
கோடை காலம் தொடங்கிவிட்டது, வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் உடல் நலத்தைப் பேணுவது ஒருபுறம் இருக்க, உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதே பெரிய சவாலாக மாறிவிடுகிறது. குறிப்பாக, பால் போன்ற பொருட்கள் எளிதில் புளித்து, கெட்டுப்போக வாய்ப்புள்ளது. குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடுகளில் இது தினசரி பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் கவலை வேண்டாம். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், கோடை வெப்பத்திலும் பாலை ஃப்ரெஷ்ஷாகப் பாதுகாக்கலாம்.
பாலை நன்றாகக் காய்ச்சிய பிறகு, அதை உடனடியாக ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள். பாத்திரத்தை கீழே வைத்து, அதன் சூடு முழுமையாக ஆறும் வரை காத்திருக்கவும். சூடாக இருக்கும்போது திடீரென அதிக குளிர்ச்சிக்கு மாற்றுவது, பாலில் உள்ள புரதங்களை பாதித்து விரைவில் கெட்டுப்போகச் செய்யும். நன்கு ஆறிய பிறகு மூடி போட்டு ஃபிரிட்ஜில் வைக்கலாம். சூடாக இருக்கும்போதே மூடினால், ஆவி சேர்ந்து கெட்டுவிடும்.
பால் கொதித்து இறக்கிய பிறகு, அதில் ஒரு சிட்டிகை கல் உப்பைச் சேர்ப்பது நல்லது. உப்பு, பாலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும். இதுபோலவே, சில துளசி இலைகளையோ அல்லது புதினா இலைகளையோ சூடான பாலில் சேர்ப்பது, அதன் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையால் பாலை நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்க உதவும். இந்த வழிமுறைகள் பாலின் ஆயுளை நீட்டிக்க உதவும்.
ஃபிரிட்ஜ் இல்லாத சூழலில், அவசரமாகப் பாலைக் குளிர்விக்க வேண்டியிருந்தால், நன்கு ஆறிய பாலில் சில ஐஸ் கட்டிகளைச் சேர்க்கலாம். இது பாலை விரைவாகக் குளிர்வித்து, மேலும் சில மணி நேரங்களுக்கு அதன் ஆயுளை நீட்டிக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமானது, பால் காய்ச்ச அல்லது ஊற்றி வைக்கப் பயன்படுத்தும் பாத்திரம் மிகவும் சுத்தமாகவும், ஈரம் இல்லாமலும் இருக்க வேண்டும். சிறிதளவு அழுக்கு அல்லது ஈரம் இருந்தாலும், அது பாலை மிக வேகமாக கெட்டுப்போகச் செய்துவிடும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கோடையில் பால் கெட்டுப்போகும் கவலையின்றி இருக்கலாம்.