
பாம்பு, இந்து சமயத்தில் ஆன்பீகத்துடன் தொடர்பு கொண்ட உயிரினங்களில் மிக முக்கியமானதாக இருக்கிறது. கடவுள்கள் முதல் நாகர் உருவங்கள் வரை நம் ஆலயங்களில் பாம்புகளின் சிலைகள் இல்லாத இடமே இல்லை எனலாம்.
சிவன் கழுத்தில் பாம்பு, விஷ்ணுவிற்கு ஆதிசேஷன், விநாயகரிடம் நாகம் என பல்வேறு தெய்வ வடிவங்களுடன் பாம்புகளையும் நாம் வணங்கி வருகிறோம். பாம்பு என்றாலே படையும் நடுங்கும்தான். ஆனால் எந்த ஒரு உயிரினங்களும் மனிதர்களாகிய நாம் அதற்கு தீங்கு நினைத்தால் மட்டுமே தாக்க வரும். அது போல் தான் பாம்பும். அதை துன்பப்படுத்தாத வரை அதனால் நமக்கு ஆபத்து இல்லை. எனினும் அவை விஷம் கொண்டவை என்பதால் பாம்பு என்றாலே அனைவரும் பதறி ஓடுகிறோம்.
சமீப காலங்களில் சமையலறை அடுக்குகள் , சிங்குகள் , தலை கவசங்கள் , ஏசி பைப்புகள் என வீட்டில் பல இடங்களில் பாம்புகள் பதுங்கி இருந்ததாக செய்திகளில் காண்கிறோம். ஆன்மீக குறியீடுகளில் முக்கியமானதாக கருதப்படும் பாம்பு நமது வீட்டில் நுழைந்தால் அது ஆன்மீக ரீதியாக நன்மையா தீமையா என்பது குறித்து பல கருத்துக்கள் இங்கு உலவி வருகின்றன. அது குறித்து இங்கு காண்போம்.
வீட்டில் எதிர்பாராத நேரத்தில் நுழையும் பாம்பின் ஆன்மீக அர்த்தம் கலாச்சாரம் மற்றும் அவரவரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் பாம்பின் வகை பொறுத்து மாறுபடும். சில கலாச்சாரங்களில், பாம்பை வீட்டில் பார்ப்பது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அறிகுறியாகக் கருதப்பட்டாலும் சில கலாச்சாரங்களில், பாம்பை வீட்டில் பார்ப்பது தீய சகுனமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக உடல்நலமின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தைக் குறிப்பதாக அச்சம் எழுகிறது.
ஆயினும் பாம்புகள் தங்கள் தோலை உதிர்த்து புதுப்பிப்பது மாற்றம், புதுப்பித்தல் மற்றும் மறுபிறப்பைக் குறிக்கும் என்பதால் ஏதேனும் மாற்றங்களை அந்த வீட்டினர் சந்திக்க நேரும். குறிப்பாக தனிப்பட்ட வளர்ச்சி, சுய முன்னேற்றத்திற்கான குறியீடாக இருக்கலாம் என்கிறது ஆன்மீக கருத்து.
மேலும் வீட்டில் பாம்பு வருவதற்கு குலதெய்வ குற்றம் காரணமாக இருக்கலாம் எனப்படுகிறது. கடவுள் வழிபாடுகளில் வெகு முக்கியமானதாக கருதப்படும் குலதெய்வத்தை மறப்பது செய்ய வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றாமல் மறப்பது போன்ற காரணங்களால் அதனை நினைவுபடுத்தும் வண்ணம் நாக ரூபத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நமது கனவில் பாம்பு வருவதும் இந்த காரணங்களினால் தான் எனவும் சொல்லப்படுகிறது.
ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் குண்டலினி எனப்படும் ஆற்றல் யோகா போன்ற சில ஆன்மீக மரபுகளில் வழிவழியாக பின்பற்ற படுகிறது. பாம்புகள் குண்டலினி சக்தியுடன் தொடர்புடையதாக சிறப்பு பெறுகிறது என்பதால் அதில் ஆர்வமுள்ளவர்கள் இதன் குறியீடாகவும் எடுத்துக் கொள்கின்றனர்.
ஜாதக ரீதியாக ஒருவர் பிறக்கும் நேரத்தில் ராகு, கேது உச்சமோ, நீச்சமோ அடைந்திருந்தால் அல்லது சரியான இடத்தில் இல்லாமல் இருந்தால் வசிக்கும் வீட்டில் அதன் தொடர்பான பாம்பு காரணமின்றி வரும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.
தீய குணங்கள் இருப்பவர்கள் வீட்டில் விஷம் கொண்ட தீய குணத்தின் அடையாளமான பாம்புகள் வரலாம். முன்னோர்கள் சாந்தியை முறைப்படி செய்யாமல் இருப்பதும், அவர்கள் சொத்துக்குட்பட்ட இடங்களில் உள்ள நாகப்புற்றுகளை அகற்றுவதும் பாம்புகள் வீட்டில் நுழைந்து சந்ததியினர் கண்களில் படுகிறது என்ற கருத்தும் உண்டு.
எது எப்படி இருப்பினும் விஷமுள்ள பாம்புகள் வீட்டில் நுழைந்தால் எச்சரிக்கையாக அதைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் உண்மை.