

வாழ்க்கையில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது, அந்தத் திறமையைச் செதுக்க ஒரு வெறித்தனமான மனநிலை தேவை. கோபி பிரையன்ட் (Kobe Bryant) கூடைப்பந்து விளையாட்டின் ஜாம்பவான்; "மாம்பா மெண்டாலிட்டி" டெக்னிக் மூலம் எப்படி வெற்றி சிகரத்தை அடையலாம் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்.
"நேற்றைய உங்களைவிட இன்று ஒரு படி சிறப்பாக மாறுவது" என்பதே இதன் அடிப்படை. இதை உங்கள் அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்தலாம் என இந்தப் பதிவில் பார்ப்போம்.
காலை 4 மணி ரகசியம்:
கோபி பிரையன்ட் மற்ற வீரர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதே, அதிகாலை 4 மணிக்கே தனது பயிற்சியைத் தொடங்கிவிடுவார். மற்றவர்கள் பயிற்சியைத் தொடங்கும்போது, அவர் ஏற்கனவே இரண்டு முறை பயிற்சி முடித்திருப்பார்.
உங்கள் துறையில் நீங்கள் சிறந்தவராக மாற வேண்டுமென்றால், மற்றவர்களைவிட அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டும். சீக்கிரம் எழுவது என்பது வெறும் நேரம் சார்ந்தது மட்டுமல்ல, அது உங்கள் மன உறுதியைக் குறிக்கிறது. தினமும் காலையில் மற்றவர்கள் எழுவதற்கு முன்பே உங்கள் வேலையைத் தொடங்குங்கள். அந்த 'கூடுதல் நேரம்' உங்களை பல வருடங்கள் முன்னால் கொண்டு செல்லும்.
தோல்வியைக் கண்டு அஞ்சாதிருத்தல்:
ஒரு போட்டியில் கோபி தொடர்ந்து ஐந்து முறை பந்தை இலக்கில் போடத் தவறினாலும், ஆறாவது முறை அதைச் செய்ய அஞ்சமாட்டார். "தோல்வி என்பது ஒரு முடிவு அல்ல, அது ஒரு தகவல்' என்பது அவர் கருத்து.
ஒரு தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது ஒரு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலோ சோர்ந்து விடாதீர்கள். "ஏன் தோற்றோம்?" என்று ஆராயுங்கள். தோல்வி என்பது நீங்கள் எங்கு முன்னேற வேண்டும் என்பதைக் காட்டும் கண்ணாடி. பயத்தை ஒதுக்கிவிட்டு, அடுத்த முயற்சியைத் துணிச்சலுடன் தொடங்குங்கள்.
விவரங்களில் கவனம் செலுத்துங்கள்:
கோபி தனது ஆட்டத்தை வீடியோ எடுத்து, அதில் தனது கால் அசைவுகள் முதல் மூச்சுவிடும் விதம் வரை ஒவ்வொன்றையும் நுணுக்கமாகக் கவனித்துத்திருத்துவார். அதேபோல உங்கள் வேலையை மேலோட்டமாகச் செய்யாதீர்கள். அதில் இருக்கும் மிகச்சிறிய விஷயங்களைக் கூட கவனியுங்கள். ஒரு மென்பொருள் உருவாக்குநராக இருந்தால் உங்கள் கோடிங்கில் நேர்த்தி இருக்கட்டும்; ஒரு மாணவராக இருந்தால் ஒவ்வொரு பாடத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். சிறு சிறு நுணுக்கங்களே உங்களை ஒரு 'மாஸ்டராக' மாற்றும்.
உங்களுக்கு நீங்கள் தான் போட்டி:
"மாம்பா மெண்டாலிட்டி" என்பது அடுத்தவனைத் தோற்கடிப்பது அல்ல; உங்களை நீங்களே முந்துவது. நேற்று நீங்கள் செய்த வேலையை விட இன்று சிறப்பாகச் செய்ய முடியுமா என்று பாருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்துங்கள். உங்களின் நேற்றைய சாதனையே இன்றைய இலக்காக இருக்கட்டும். தினமும் 1% முன்னேற்றம் அடைந்தால் கூட, ஒரு வருடத்தில் நீங்கள் வியக்கத்தக்க மாற்றத்தைக் காண்பீர்கள்.
ஓயாத உழைப்பு:
கடுமையான காயங்கள் ஏற்பட்ட போதும், வலியைப் பொறுத்துக் கொண்டு கோபி விளையாடினார். அவர் சொல்லும் ஒரு முக்கியமான விஷயம்: 'நிச்சயமற்ற தன்மையிலும், வலியிலும் கூட தொடர்ந்து செயல்படுவதுதான் உண்மையான உறுதி.’
வாழ்க்கையில் எல்லா நாட்களும் உற்சாகமாக இருக்காது. சில நாட்கள் சோம்பலாக இருக்கும், சில நாட்கள் தடைகள் வரும். அந்த நேரத்திலும் "இன்று நான் செய்தே தீருவேன்" என்று உங்கள் இலக்கை நோக்கி நகர்வதே உங்களை வெற்றியாளராக மாற்றும். சாக்குப்போக்குச் சொல்வதை முற்றிலும் தவிருங்கள்.
மாம்பா மெண்டாலிட்டி என்பது ஒரு இலக்கு அல்ல, அது ஒரு தொடர் பயணம். உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளும் ஒரு கலை. இன்று முதல், "என்னால் முடியும், எதையும் தாங்குவேன், இன்னும் சிறப்பாகச் செய்வேன்" என்ற உறுதியுடன் செயல்படுங்கள். உலகம் உங்கள் காலடியில்!