'பீபிள் ப்ளீஸர்' யார்? அறிவீர்களா?

People Pleaser
People Pleaser
Published on

இந்த பதிவு, மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களைப் பற்றி அல்ல; நம்முடன் இருக்கும் நம்மில் ஒருவரை பற்றி. அடுத்தவரை மகிழ்விப்பதிலேயே சிலர் கவனம் செலுத்துவார்கள், பார்த்திருக்கிறீர்களா? அவர்களைத்தான் 'பீபிள் ப்ளீஸர்' என்கிறோம். இது அவர்களைப் பற்றியது!

அடுத்தவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டும் இவர்கள் மிகவும் இளகிய மனம் உடையவர்களாக இருப்பார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். பார்ப்பவர்களுக்கு ஏன் இப்படி சின்ன ஒரு விஷயத்திற்குக்கூட இத்தனை மிகைப்படுத்துகிறார்கள் எனத் தோன்றும். அது மிகைப்படுத்தல் இல்லை அவர்களின் இயல்பே அது தான். 

உடன் இருப்பவரின் மனநிலையைப் பொறுத்தே இவர்களின் மனநிலை இருக்கும்.

அடுத்தவர்களுக்கு இல்லை என்று இவர்களால் சொல்ல முடியாது, தங்களின் தேவையை விட அடுத்தவரின் மனநிறைவு முக்கியம்.

பொதுவாக இப்படிப்பட்டவர்கள் அவர்களின் தேவைகளை பின்னுக்குத் தள்ளிச் சுற்றி இருப்பவர்களை முதன்மைப் படுத்துவார்கள், அப்படிச் செய்யும்பொழுது அவர்களை அறியாமலேயே தங்களின் சுயத்தை இழக்கிறார்கள். 

அதே போல் இவர்கள் எதிலும் முதன்மையாக இருக்கவும், ஒரு செயலை முழுமையாக முடிக்கவும் விரும்புவர். ஏனெனில், இப்படிச் செய்தால் அவர்களைச் சுற்றி உள்ளவர்கள் அவர்களைப் பாராட்டுவார்கள் என்பதினால் தான். அவர்கள் எப்பொழுதும் பிறரின் அன்பையும், நல்மதிப்பையும், அங்கீகாரத்தையும் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காதபட்சத்தில், தங்களிடம் போதிய ஆற்றல் இல்லை, அவர்கள் எதற்கும் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்ற சுயமதிப்பீட்டு எண்ணம் மேலோங்கும்; சுயநம்பிக்கை குறையும். 

இவர்களின் இந்த நிலைக்கு அவர்கள் வளர்ந்த விதம், சூழ்நிலை, பெற்றோர்களின் கவனம் இல்லாமை போன்றவை முக்கிய காரணங்களாக அமைகின்றன. 

மேலும் இதனால் இவர்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருக்கும், சுற்றி உள்ளவர்களின் தேவைகளை உடனுக்குடன் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இவர்களின் வேலைப் பளு நீண்டுகொண்டே போகின்றது. அதனால், அவர்கள் எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் திணறுவார்கள். இதனால் அடுத்தவர்களைத் திருப்திப் படுத்தமுடியாமல் போகும்போது, தங்களால் ஒரு வேலையும் ஒழுங்காகச் செய்யமுடியவில்லை என்ற ஒரு வித மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். 

இவர்களிடம் கோவம் அதிகமாகக் காணப்படும். காரணம், அவர்களின் தாழ்வு மனப்பான்மை, அடுத்தவர்களின் அங்கீகாரம் கிடைக்காத பொழுது தங்கள் மேல் ஏற்படும் விரக்தி, தங்களின் சொல் மதிக்கப்படாமல் போவது... இது போன்ற நிறையக் காரணங்கள் இருக்கின்றன. ஒரு நிலைக்கு மேல் போகும்பொழுது அது மூர்க்கத்தனத்தில் முடியும்.

இதையும் படியுங்கள்:
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!
People Pleaser

இவர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்று பார்க்கலாம்!

முதலில் அவர்களிடத்தில் நேர்மையான, வெளிப்படையான உரையாடல் அவசியம். இது எப்பொழுதும் இருக்கவேண்டும்.

பொதுவாக அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்த நினைக்கும் இவர்கள் அவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை உண்மையாகவும், உள்ளது உள்ளதைப் போன்றும் சொல்ல மாட்டார்கள். அதனால் நாம் தான் அவர்களிடத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும் பேசி அவர்களின் எண்ணத்தை வெளிப்படையாகப் பேச உதவ வேண்டும். ஒருமுறை அவர்கள் பேசிவிட்டார்கள் என்பதால் எப்பொழுதும் அப்படியே இருப்பார்கள் என்றில்லை. அவர்கள் முழுவதுமாக வெளியே வரும் வரை அவர்களுக்கு நாம் இடமும், நேரமும் கொடுக்க வேண்டும்.

அவர்கள் இல்லை என்று சொல்ல, பழக வாய்ப்பும் அவர்கள் அப்படிச் சொல்லும்பொழுது அதனை மதிக்கவும் நாம் தயாராக இருக்கவேண்டும்.

அவர்களின் தனித்துவத்தை ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களின் தன்னம்பிக்கை உயரும். தங்கள் மேல் அவர்களுக்குச் சுயமரியாதை உருவாகும். அவர்களும் இந்த சமுதாயத்தில் முக்கியமானவர்கள் என்பதை அவர்கள் உணர வைப்பது, அவர்கள் தங்களைப் பராமரிக்க மற்றும் பாதுகாத்துக்கொள்ளக் கற்றுக்கொடுத்தல் போன்றவை அவர்களின் நலன் விரும்பிகள் என்ற வகையில் நமது கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com