

கணவன், மனைவி உறவில் சின்னச் சின்ன சண்டைகள் வருவது இயல்புதான். இருவருக்குள்ளும் அவர்களது எண்ணங்கள், புரிதல், பேச்சு, விருப்பங்கள் மற்றும் ஒரே மாதிரி யோசிக்க முடியாத பல காரணங்களால் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் தம்பதிகளுக்குள் உறவு இனிமையாக அமைய செய்ய வேண்டியவை குறித்து இப்பதிவில் காண்போம்.
கம்யூனிகேஷன் கோல்: கணவன், மனைவி உறவு இனிமையாக, இலகுவாக செல்ல கோல் செட்டிங் செய்ய வேண்டும். பெரும்பாலான பிரச்னைகள் புரிதல் இன்மையால் வருவதால் வாழ்க்கைத் துணை வாய் திறந்து கூறாத ஒரு விஷயத்தைப் பற்றி தவறாக யூகம் செய்வதோ, சொல்லும் விஷயத்தை தவறாகப் புரிந்து கொள்வதோ கூடாது. ஒரு விஷயத்தை பேசும்போது தெளிவான மனநிலையுடன் கண்களைப் பார்த்து மெதுவான குரலில் பேச வேண்டும். ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கிடாமல் அதை காது கொடுத்துக் கேட்பதோடு, அவரது கேரக்டரை மாற்ற முயற்சிக்காமல் புரிந்து கொள்ள வேண்டும்.
எமோஷனல் கனெக் ஷன் கோல்: கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து இருப்பதால் கணவரை பாதித்த ஒரு விஷயத்தை கட்டாயம் மனைவி அவரது இடத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். இதேபோல், மனைவியை பாதித்த ஒரு விஷயத்தையும் கணவர் மனைவியின் இடத்தில் இருந்து புரிந்துகொள்ளும் எம்பதி இருவருக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், சின்னச் சின்ன விஷயங்களுக்கு ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வது, எவ்வளவு வேலையாக இருந்தாலும் 15 நிமிடங்கள் அமர்ந்து பேசுவது போன்றவை கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும்.
ரெஸ்பான்சிபிலிட்டி ஹவுஸ் ஹோல்ட் கோல்: கணவன், மனைவி இருவரும் வீட்டின் பொறுப்புகளைப் பிரித்துக் கொள்வதால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால், வீட்டின் செலவுகள், சேமிப்பு, மாதத்துக்கான பட்ஜெட், குழந்தை வளர்ப்பு போன்றவற்றை இருவரும் கலந்து பேசி பகிர்ந்து கொள்ளும்போது பொருளாதாரம் மேம்படுவதோடு இருவருக்குள்ளும் இணக்கம் ஏற்படும்.
பர்சனல் க்ரோத் கோல்: கணவன், மனைவி இருவரும் தங்களை தனிப்பட்ட முறையில் வளர்த்துக்கொள்ளும் படிப்பு, வேலை, தனித்திறமை, ஹெல்த், பிட்னஸ், கார்டன் என எதுவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஊக்கப்படுத்திக் கொள்வதோடு, உதவலாம். இதில் ‘உன்னால் முடியாது, நீ வேஸ்ட்’ என கூறுவது உறவுகளை கசப்பாக்கி விடும் என்பதால் ஒருவருக்கொருவர் உதவி கொண்டு தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கான்ஃபிலிக்ட் ரிஸல்யூஷன் கோல்: தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்வதும், எல்லா பிரச்னைகளுக்கும் நீதான் காரணம் என்று குற்றம் சாட்டுவதும் கசப்பான மனநிலையை உருவாக்கும் என்பதால் பிரச்னை வரும்போது இருவருமே அவரவர் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இருவரும் ஒருவர் மீது ஒருவர் யார் அதிகம் அன்பு காட்டுகிறோம் என்பதில் போட்டி போட்டால் குடும்பம் நல்லறமாக என்றென்றும் விளங்கும்.
மேற்கூறிய இலக்குகளை கணவன், மனைவி இருவரும் மேற்கொள்ளும்பொழுது அவர்களுக்குள் உறவுகள் இனிமையாக இருக்கும்.