
கோடை விடுமுறை வந்துவிட்டால் குழந்தைகளுக்கு ஒரே குஷி. ஆனால், சில பெற்றோர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். அது எல்லாம் பள்ளிக்கூடப் பிரச்னைதான்! எந்த பள்ளியில் சேர்ப்பது? அல்லது எந்த பள்ளிக்கு மாற்றுவது போன்ற குழப்பங்கள் பெற்றோருக்குப் பெரிய சவால்! அந்நேரங்களில் என்னென்ன விஷயங்களைப் பெற்றோர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?
நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
குழந்தைகளின் முக்கியத்துவம்:
முதலில் குழந்தைகள் இந்த மாற்றத்தைப் பற்றி தெளிவாகவும், உற்சாகமாகவும் உணர வேண்டும். அவர்களின் அச்சங்கள், ஆசைகள் மற்றும் ஆர்வங்களைப் புரிந்துகொள்ள, அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.
பாடத்திட்டம், பாடங்களுக்கு அப்பாற்பட்ட அவர்களின் விருப்பங்கள், பயிலப் போகும் இடத்தின் சூழ்நிலை எவ்வாறு இருக்க வேண்டும், அதன் கட்டமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதைக் கேளுங்கள். இதனால் குழந்தைகளின் பள்ளிப் பருவம் சூப்பராக தொடரும்.
வசதிகள்: இருப்பிடத்திற்கு அருகாமையில் பள்ளி உள்ளதா? இடைப்பட்ட போக்குவரத்து வகைகள் (Transportation options) எத்தனை? தினசரி சுலபமாக போகமுடியுமா? போன்ற விஷயங்கள் உங்கள் தேர்வில் பங்குபெற வேண்டும். பயணத்தில் சேமிக்கப்படும் நேரமானது, கற்றல் மற்றும் ஓய்வெடுக்கும் தருணங்களாக குழந்தைகளால் கையாள முடியும். இதுபோக பள்ளியின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை இன்றையச் சூழலில் பெற்றோர்கள் தேர்வுகளில் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன.
தற்போதைய போக்குகள்:
தொழில்நுட்பம் - ஒருங்கிணைந்த கற்பித்தல் (Technology-integrated teaching), உணர்ச்சி நுண்ணறிவு (Emotional intelligence) போன்ற நவீன கல்வி பாடங்கள் கொண்டதாகத் தேர்ந்தெடுக்கும் பள்ளி இருக்கிறதா என்பதைப் பெற்றோர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.
பிறரின் கருத்து மற்றும் விளம்பரங்களின் பங்கு:
நண்பர்கள், உறவினர்களின் பரிந்துரைகள் ஆரம்பக்கட்டத்தில் நமக்குப் பல நுண்ணறிவுகளைத் தரும் என்றாலும், அவை மட்டுமே ஒரு பள்ளியின் தரத்தைத் தீர்மானிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது .
அதேபோல், பள்ளி நிறுவன விளம்பரங்கள் அவர்களின் பலத்தை வெளிப்படுத்தும். ஆனால், அவர்களின் நிதர்சன (Reality) பலவீனங்களை வெளிப்படுத்துவதில்லை. எனவே, பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும். முடிந்தால் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ள பாருங்கள். இதனால் அங்குள்ள நிதர்சன சூழலை உங்களால் உணர முடியும்.
ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தரவேண்டும் என்று நினைத்துத்தான் இந்தப் பள்ளியில் சேர்க்கும் விஷயத்தில் செயல்படுவீர்கள்.
மேலே குறிப்பிட்ட இந்த விஷயங்களோடு உங்கள் சூழ்நிலை கருத்தில்கொண்டு பிள்ளைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு நல்ல பாதையை அமைத்துத் தாருங்கள்.