
கலப்படம் என்பது சாதாரணமாக பல வகையான உணவுப் பொருட்களிலும் செய்யப்படுவதாக கேள்விப்படுகிறோம். பொருட்களின் தோற்றத்தில் கவர்ச்சி கூட்டவும், விலை குறையச் செய்யவும் கலப்படம் செய்யப்படுகிறது. பொருள்களின் தன்மைக்கேற்ப, சாக்பீஸ் தூள், டால்கம் பவுடர், மரத்தூள், பப்பாளி விதைகள் மற்றும் பென்ஸோயில் பெராக்ஸைட் போன்ற பொருட்கள் கலப்படத்திற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன.
இவை உணவுப்பொருளின் ஊட்டச்சத்தின் அளவைக் குறையச் செய்வதோடு அஜீரணம், மூச்சு விடுவதில் பிரச்னை மற்றும் நீண்ட நாள் உபத்திரம் தரக்கூடிய உடல் நலக் கோளாறுகளை உண்டுபண்ணச் செய்யும். கலப்படமற்ற கோதுமை மாவை கண்டுபிடிப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.வாட்டர் டெஸ்ட்: ஒரு டம்ளரில் சிறிது கோதுமை மாவைப் போட்டு அதில் தண்ணீர் ஊற்றினால் மாவு அடியில் தேங்கி நிற்கும். மாவில் ஸ்டார்ச் சேர்க்கப்பட்டிருந்தால் நீரின் நிறம் பால் போல் வெண்மை நிற தோற்றம் தரும். அது கலப்படமானது.
2.அயோடின் டெஸ்ட்: சிறிதளவு கோதுமை மாவில் சில துளிகள் அயோடின் கரைசலை சேர்க்கும்போது மாவு கருநீல நிறமாக மாறினால் அதில் ஸ்டார்ச் கலந்திருப்பது உறுதியாகும். அது கலப்படத்தின் அடையாளம்.
3.மண் அல்லது சாக்பீஸ் தூள் டெஸ்ட்: ஒரு ஸ்பூன் கோதுமை மாவை தண்ணீரில் கலந்து சில நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்கவும். பின் நீருக்கடியில் வெள்ளை நிறத்துகள்கள் அல்லது மண் போன்ற பொருள் காணப்பட்டால் அது கலப்படமான மாவு.
4.டேஸ்ட் டெஸ்ட்: சிறிது கோதுமை மாவை வாயில் போட்டால் அது சிறிதளவு இனிப்பு சுவையுடனிருந்தால் அது சுத்தமான மாவு. லேசான கசப்பு அல்லது வித்யாசமான சுவை கொண்டிருந்தால் அது கலப்படம் செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
5.டெக்ச்சர் டெஸ்ட்: சிறிது கோதுமை மாவை எடுத்து விரல்களுக்கிடையே வைத்து தேய்த்துப் பார்த்தால் அது கலப்படமற்றதாயின் மிக மிருதுவான தன்மையுடன் இருக்கும். நற நற தன்மையுடனிருந்தால் பவுடராக்கிய மண் துகள் சேர்ந்திருப்பது உறுதியாகும்.
6.எரித்துப் பார்த்தல்: ஒரு தட்டில் சிறிது கோதுமை மாவை வைத்து அதன் மீது நெருப்பு வைத்தால் மாவு கிட்டத்தட்ட முழுவதும் எரிந்து சிறிதளவு சாம்பல் மீந்திருக்கும். சாம்பலின் அளவு அதிகமாயிருந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட மாவு என தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் கடையிலிருந்து வாங்கி வரும் கோதுமை மாவு சுத்தமானதா இல்லையா என்று சந்தேகம் வந்தால் மேலே கூறிய ஆறு டெஸ்ட்களில் ஒன்றிரண்டை செய்து பார்த்து சுத்தத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.