வயிற்று புற்றுநோய்க்கு பச்சை பட்டாணி அருமருந்தாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு மில்லி கிராம் பட்டாணி சாப்பிட்டால் புற்றுநோயை எதிர்க்க பெரிதும் வழிவகுக்கும்.
புரோக்கோலி: இது புற்றுநோயின் ஆரம்பக்கட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது. நோய்களை எதிர்த்து போராடும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களை ஊக்குவிக்கிறது. ஆதலால் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பதுடன் இது மருந்தாகிறது.
காலிஃப்ளவர்: காலிஃப்ளவரில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. ஒரு கப் வேக வைத்த காலிபிளவரில் வைட்டமின் சி, பி5, பி6, மங்கனீஸ், ஒமேகா 3 பேட்டி ஆசிட் தாராளமாக உள்ளது. வைட்டமின் சி மிகுந்த நீர்த்தன்மையுள்ள இது ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருளாகும். இதில் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் உள்ளதால் மலச்சிக்கலுக்கு நல்லதாக இருக்கும். லேசான கசப்பு சுவை இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். நிறைய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. குருசிஃபெரஸ் குடும்ப வகை தாவரமான இது கேன்சரை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
கேரட்: கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத் தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல், கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால் தங்கம் போன்று மேனி மின்னும். புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் என்னும் சத்தானது புற்று நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அழிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றல் கேரட்டில் உண்டு.