

அக்னி நட்சத்திரம் வெயில் அனலாக கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏசி இல்லாமல் தூங்க முடியாது என்ற நிலை ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகிறது. இரவு முழுவதும் ஏசி ஓடினால் கரண்ட் பில் ஷாக் அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஏசியை ஆப் செய்த சிறிது நேரத்திலேயே திரும்பவும் வியர்க்க ஆரம்பித்து விடுகிறது. அந்த வகையில் சில எளிய வழிமுறைகளை கையாண்டால் ஏசியை ஆஃப் பண்ணினாலும் அறை இரவு முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். அவற்றை இப்பதிவில் காண்போம்..
சிறிது நேரம் மட்டும் ஏசியை ஓடவிட்டு ஆப் செய்யும் பொழுது அறையை விட்டு வெப்பம் வெளியேறாமல் அறையின் சுவர்கள், பர்னிச்சர் அனைத்தும் சூடாகவே இருக்கும். அதனால் சிறிது அதிக நேரம் ஏசியை ஓடவிட்டு ஆப் பண்ணினால் அறையின் குளிர்ச்சி அதிக நேரம் நீடிக்கும்.
கதவு ஜன்னல்களை சீல் செய்யுங்கள்
கதவு ஜன்னல்களுக்கு இடையில் இருக்கும் சிறிய இடைவெளிகளை அடைக்க டோர் சீல் அல்லது தடிமனான திரைச்சீலைகளை உபயோகிக்கும்போது அறையில் இருக்கும் குளிர்ச்சி காற்று வெளியேயும், வெளியில் இருக்கும் அனல் காற்று உள்ளேயும் வராமல் அறை நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும்.
திரைச்சீலைகள் தடிமனாக இருக்கட்டும்
வெளிர் நிற தடிமனான திரைச்சீலை அல்லது பிளாக் அவுட் ஸ்கிரீன்களை அறைக்கு பயன்படுத்தும்போது பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் உள்நுழைந்து அறையை சூடாக்காது. ஏனெனில் சூரிய வெளிச்சமே அறையின் வெப்பத்திற்கு காரணமாகிறது .இதனால் ஏசியை இரவில் ஆப் செய்தாலும் அறை வெகு நேரம் குளிர்ச்சியாக இருக்கும்.
மிதமான வேகத்தில் ஃபேனை இயக்கவும்
ஏசியை ஆப் செய்த பிறகு சீலிங் ஃபேன் அல்லது டேபிள் பேனை மீடியம் ஸ்பீடு பயன்படுத்தி சுழலவிடும்போது அறை முழுவதும் குளிர்ச்சியான காற்று மெதுவாகப் பரவி நீண்ட நேரம் அறை குளிர்ச்சியாக இருக்கும். விரைவாக பேனை ஓடவிட்டால் அறையில் இருந்து குளிர்ச்சி காற்று சீக்கிரமே வெளியேறி அறை வெப்பமடைந்துவிடும்.
எலக்ட்ரானிக் பொருட்களை தவிர்க்கவும்
அறையில் வெப்பத்தை உருவாக்கும் லேப்டாப், லைட்ஸ், மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை உபயோகிப்பது அறையின் வெப்பத்தை அதிகரிக்க செய்யும். ஆகவே ஏசியை ஃஆப் செய்த பிறகு இவற்றை உபயோகப்படுத்தாமல் இருந்தாலே அறை நீண்ட குளிர்ச்சியாக இருக்கும்.