நாம் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து மிகச்சிறந்த வசதிகள் கொண்ட போனை வாங்குகிறோம். ஆனால், அந்தப் போனைப் பாதுகாப்பதற்காக நாம் வாங்கும் மலிவான அல்லது அதீத அலங்காரம் கொண்ட 'பேக் கவர்கள்' (Back Cases) அந்த போனின் செயல்திறனையே பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
"என் போனில் சிக்னலே கிடைப்பதில்லை, இன்டர்நெட் மிகவும் மெதுவாக இருக்கிறது" என்று நெட்வொர்க் நிறுவனங்களைத் திட்டுவதற்கு முன்பு, உங்கள் போன் உறையைச் சற்று உற்றுநோக்க வேண்டியது அவசியம்.
உங்க மொபைலுக்கு ஏற்ற சிறந்த கவரை வாங்க...
கண்ணுக்குத் தெரியாத ஆண்டெனா: ஒவ்வொரு மொபைல் போனுக்குள்ளும் சிக்னலைப் பெறுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஆண்டெனா' பொருத்தப்பட்டிருக்கும். இவை காற்றில் இருக்கும் ரேடியோ அலைகள் மூலம் டவருடன் தொடர்புகொள்கின்றன. இந்த ஆண்டெனாவை மறைக்கும் வகையில் நாம் பயன்படுத்தும் உறைகள், சிக்னல் கிடைப்பதில் பெரும் சிக்கலை உருவாக்குகின்றன.
குறிப்பாக, அழகாக இருக்கிறது என்பதற்காகப் பலரும் உலோகத்தால் ஆன அல்லது காந்தம் பொருத்தப்பட்ட உறைகளை விரும்பி வாங்குகிறார்கள். உண்மையில் இவை சிக்னலுக்கு ஒரு இரும்புத் திரை போலச் செயல்பட்டு, அலைவரிசையைத் தடுத்து நிறுத்துகின்றன அல்லது திசை திருப்புகின்றன. இதனால் உங்கள் போனில் முழுமையான சிக்னல் கிடைப்பது தடைபடுகிறது.
சிலர் போன் கீழே விழுந்தால் உடையக்கூடாது என்பதற்காக மிகத் தடிமனான பிளாஸ்டிக் அல்லது ரப்பர் உறைகளைப் பயன்படுத்துவார்கள். நீங்கள் நகர்ப்புறங்களில், டவருக்கு மிக அருகில் இருக்கும்போது இது பெரிய பிரச்சனையாகத் தெரியாது. ஆனால், கிராமப்புறங்கள், லிப்ட் அல்லது அடித்தளங்கள் போன்ற சிக்னல் குறைவாகக் கிடைக்கும் இடங்களில், இந்தத் தடிமனான உறைகள் எஞ்சியிருக்கும் சிக்னலையும் போனுக்குள் வரவிடாமல் தடுத்துவிடும்.
அதேபோல, சந்தையில் "கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் கவர்கள்" என்ற பெயரில் விற்கப்படும் பொருட்களும் ஆபத்தானவையே. இவை கதிர்வீச்சைத் தடுப்பதாகச் சொல்லிக்கொண்டு, போனுக்குத் தேவையான அத்தியாவசிய சிக்னலையும் முடக்கிவிடுகின்றன.
பேட்டரி இழப்பு: தவறான கவரைப் பயன்படுத்துவது சிக்னலை மட்டும் பாதிப்பதில்லை; அது உங்கள் பேட்டரியையும் விரைவாகக் காலி செய்யும். எப்படியென்றால், சிக்னல் தடைபடும்போது, டவருடன் தொடர்புகொள்ள உங்கள் போன் அதிகப்படியான சக்தியைச் செலவிட்டு சிக்னலைத் தேடும். இந்தத் தொடர் தேடுதலால் போன் சூடாவதுடன், பேட்டரியும் மளமளவெனக் குறையும்.
எனவே, சிலிகான் அல்லது மென்மையான பிளாஸ்டிக் உறைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது. இவை அலைவரிசையைத் தடுப்பதில்லை. எல்லாவற்றையும் விடச் சிறந்தது, அந்தந்த போன் நிறுவனங்களே தயாரிக்கும் ஒரிஜினல் கவர்களைப் பயன்படுத்துவதுதான். ஏனெனில், ஆண்டெனா எங்குள்ளது என்பதை அறிந்து அவர்கள் அதை வடிவமைத்திருப்பார்கள்.
உங்கள் போனில் அடிக்கடி கால் கட் ஆகிறதா அல்லது இணைய வேகம் குறைவாக உள்ளதா? அப்படியென்றால், ஒருமுறை உங்கள் போன் கவரை கழற்றிவிட்டுப் பரிசோதித்துப் பாருங்கள். வேகம் அதிகரித்தால், அந்த கவரைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.
உங்க மொபைலுக்கு ஏற்ற சிறந்த கவரை வாங்க...