
ஒருவர் பேசும் பேச்சை பல வகையாக இடத்திற்கு ஏற்றார் போலவும், பேசும் பேச்சை பொருத்தும் அழகாக வரையறுக்கலாம். அதுபோன்ற விதவிதமான பேச்சுக்களை இந்தப் பதிவில் காணலாம்.
1. விதண்டாவாதம்: விதண்டாவாதம் என்பது பிறர் கூறுவதை மறுத்து, நியாயம் இல்லாமல் வீணாக வாதிடும் ஒரு மனப்பான்மையாகும். பொதுவாக, ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், எந்த ஒரு காரணமும் இல்லாமல் அல்லது தவறான காரணங்களைக் கூறி மறுக்கும் செயலாகும். ஒருவர் தன்னுடைய பேச்சில் அல்லது கருத்தில் நியாயம் இல்லை என்று தெரிந்தும் வீணாக செய்யும் வாதம்தான் விதண்டாவாதம்.
2. ஏட்டிக்குப் போட்டி: ஒருவரிடம் ஏதாவது ஒன்றை சொல்லி அதை அவர் சரி என்று ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு பதிலாக வேறு ஏதாவது ஒன்றை அந்த நபர் சொல்லும்பொழுது அல்லது செய்யும்பொழுது 'ஏட்டிக்குப் போட்டி' என்று கூறுவோம். ஒருவன் ஒன்று செய்தால் நான் அதற்கு பதிலாக இதைச் செய்வேன் என்று முரண்டு பிடிக்கும் போக்குதான் ஏட்டிக்குப் போட்டி. சில நேரங்களில் தன்னை உயர்த்தி காட்டிக் கொள்வதற்காக, தன்னை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு வீம்பாக போட்டி போடுவதை குறிக்கும். அதாவது, தன்னை முன்னிறுத்தும் முயற்சியாகும்.
3. குதர்க்கப் பேச்சு: ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ, இல்லாத அர்த்தம் கொடுத்தோ, நியாயமற்ற முறையில் செய்யும் வாதத்தை 'குதர்க்கம்' என்று சொல்லலாம். குதர்க்கப் பேச்சு என்பது நேர்மையற்ற, உண்மைக்கு புறம்பான பேச்சைக் குறிக்கும். இது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்காது. தவறான நோக்கத்துடனும், பழிவாங்கும் எண்ணத்துடனும், வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்கும் நோக்கத்துடனும் பேசப்படும் பேச்சு இது.
4. வெட்டிப் பேச்சு: வெட்டிப் பேச்சு என்பது பயனற்ற, அர்த்தமற்ற பேச்சு பேசுவதாகும். அதாவது, தேவையில்லாத பேச்சு என்று பொருள்படும். இவை நம்முடைய நேரத்தை வீணடிக்கும் பேச்சு எனக் கொள்ளலாம். இதனால் எந்த வகையான பயனும் இராது. பேச்சு மட்டுமின்றி, செயலற்ற, பயனற்ற நிலைக்கும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பேச்சு எதற்கும் உதவாது. விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லாதது.
5. வீண் பேச்சு: வீண் பேச்சு என்பதை தேவையற்ற, அர்த்தமற்ற, ஒரு பயனும் இல்லாத பேச்சு என்று பொருள் கொள்ளலாம். வீணாக வதந்திகளைப் பரப்புவது, மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுவது, பொழுது போக்கிற்காக எந்த நோக்கமும் இல்லாமல் வெறுமனே பேசுவது என வீண் பேச்சு பேசுவதால் நேர விரயமும், நம்பிக்கை இழப்பும் ஏற்படும்.
6. வெறும் பேச்சு: வெறும் பேச்சு என்பது எந்த அவசியமும் தேவைப்படாமல் பேசும் பேச்சாகும். இந்த வெறும் பேச்சால் ஒரு பயனும் இல்லை. இதனை வெற்றுப் பேச்சு என்றும் கூறலாம். வாய்ச்சவடால் என்றும் கூறலாம். வாயால் அதைச் செய்து விடுவேன் இதைச் செய்து விடுவேன் என்று வாய்ச்சவடாலாக பேசுவது.
7. வெறுக்கத்தக்க பேச்சு: வெறுக்கத்தக்க பேச்சு என்பது ஒரு குழு அல்லது அமைப்பிற்கு எதிராக தவறான அல்லது அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது. வெறுக்கத்தக்க பேச்சு ஒரு நபரை தாக்கவும், காயப்படுத்தவும், அச்சுறுத்தவும், இழிவுபடுத்தவும் பயன்படுத்தப்படும். இந்த வெறுக்கத்தக்க பேச்சால் அமைதி இழந்து போவோம்.
8. வறட்டுத்தனமான பேச்சு: எந்தவித சுவாரசியமும் இல்லாமல், எந்த விதமான நோக்கமும் இல்லாமல் வறட்டுத்தனமாக பேசுவது. ஒருவரது பேச்சு அல்லது செயல்களில் வெளிப்படும் உணர்ச்சியற்ற, செயற்கை தன்மை மிகுந்த பேச்சைக் குறிக்கும்.
9. திண்ணைப் பேச்சு: வீட்டில் உள்ள அனைவரும் ரிலாக்ஸ் செய்து கொள்ளும் இடமான திண்ணையில் அமர்ந்து பேசும் பேச்சு இது. இங்கு ஊருக்குள் யாரேனும் புதியவர்கள் வந்தாலோ, ஊருக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலிலோ பேசுகின்ற பேச்சு திண்ணைப் பேச்சு. மாலை அல்லது இரவில் வீட்டு வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் திண்ணையில் அமர்ந்து நிதானமாக ஊர் கதை பேசும் பழக்கம்தான் திண்ணைப் பேச்சு.
10. அர்த்தமற்ற பேச்சு: நாம் பேசும் பேச்சு அர்த்தமும், மதிப்பும் மிகுந்ததாக இருக்க வேண்டும். அர்த்தமற்ற, அதாவது பொருளற்ற பேச்சு பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அர்த்தமற்ற பேச்சுகளை பேசுவதற்கு பதில் மௌனமாக இருப்பதே மேல். அர்த்தமற்ற பேச்சு என்பது தெளிவில்லாத, குழப்பமான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவது. இது கேட்பவரை எரிச்சல் அடையச் செய்யும். தேவையில்லாமல் நிறைய பேசுவதும் அர்த்தமற்ற பேச்சு எனப்படும். இதனை பேசுவதாலும், பிறர் இதை கேட்பதாலும் ஒரு பயனும் இல்லை. எனவே சுருக்கமாகவும், தெளிவாகவும் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.