
காய்கறிகளை ஒருபோதும் அதிகமான அளவு எண்ணெய் சேர்த்து வறுக்கக் கூடாது. காய்கறிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் சூடு அவற்றில் இருக்கும் வைட்டமின் தாது சத்துக்களை போக்கிவிடும்.
டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்தால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.
பீர்க்கங்காயை மெலிதாக அரிந்து பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் நிமிடத்தில் காலியாகி விடும். வெங்காயத்தினை உபயோகிக்காதவர்கள் இப்படிச் செய்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையை பிழிந்து சாறு எடுத்து தேன் கலந்து தினமும் பருகினால் அஜீரணம் ஏற்படாது. இது மூலநோய் கொண்டவர்களுக்கும் ஏற்றது. இதனால் மலச்சிக்கல் நீங்கும். உணவின் ருசியும் அதிகரிக்கும்.
கீரை மசியல் செய்யும்போது அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்தால் தனிச்சுவையாக இருக்கும்.
சிப்ஸ் செய்யும்போது உருளைக்கிழங்கை சீவி அதை கடலை மாவு கலந்த தண்ணீரில் நனைத்து உலர வைத்து பின் பொரித்தால் நன்றாக இருக்கும்.
தேங்காய் பர்ஃபி செய்யும்போது சிறிது கடலை மாவை சேர்த்து செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
பிரியாணி செய்யும்போது தேங்காய் பாலுக்கு பதிலாக கட்டித் தயிர் விட்டு செய்தால் பிரியாணி உதிரியாக இருக்கும்.
கீரையுடன் பயத்தம் பருப்பு கூட்டு செய்யும்போது ஒரு கப் பாலை அதில் விட்டால் மணமாக இருக்கும்.
பூண்டை நசுக்கிப் போட்டு எள்ளடை மாவில் கலந்து எள்ளடை செய்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
குழம்புக்கு புளி கரைத்தால் கெட்டியாக கரைத்து விட வேண்டும். கொதிநிலை வந்ததும் கேஸ் அடுப்பை சிறியதாக எரிய விடவும். மூடியைப் போட்டு மூடி கொதிக்க வைத்தால் சீக்கிரமாக கொதி வந்துவிடும். இதனால் குழம்பும் ருசியாக இருக்கும்.
தொற்று நோய்களை எதிர்க்கக்கூடிய வைட்டமின் ஏ சத்து முள்ளங்கி கீரையில் அதிகமாக இருக்கிறது. ஆதலால் இந்தக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவது அவசியம்.
பெருஞ்சீரகத்தை சமையலில் சேர்த்தால் உணவில் சுவை அதிகரிக்கும். சாப்பிட்ட பின்பு இதனை வாயில் போட்டு மென்று சுவைத்தால் தனி மணமும், ருசியும் கிடைக்கும். இதனை டீயில் சேர்த்து பருகினால் அதிக சுவை கிடைக்கும். வெதுவெதுப்பான பாலில் பெருஞ்சீரக பொடி கலந்து பருகினால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பாக்கெட்டில் கிடைக்கும் காபி தூளை விட, காபி கொட்டையை வறுத்து அரைத்துத் தயாரிக்கப்படும் காபி சுவை மிகுந்தது.