
எளிமையான வாழ்க்கையில் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ்வதில் இருக்கும் சுகம், வேறு எதிலும் கிடையாது. நம்மிடம் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடையவும், வாழ்க்கையில் கிடைத்துள்ள நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தவும், மன நிறைவுடன் வாழவும் எளிமையான வாழ்க்கையே சிறந்தது. எளிமையான வாழ்வு வாழ்வதில் உள்ள நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. மன அழுத்தமின்றி வாழலாம்: வாழ்வில் எளிமையாக இருப்பது என்பது தேவைகளைக் குறைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கிச் செல்வதாகும். தேவைகளைக் குறைப்பதன் மூலம் பணத்தைப் பற்றிய கவலையோ, மன அழுத்தமோ ஏற்படாது. இதனால் மன அமைதி உண்டாகும்.
2. சுற்றுச்சூழல்: தேவைகளைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை நம்மால் குறைக்க முடியும். இது இயற்கையை பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியர்களுக்கு ஒரு நல்ல உலகை விட்டுச் செல்லவும் உதவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் அனைவருக்கும் மிகவும் அவசியம்.
3. உறவுகள் வலுப்படும்: எளிமையான வாழ்க்கையில், உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம்மால் உறவுகளை வலுப்படுத்த முடியும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிட முடியும். இது உறவுகளை வலுப்படுத்த உதவியாக இருக்கும்.
4. வாழ்க்கையை திட்டமிட உதவும்: தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடாமல் இருந்தால் முக்கியமான காரியங்களில் நம்மால் கவனம் செலுத்த முடியும். இந்த நேர மேலாண்மையை கடைப்பிடிக்க அது நேரத்தை மிச்சப்படுத்தி வாழ்க்கையை திட்டமிட உதவும்.
5. உடல், மன ஆரோக்கியத்தை பேண உதவும்: எளிமையான வாழ்க்கை முறை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல் மனதை லேசாக வைத்துக்கொள்ள உதவும். இது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
6. பொருளாதார சிக்கனம்: தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் அனாவசிய செலவுகள் குறைந்து சேமிப்பதில் கவனம் செலுத்த முடியும். எப்பொழுதும் எளிமையே இனிமை என்பதை உணர்ந்தால் உடல், மனம் இரண்டையும் நன்கு பேணிக் காப்பதுடன் தேவையற்ற பொருளாதார சிக்கலையும் தவிர்க்கலாம். எளிமையான வாழ்க்கைப் பயணத்தின் முக்கியப் பகுதியாக பொருளாதாரத்தைக் கூறலாம். தேவையில்லாமல் ஷாப்பிங் செய்வதைத் தவிர்ப்பதும், வரவுக்கேற்ற செலவு செய்யாமல் சிறிதளவு சேமிப்பதும், அவசரத்திற்கு உதவும் வகையில் தனியாக சேமிப்பை ஒதுக்கவும் செய்வது வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டு செல்லும்.
7. அதிக நேரம்: வாழ்க்கையை எளிமைப்படுத்துவதன் மூலம் அதிக ஓய்வு நேரம் கிடைக்கும். நடை பயில்வதற்கும், விரும்பிய புத்தகங்கள் படிப்பதற்கும், பயணங்கள் மேற்கொள்வதற்கும், நண்பர்களுடன் பேசிப் பழகுவதற்கும் நேரம் கிடைக்கும். எளிமையாக இருப்பதன் மூலம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற முடியும்.