வீட்டுக்கு கெஸ்ட் வந்தா பதற்றமாகிறதா? இந்த 'சிம்பிள்' மேஜிக் டிப்ஸ் உங்களுக்குத்தான்!

'Simple' Magic Tips
'Simple' Magic Tips
Published on

விருந்தோம்பல் என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய பண்பாடு. உறவினர்களும் நண்பர்களும் நம் வீட்டிற்கு வருவது மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஆனால், இன்றைய காலகட்டத்தில் விருந்தினர்களை உபசரிப்பது என்பது பல இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய "ஸ்ட்ரெஸ்" தரும் விஷயமாக மாறிவிட்டது.

விதவிதமாகச் சமைக்க வேண்டும், வீட்டை அலங்கரிக்க வேண்டும் எனத் தங்களை வருத்திக்கொண்டு, விருந்தினர்கள் வந்து செல்லும் வரை சமையலறையை விட்டு வெளியே வராத ஒரு சூழல் நிலவுகிறது. இறுதியில் உடல் சோர்வும், மன அழுத்தமுமே மிஞ்சுகிறது. இந்தத் தவிப்பைத் தவிர்த்து, நாமும் மகிழ்ந்து விருந்தினர்களையும் மகிழ்விக்கச் சில எளிய மாற்றங்களைச் செய்தாலே போதுமானது.

முதலில் விருந்து என்றாலே ஐந்து வகை பொரியல், இரண்டு வகை இனிப்பு எனப் பெரிய பட்டியலைத் தயார் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும். பலவகை உணவுகளைச் சமைத்துச் சோர்ந்து போவதைவிட, உங்களுக்கு நன்றாகச் சமைக்கத் தெரிந்த ஏதாவது ஒரு "ஸ்பெஷல்" உணவை மிகச் சிறப்பாகச் சமைத்துக் கொடுங்கள்.

மற்ற பக்க உணவுகளை மிகவும் எளிமையாக வைத்துக் கொள்ளலாம். விருந்தினர்கள் உங்கள் அன்பான பேச்சையும், உங்களோடு செலவிடும் நேரத்தையுமே அதிகம் விரும்புவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் சமையலறையில் செலவிடும் நேரம் குறைந்து, நீங்கள் அவர்களுடன் அமர்ந்து பேச அதிக நேரம் கிடைக்கும்.

விருந்தினர் வருகையின்போது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்க "முன்னேற்பாடு" மிக அவசியம். அழைப்பு மணி ஒலிக்கும்போது சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தால், அது உங்களுக்கும் டென்ஷனை உருவாக்கும், விருந்தினர்களுக்கும் ஒருவித சங்கடத்தைத் தரும். எனவே, மசாலா அரைப்பது, காய்கறிகளை நறுக்கி வைப்பது மற்றும் வீட்டைத் தயார் செய்வது போன்ற வேலைகளை முதல் நாள் இரவே திட்டமிட்டு முடித்துவிடுங்கள். இப்படிச் செய்வதால், விருந்தினர்கள் நுழையும்போது புத்துணர்ச்சியோடு புன்னகை மாறாமல் அவர்களை வரவேற்க முடியும்.

அடுத்ததாக, பட்ஜெட் விஷயத்தில் தெளிவு தேவை. ஆடம்பரமான வெளிநாட்டுப் பழங்களோ அல்லது கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த குளிர்பானங்களோதான் சிறந்த உபசரிப்பு என்று நினைக்கத் தேவையில்லை. மாறாக, நம் வீட்டில் இருக்கும் எலுமிச்சை பழத்தில் நன்னாரி சர்பத் அல்லது குளிர்ச்சியான மோர் போன்றவற்றை வழங்கலாம். இது உடல்நலத்திற்கும் நல்லது. பட்ஜெட்டையும் மீறாது. விருந்தினர்கள் சென்ற பிறகு "தேவையில்லாமல் இவ்வளவு செலவாகிவிட்டதே" என்ற மன வருத்தம் வராமல் பார்த்துக் கொள்வது மன அமைதிக்கு மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
குளியலறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க எளிய டிப்ஸ்!
'Simple' Magic Tips

பெரும்பாலும் விருந்தினர்களாக வருபவர்கள், குறிப்பாக நெருக்கமானவர்கள், ‘நான் ஏதாவது உதவி செய்யவா?’ என்று கேட்பார்கள். அப்போது ‘அதெல்லாம் வேண்டாம், நீங்கள் அமருங்கள்’ என்று மறுக்காமல், சிறிய வேலைகளை அவர்களிடம் ஒப்படைக்கலாம். தட்டுக்களை எடுத்து வைப்பது அல்லது காய்கறி நறுக்க உதவுவது போன்ற வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவது உங்களுக்கு வேலைச் சுமையைக் குறைப்பதோடு, அவர்களுக்கும் உங்கள் வீட்டில் ஒரு அந்நிய உணர்வு ஏற்படாமல் சொந்த வீடு போன்ற நெருக்கத்தைத் தரும்.

இறுதியாக, வீட்டின் அழகைவிட உங்கள் மனநிலையே முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள். வரவேற்பறையும் கழிவறையும் சுத்தமாக இருந்தாலே போதுமானது. விருந்தினர்கள் உங்கள் வீட்டின் தூசியைப் பார்க்க வருவதில்லை; உங்கள் அன்பைப் பார்க்க வருகிறார்கள். நீங்கள் சோர்வாகவும் கோபமாகவும் இருந்தால், அது அந்தச் சூழலையே கெடுத்துவிடும். எனவே, எளிய திட்டமிடலுடன் புன்னகையோடு அவர்களை உபசரியுங்கள். அன்பான உபசரிப்பே சிறந்த விருந்தோம்பல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com