

இரவு நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் கழிவறைக்குச் செல்லும் பலருக்கும் அடிமனதில் ஒரு சிறிய பயம் இருக்கும். "திடீரென டாய்லெட் கோப்பைக்குள் இருந்து ஒரு தலை எட்டிப்பார்த்தால் என்ன செய்வது?" என்ற அந்தத் திகில் கற்பனை பலருக்கும் உண்டு. சினிமாக்களிலும், இணையச் செய்திகளிலும் மட்டுமே பார்த்த இந்த விபரீதம் ஏன் நடக்கிறது?
முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பாம்புகள் மனிதர்களைத் தாக்கும் நோக்கத்தோடு கழிவறைக்குள் நுழைவதில்லை. சொல்லப்போனால், நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர் குழாய்களுக்கும், பாம்புகள் வசிக்கும் புற்றுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே இருட்டாக, ஈரம் மிகுந்ததாக, மற்றும் பாதுகாப்பாக இருப்பதாகப் பாம்புகள் கருதுகின்றன.
எனவே, இரை தேடியோ அல்லது ஓய்வெடுக்கவோ நினைக்கும் பாம்புகள், தவறுதலாகக் கழிவுநீர் குழாய்களுக்குள் நுழைகின்றன. அந்தக் குழாய்ப் பயணம் எங்கு முடியும் என்று தெரியாமல் ஊர்ந்து வரும்போது, கடைசியில் அவை வந்து சேரும் இடமாக நம் வீட்டு டாய்லெட் கோப்பைகள் அமைந்துவிடுகின்றன.
காலநிலை மாற்றம்!
பாம்புகள் ஏன் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இப்படி வருகின்றன? இதற்குப் பின்னால் வானிலையும் ஒரு காரணமாக இருக்கிறது. கோடைக்காலத்தில் வெளியே வெயில் கொளுத்தும்போது, பாம்புகள் குளிர்ச்சியைத் தேடி அலைகின்றன. அப்போது ஈரம் நிறைந்த குழாய்கள் அவற்றுக்கு 'ஏசி' அறை போலத் தெரிகின்றன.
அதேசமயம், மழைக்காலம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், அவற்றின் நிலத்தடி இருப்பிடங்களில் நீர் புகுந்துவிடுகிறது. அப்போது மூச்சுவிட இடம் தேடி, வறண்ட இடத்தை நோக்கி அவை குழாய்களின் வழியாக மேலேறி வருகின்றன. அந்தப் பயணத்தின் முடிவில் எதிர்பாராத விதமாக அவை மனிதர்களின் கழிவறைக்குள் தலைகாட்டுகின்றன.
நம் வீட்டின் கழிவுநீர் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பழைய கட்டிடங்கள் அல்லது பராமரிப்பு இல்லாத உடைந்த குழாய்கள் வழியாகப் பாம்புகள் எளிதாக உள்ளே நுழையும். குறிப்பாக, கழிவுநீர் குழாய்களில் எலிகள் நடமாட்டம் இருந்தால், அவற்றை வேட்டையாடப் பாம்புகளும் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. நம் டாய்லெட்டில் இருக்கும் வளைந்த குழாய் அமைப்பு (S-Trap/Water Seal) துர்நாற்றத்தைத் தடுக்குமே தவிர, நீரில் நீந்தத் தெரிந்த பாம்புகளை முழுமையாகத் தடுக்காது.
தற்காப்பு நடவடிக்கைகள்!
இதற்காகப் பயந்து நடுங்கத் தேவையில்லை. ஏனென்றால், இப்படி நடப்பது மிக மிக அரிதான ஒன்று. பாம்பு நம்மைப் பார்த்தால், நம்மைக் கடிப்பதை விட அங்கிருந்து தப்பித்து ஓடவே நினைக்கும். இதைத் தடுக்க, கழிவுநீர் வெளியேறும் குழாயின் முனைகளில் வலைகளைப் பொருத்துவது, செப்டிக் டேங்க் மூடிகளை இறுக்கமாக மூடுவது, மற்றும் ஒருவழி வால்வுகளைப் பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.