சிரிப்பு, சிரிப்பு, சிரிப்பு... அதுவே சிறப்பு சிறப்பு சிறப்பு! கொஞ்சம் சிரிங்க பாஸ்!

Smile
Smile
Published on

மகிழ்ச்சியான நேரத்தில் நாம் வெளிப்படுத்தும் உணர்வே சிரிப்பு. சிரிக்கக் தெரிந்த மிருகத்தை மனிதன் என்கிறோம். சிரிப்பு மட்டுமே, வயது, பாலினம், நிறம், தேசம், இனம் எல்லாவற்றையும் கடந்து செல்லக் கூடியது. சிரிப்பினால் எளிதாகப் பிறரது இதயத்தைக் கவர முடியும். சிரிப்பு மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆனால், என் சிறுவயதில் சத்தம் போட்டுச் சிரிப்பது மோசமான செயல் என்றுதான் எனக்கு போதிக்கப்பட்டது!

பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 200 முதல் 300 முறை வரை சிரிக்கிறது‌. அது வளர வளர அந்த எண்ணிக்கை குறைந்து, ஒரு நாளைக்கு 20 முறைதான் சிரிக்கிறது. குழந்தைகள் அதிகமாக சிரிப்பதால்தான் அழகாக இருக்கிறார்கள். சில விநாடிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களையே சிரிப்பு அழகு படுத்துகிறது எனில், நாம் வாழ்நாள் முழுவதும் சிரித்துக்கொண்டே இருந்தால், அந்த  வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

சிரிப்பு, தமிழில் இளநகை, குமிண்சிரிப்பு, குறுநகை, குறுஞ்சிரிப்பு, சிறுநகை, செல்லச் சிரிப்பு, புன்முறுவல், முகிழ்நகை, மூரல் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வெடிச்சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பு, விஷமச் சிரிப்பு, விரக்திச் சிரிப்பு, வேதனைச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு எனச் சிரிப்பில் பல வகைகள் உள்ளன.

தம் சொந்த வாழ்வில் பலவிதமான காயங்கள் இருந்தாலும், அதையெல்லாம் மறைத்து ஊருக்கு ஆனந்தம் கொடுத்தவர் சார்லி சாப்ளின். சிரிப்பின் அருமையை அவரை விட வேறு யாராலும் கற்பிக்க முடியாது.

லியோனார்டோ டாவின்சி வரைந்த மோனாலிசாவின் மர்மப் புன்னகை பொதிந்த படம் உலகப்புகழ் பெற்றது. இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு ‘புத்தரின் புன்னகை’ என்று சங்கேதப் பெயர் வைத்திருந்தார்கள். பழங்காலச் சிற்பங்களின் இதழ்களில் நெளியும் புன்னகை இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன.

அமெரிக்க வடிவமைப்பாளரான பெர்க் இல்ஹன் என்பவர் ஒரு புதுமையான முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கினார். அந்தக் கண்ணாடியில் சாதாரணமாக முகத்தைக் காண முடியாது. நாம் சிரித்தால்தான், அதில் நம் முகம் தெரியும். முக உணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் இந்தக் கண்ணாடியை உருவாக்கினார். சிரிப்பை எல்லாருக்கும் பரப்ப நவீன உத்தியாக, அவர் இந்தக் கண்ணாடியை வடிவமைத்தார்.

நம் வாழ்க்கை எந்நேரமும் மற்ற மக்களுடன் தொடர்பு கொள்ளும்படியாகவே அமைந்திருக்கிறது. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் முகமே அழகான முகம். பேரானந்தத்தைப் பிரதிபலிக்கும் முகமே சிரிக்கும் முகம். சிரிப்பு  நமக்கு அழகிய தோற்றத்தை அளித்து, ஒர் அழகிய கலைப்பொருளாக நம்மை மாற்றுகிறது.

வார்த்தைகளால் சாதிக்க முடியாத செயலை புன்னகை சாதித்துவிடும். சிரிப்பதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டம் சீர்பட்டு இதயத்திற்கு இதம் கிடைக்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரப்புவதால், மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன.15 நிமிடச் சிரிப்பு என்பது, இரண்டு மணி நேரம் தூங்கி எழும்போது கிடைக்கும் புத்துணர்ச்சி மட்டுமல்ல, வாழ்நாளில் கூடுதலாக இரண்டு நாட்களும்தான்.

