இனி 'படி படி'னு கத்த வேண்டாம்! குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட 7 எளிய வழிகள்!

Children Study Tips - படிக்கும் ஆர்வம்
Children Study Tips - படிக்கும் ஆர்வம்
Updated on

கோடை விடுமுறை முடிந்து இந்த கல்வியாண்டிற்கு பள்ளிகள் துவங்கிவிட்டன. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உள்ள வீட்டில் காலை நேர பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. இனி அனைவரும் வீட்டிலும் படி, படி என்ற வார்த்தை திரும்பத் திரும்ப ஒலிக்க ஆரம்பித்துவிடும். அந்த வகையில் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் டிப்ஸ்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

நேர நிர்வாகத்தை பழக்கப்படுத்த வேண்டும்

காலை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்புவர். அதன் பிறகு அவர்களுக்கு படிப்பதற்கான நேரம், விளையாடுவதற்கான நேரம், அவர்களுக்கு பிடித்த செயல்கள் செய்வதற்கான நேரத்தை சரியான முறையில் ஒதுக்கி அதனை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது படிப்பில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர்.

கவனத்தை அதிகரிக்கும் சிறிய இடைவெளி

தொடர்ச்சியாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து குழந்தைகளை படிக்கச் சொல்லாமல் குறிப்பிட்ட நேரம் படித்த பிறகு சிறிய இடைவெளி எடுக்க பழக்கப்படுத்த வேண்டும். உதாரணமாக 30 நிமிடங்கள் படிக்கும் குழந்தைகளுக்கு 5 நிமிடம் இடைவெளி விடுவது புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த ஓய்வெடுக்கும் டெக்னிக் குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்க செய்து படிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

Children Study Tips - படிக்கும் ஆர்வம்
Children Study Tips - படிக்கும் ஆர்வம்AI Image

நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் குறிப்பெடுத்தல்

புத்தகத்தை முழுவதும் திரும்பத் திரும்ப படிக்காமல் ஒரு முறை படிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. அவ்வாறு குறிப்பு எடுத்துக் கொள்ளும்போது பாடங்களை நினைவில் வைத்துக் கொண்டு படிப்பது எளிதாக இருப்பதோடு, விரைவாகவும் படிக்க முடியும்.

புரிந்து படித்தல்

பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்து படிப்பதை விட, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்க குழந்தைகளுக்கு ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, கற்றல் திறன் மேம்பட்டு அவர்களது திறமை மேம்பாடு அடையும்.

அமைதியான சுற்றுப்புற சூழல்

குழந்தைகள் படிக்கும் இடம் அமைதியாகவும் ,கவனச் சிதறல் ஏற்படாத வண்ணமும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் குழந்தைகள் ஒருமுகப்பட்டு எவ்வித கவனச்சிதறல் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

தன்னம்பிகை அதிகரிக்கும் பாராட்டு

குழந்தைகள் அடையும் வகையில் எளிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அந்த இலக்குகளை குழந்தைகள் அடையும் போது அவர்களைப் பாராட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
வெறும் படிப்பு மட்டும் போதாது! பிள்ளைகளை வெற்றியாளராக்கும் அந்த 7 ரகசியங்கள்!
Children Study Tips - படிக்கும் ஆர்வம்

பெற்றோர் குழந்தைகள் இணைந்த படிப்பு

பெற்றோர்களும் குழந்தைகளுடன் இணைந்து தினமும் படிப்பு குறித்து பேசவேண்டும். அவ்வாறு செய்வதால் படிப்பில் குழந்தைகள் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைவர். மேலும் அவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும்போது படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து அதிக மதிப்பெண்கள் பெறுவர்.

குழந்தைகளிடம் படி, படி என கூறுவதை விட அவர்களுடன் இணைந்து படிப்பதும், படிப்பு குறித்து பேசுவதும், படிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க சரியாக திட்டமிட்டு நேரத்தை ஒதுக்கி கொடுப்பதும் மிகவும் முக்கியமாகும்.

தினமும் வீட்டில் நடக்கும் 'படிப்பு யுத்தத்திற்கு' முற்றுப்புள்ளி வைத்து, குழந்தைகள் தாங்களாகவே முன்வந்து புத்தகத்தை கையில் எடுக்கும் மாபெரும் மாற்றத்தை உங்கள் இல்லத்தில் காணமுடியும். பள்ளிப் பாடங்களை மன அழுத்தமின்றி எதிர்கொண்டு, அவர்கள் அதிக மதிப்பெண்களை அள்ளுவதுடன், அவர்களின் கற்றல் திறனும் பன்மடங்கு உயரும்.

logo
Kalki Online
kalkionline.com