
நாம் வசிக்கும் வீடு எப்பொழுதுமே அழகாக, நேர்த்தியாக, அவையவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சமையல் வேலை உள்ளிட்ட மற்ற வேலைகளை சீக்கிரமாக முடித்து விடலாம். மற்ற விஷயங்களுக்கும் நீண்ட நேரம் கிடைக்கும். அதற்கான எளிய குறிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
வரவேற்பு அறையில் எக்கச்சக்கமான ஃபர்னிச்சர்களை அடுக்கி வைக்காமல் சோஃபா செட் உடன் நிறுத்திக்கொள்வது அந்த அறைக்கு தனி அழகைத் தரும்.
சில நேரங்களில் வீட்டுச் சுவர்களில் ஆணி அடித்து எடுத்து விட்டால் சுவர்களில் ஆங்காங்கே சிறிய ஓட்டைகள் தெரியும். இதுபோல் உள்ள சிறிய ஓட்டைகளை பற்பசையை கொண்டு அடைத்து, நன்கு காய்ந்த பிறகு சுவற்றின் நிறத்தையே அதன் மீது அடித்து விட்டால் ஓட்டைகள் தேடினாலும் தெரியாது.
கதவு எண்ணெய் பசை இல்லாமல் சத்தம் போட்டால் அந்த இடத்தில் பென்சிலால் நன்கு தேய்த்து விட்டால் சத்தம் வராது. பிறகு, ஆற அமர எண்ணெய் போட்டு சரி செய்து கொள்ளலாம்.
வீட்டிற்கு வெள்ளை அடிக்கும்போது கதவுகளில் உள்ள கைப்பிடிகளில் ஒரு பிளாஸ்டிக் உறையை பொருத்தி கட்டி வைத்து விட்டால் வெள்ளை அடிக்கும்போது பெயிண்ட் அவற்றின் மேல் விழுந்து அழுக்காவதைத் தடுக்கலாம்.
வீட்டு சாவிகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். சில சமயங்களில் அதைத் தேடிப் பிடித்து திறப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அதற்கு அந்தந்த பூட்டுக்கான பூட்டுக்கும் அதன் சாவிக்கும் ஒரே நிற நெயில் பாலிஷால் ஒரு அடையாள குறியீட்டை போட்டு வைத்தால், அந்தந்த பூட்டுக்கு உரிய சாவிகளை சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். குழப்பம் வராது.
வாஷ்பேஷன் அருகில் இருக்கும் சுவரில் கையை வைப்பதால் அழுக்காகிவிடும். அதுபோன்ற இடங்களில் அழகான தேவையான அளவு உள்ள ஸ்டிக்கரை ஒட்டி விட்டால், பார்க்க அழகாகவும் இருக்கும். கறையும் படாது. சில நாட்கள் கழித்து கறை பட்டவுடன் புதிதாக வேறொன்றை ஒட்டி விடவும்.
டேபிள்களில் உள்ள டிராயரை திறக்கும்பொழுது சில நேரம் கடினமாக இருக்கும். அதற்கு சிறிது சோப்பு அல்லது மெழுகை தேய்த்து விட்டால் சுலபமாக திறந்து மூடலாம்.
மரச் சாமான்கள் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க மண்ணெண்ணெயுடன் நல்லெண்ணெய் கலந்து அதில் துணியை நனைத்து துடைத்தால் பளிச்சென்று இருப்பதுடன் பூச்சி, வண்டுகள் அடைத்து உளுத்துப் போய் மாவாகக் கொட்டுவதும் நின்று விடும்.
புக் ஷெல்ப் மற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அவர்களின் புத்தகங்களை ஷெல்ப்பில் அழகாக அடுக்கி வைத்திருப்பது எடுக்க, வைக்க உதவியாக இருப்பதுடன், தேட வேண்டிய நேரம் மிச்சமாகும். பார்க்கவும் அழகாக இருக்கும். மிளகு, உப்பு, கற்பூரத்தை துணியில் கட்டிப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. ஜீரோ வால்ட் பல்பை எரிய விட்டால் கரப்பான், எலி தொல்லை இருக்காது. அந்துருண்டையை போட்டு வைத்தாலும் புத்தகங்கள் வாசனையுடன் இருக்கும்.
பீரோவின் தட்டுகளில் பேப்பர் போடும்போது அதன் ஓரங்களை டேப்பினால் ஒட்டி விட வேண்டும். அதேபோல் பிளவர் வாஸ் வைக்கும் ஸ்டூலின் மேல் டபுள் செல்லோ டேப்பினால் பிளவர் வாஸை ஒட்டிவிட்டால் துடைக்கும்போது இழுத்தாலும், காற்றிலும் பிளவர் வாஸ் நகராமல் இருக்கும்.
பாத்ரூம் மற்றும் வேறு எங்காவது துர்வாடை வந்தால் காபி பொடியை ஒரு துணியில் கட்டி அந்த ரூம்களில் முடிந்துவிட்டால் துர்வாடையை அது போக்கிவிடும்.
வாஷ்பேஷனில் மஞ்சள் கறை படிந்திருந்தால் வினிகர் தெளித்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் கறை போய்விடும். பச்சை கற்பூரத்தை தூளாக்கி தூவி விட்டால் சுகந்த மணம் வீசும்.
சுண்ணாம்பு மற்றும் அழுக்கு படிந்த பிளாஸ்டிக் பக்கெட்டுகளை பாத்ரூம் கழுவும் ஆசிட் ஊற்றி ஈர துணியை ஃபிரஷ்ஷில் சுற்றி துடைத்து விட்டால் பளிச்சென்று இருக்கும். ஆஸிட் கையில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் இருக்கும் பெரிய பெரிய கண்ணாடிகளில் திருநீறைப் போட்டு துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும். பயன்படுத்திய டீ தூளால் கண்ணாடியைத் துடைத்தாலும் பளிச்சென்று இருக்கும். டால்கம்பவுடர் போட்டு மெல்லிய துணிகளால் துடைத்தாலும் சுத்தமாகிவிடும்.