மருத்துவரின் நம்பிக்கையூட்டும் புன்னகை, நோயைக் குணப்படுத்துகிறது. ஓர் ஊக்கமளிக்கும் புன்னகை வெற்றியையும், ஒரு நேசமான புன்னகை காதலையும் நமக்கு அள்ளித்தருகிறது. முன்பின் அறியாதவரைக்கூட சிறு புன்னகை நட்பாக்கிவிடுகிறது. சிரிப்பு நம் கவலைகளை எல்லாம் மறக்க வைக்கிறது. உடல்நலனோடு மனநலனையும் சீர்படுத்தும் வல்லமை கொண்டது.

முகத்தில் இளமையைத் தக்க வைக்க சிரிப்பு பெரிதும் உதவுகிறது. சிரிப்பதால் பல கலோரிகள் எரிக்கப்படுகின்றன. சிரிப்பு பல மருத்துவக் குணங்களையும் கொண்டிருக்கிறது. வாய்விட்டுச் சிரிக்கும்போது உடலில் 57 தசைகள் வேலை செய்கின்றன. சாதாரண புன்முறுவலுக்கு நம் முகத்தில் 13 தசைகள் இயங்குகின்றன. புன்னகைத்த முகம் தரும் தன்னம்பிக்கை மிகவும் அதிகம். துன்பம் வரும் வேளையிலே சிரிக்க சொன்னவர் திருவள்ளுவர். சிரிப்பு  துன்பத்தை கடந்து செல்ல நமக்கு உதவுகிறது. இது ஒரு சிறந்த உளவியல் சிகிச்சையாகும்.

இதையும் படியுங்கள்:
'பீபிள் ப்ளீஸர்' யார்? அறிவீர்களா?
Smile

எபிநெஃப்ரின், நார் எபிநெஃப்ரின், கார்டிசால் போன்ற மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய ஹார்மோன்களின் சிறப்பை சிரிப்பு இயல்பிலேயே குறைக்கிறது. டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின், எண்டார்பின் ஆகிய மகிழ்ச்சி சுரப்பிகளை அதிகமாக தூண்டிவிடுகிறது. இரத்தக் குழாயின் உட்சுவரான எண்டோதீலியம் சுருங்குவதாலும், அதில் கொழுப்பு படிவதாலும்தான் உயர் ரத்த அழுத்தமும் மாரடைப்பும் ஏற்படுகிறது. வாய்விட்டு, மனம் விட்டுச் சிரித்தால் எண்டோதீலியம் விரிவடைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அதிகமாகச் சிரிப்பவர்கள் தனிமையில் வாடுபவர்கள் என்று உளவியல் சொல்கிறது. அதிகமாக நம்மைச் சிரிக்க வைப்பவர்கள் சோகத்தைத் தன்னுள் புதைத்துக்கொண்டு அதற்கு புன்னகை முலாம் பூசுபவர்கள் என்றும் சொல்லுவார்கள். சோகத்தின் உச்சகட்டத்திலும் சிரிப்பு வரும்.

எப்படிப் புன்னகை நமக்கு மிகவும் முக்கியமோ அதே அளவு முக்கியம், சில இடங்களில் புன்னகை செய்யாமல் இருப்பதுவும்தான். ஒருவர் எத்தகைய விஷயத்திற்கு சிரிக்கிறார் என்பதை கவனித்தோமானால், அவர்களது எண்ண ஓட்டமும், மனோநிலையும் நமக்கு வெகு எளிதில் புரியும். இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிரிக்கக் கூடாது. 

சிரிக்கத் தெரிந்த பெண்கள்தான் குடும்பத்தின் அழகு என்பதை நாம் இனியாவது உணரவேண்டும். அவர்கள் சிரிக்காமல் போனால், அதிக  மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகி அதனால் குடும்பங்கள் சிதையலாம். ஆண்கள் தம் வீடுகளில் பெண்கள் சிரிப்பதை கட்டுப்படுத்தக் கூடாது. 

மற்றவர்கள் சிரித்தால் மட்டுமே சிரிப்போம் என்றில்லாமல் நாமாகப் புன்னகை செய்வோம். புன்னகை என்னும் அற்புதமான பரிசை எல்லோருக்கும் அளவற்று அள்ளிக் கொடுப்போம். சிரிப்பு ஒரு தொற்று மருந்து. முடிந்தவரை அதை மற்றவர்களுக்குப் பரப்புவோம். 'கரோனா' காலத்தில் சிறைப்பட்டுபோனது நம் சிரிப்பு. அதை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சியில் நாம் இணையாலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com