

பண்டைய காலங்களில் கிரீஸ் மற்றும் ரோம் நாட்டில் ஒருவர் பெறும் வெற்றி, புகழ் மற்றும் பெருமையடையச் செய்யும் செயல்களை செய்யும்போது அவருக்கு விருது வழங்கி கௌரவிப்பதுண்டு. அப்போது லாரல் (laurel) மரத்து இலைகளாலான வளையம் ஒன்றை அவரின் தலையில் அணிவது வழக்கமாக இருந்தது. பிற்காலத்தில் சில வகைச் செடிகளின் இலைகள், தீய சக்திகளை அழித்து நேர்மறை சக்திகளை உருவாக்க உதவும் என நம்பப்பட்டது.
அதாவது இயற்கையால் படைக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருள், கவலைகளும், மன அழுத்தங்களும் நிறைந்ததொரு இடத்தில் இருக்குமானால், அது அவ்விடத்து எதிர்மறை விளைவுகள் அனைத்தையும் நீக்கி, அமைதியும் ஆரோக்கியமும் நிறைந்த சூழலை உருவாக்க உதவும் என்று கூறப்பட்டது.
சீனாவில், பழங்கால பாரம்பரிய வழக்கப்படி 'லாரல்' என்பது நிதி நிலைமையின் உச்சத்தை அடைவதற்கான நினைவூட்டல் என அர்த்தம் கொள்ளப்பட்டது. இந்த வழக்கமானது ஒரு மாயாஜால வித்தை போல் வெற்றிகளைக் கொண்டுவந்து குவிக்காது. அதற்கு ஃபெங் ஷுய் சாஸ்திரத்தில் கூறியபடி தொடர் பயிற்சி மேற்கொள்வதின் மூலமே ஒருவரின் நிதி வளங்கள் மேன்மையடையும்.
ஒவ்வொரு தனி மனிதரும் தனது பொருள் சார்ந்த வாழ்வியலில் கடைப்பிடிக்கும் ஒழுங்குமுறையே அவரின் வெற்றிகளை நிர்ணயம் செய்கின்றன. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரோக்கியமான நிலை பெற லாரல் உதவுகிறது. பாதுகாப்பு, கூர்நோக்கு மற்றும் தெளிந்த மனநிலையுடன் முடிவுகளை எடுப்பதற்கு லாரல் துணை புரிவதாக ஃபெங் ஷுய் கூறுகிறது.
இந்தத் தத்துவத்தின்படி ஒரு பிரிஞ்சி இலையை (Bay leaf) உங்கள் பர்ஸினுள் வைத்துக்கொள்வது நேர்மறை சக்தியை உண்டுபண்ண உதவுகிறது. ஃபிரஷ்ஷான ஒரு பிரிஞ்சி இலையை பர்ஸில் வைத்திருந்து, அது காய்ந்து விடும்போது உடனடியாக மாற்றிவிடுவது அவசியம். இது உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களின் அளவில் விழிப்புணர்வு மிக்க அமைப்பை உருவாக்க உதவும். பண வரவில் சமநிலைத்தன்மையை ஏற்படுத்த பிரிஞ்சி இலையை பர்ஸுக்குள் வைப்பதற்கு சில விதிமுறைகளும் உள்ளன.
மிக கவனமுடன் பர்ஸின் நடுப்பகுதியில் ரூபாய் நோட்டுகளை வைக்குமிடத்தில் இந்த இலையை முழுசாக வைக்க வேண்டும். இலை மடங்காமலும், கசங்கி நசுங்கிய தேவையற்ற தாள்களுக்கிடையில் வைக்கப்படாமல் இருப்பதும் அவசியம். ஒழுங்கற்ற முறையில் பர்ஸில் பொருட்களை வைப்பது, தினசரி வரவு செலவுகளை கையாள்வதில் குழப்பத்தை உண்டுபண்ணும். கிழிந்த அல்லது கிழிசலை ஒட்டுப்போட்டு மறைத்து வாலட்டை உபயோகிப்பது இழப்பையும் கஷ்டங்களையும் வரவழைக்கும்.
பிரிஞ்சி இலை ஒன்றை பர்ஸுக்குள் முறைப்படி பத்திரப்படுத்தி வைப்பது, உங்கள் நிதி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கவனமுடன் கையாண்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டலே ஆகும்.